எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தமிழ் 2ம் தாள் ஈசி :மாணவ, மாணவியர் உற்சாகம்

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2018 00:46


நாகர்கோவில்:

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தமிழ் இரண்டாம் தாள் ஈசியாக இருந்ததாக  தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் உற்சாகமாக தெரிவித்தனர்.

தமிழகத்தில் கடந்த 16ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு  துவங்கியது. முதல் நாள் தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. மாணவ, மாணவிகள் உற்சாகமாக தேர்வு எழுத சென்றனர். ஆனால் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த பிறகு முதலில் காணப்பட்ட உற்சாகம் இல்லாமல் இருந்தது. தமிழ் முதல் தாள் தேர்வு கடினம் என்ற வார்த்தை பல மாணவ, மாணவிகள் மத்தியில் இருந்து வெளிபட்டது. இதனால் மாணவ, மாணவிகள் தாங்கள் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியாதோ என்ற நிலை உருவாகியது. இந்நிலையில் தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மாணவர்களின் நலன் கருதி பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்திருந்தார். நேற்று (21ம் தேதி) தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. குமரி மாவட்டம்  நாகர்கோவில், தக்கலை, குழித்துறை ஆகிய 3 கல்வி மாவட்டங்களை கொண்டுள்ளது. மாவட்டத்தில் தேர்வு எழுத மொத்தம் 24,393 மாணவ, மாணவிகள் இருந்தனர். நேற்று நடந்த தமிழ் இரண்டாம் தாள் தேர்வை மாவட்டம் முழுவதும் இருந்து 24,184 மாணவ, மாணவிகள் எழுதினர். 209 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை. தமிழ் இரண்டாம் தாள் தேர்வு மாணவ, மாணவிகள் மட்டும் அல்லாமல் பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. தமிழ் முதல் தாள் தேர்வில் கோட்டைவிட்ட  மார்க்குகளை மாணவ, மாணவிகள் இரண்டாம் தாள் தேர்வில் ஈடுசெய்ய வேண்டும்  என்ற நினைப்பிலேயே இருந்து வந்தனர். கல்வித்துறை சார்பில் ஸ்பெஷல் டீம்கள் போட்டு தேர்வை கண்காணித்து வந்தனர்.

தமிழ் 2ம் தாள் ஈசியாக...

மாணவி சிவரஞ்சனி தெரிவிக்கையில், தமிழ் முதல் தாளை போல் கடுமையான கேள்விகள் இல்லாமல் 2ம் தாள் ஈசியாக இருந்தது. கேட்கபட்ட கேள்விகள் மிகவும் சுலபமான கேள்வியாகவே இருந்தது. எனவே அனைத்து மாணவ, மாணவிகளும் எளிதில் பதில் எழுத கூடிய வகையில் அமைந்தது.

மாணவி சுபாஷினி தெரிவிக்கையில், தமிழ் 2ம் தாள் தேர்வு மிகவும் ஈசியாகவே இருந்தது. முதல் தாளில் கேட்கபட்ட கடினமான கேள்விகளால் சோர்வு அடைந்து இருந்த எங்களுக்கு ஈசியாக கேட்கபட்ட கேள்விகளால் முதல் தாளில் கோட்டைவிட்ட மார்க்கை 2ம் தாள் மூலம் ஈடுசெய்து வெற்றி பெற கூடிய வகையில் இருந்தது.