மீன பரணி தூக்க திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2018 00:44


கொல்லங்கோடு:

கொல்லங்கோடு பத்தரகாளி அம்மன் கோயில்  தூக்க முடிப்புரையில்  தூக்க திருவிழா துவங்கி தொடர்ந்து நடக்கிறது.

கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் மீன பரணி திருவிழா கடந்த 12 ம் தேதி கோயில் தந்திரி பிரம்ம ஸ்ரீ கொட்டாரக்கரை நீர்மனை ஈஸ்வரன் போற்றி தலைமையில் திருக்கொடி ஏற்றபட்டு திருவிழா துவங்கியது.  தமிழக ஆளுநர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடந்தது. குழந்தைகளின் தூக்க நேர்ச்சை திருவிழா நேற்று காலை 6 மணிக்கு துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. தூக்க நேர்ச்சை துவங்குவதற்கு முன்பாக தூக்ககாரர்களின் முட்டுகுத்தி நமஸ்காரம் நடந்தது. தொடர்ந்து 1 முதல் 25 வரை உள்ள தூக்ககாரர்கள் கச்சை கட்டி நிறுத்தி வைக்கபட்டிருந்தனர்.  காலை 6 மணிக்கு அம்மன் தூக்கம் நடத்தபட்டு தொடர்ந்து 1546 குழந்தைகளின் நேர்ச்சை தூக்கம் நடத்தபட்டது. மேலும் 36 ஸபேர் தூக்கம் மற்றும் இரண்டு அம்மன் தூக்கம் என மொத்தம் 1584 தூக்கங்கள் நடத்தபட்டது. தூக்ககாரர்கள் நேர்ச்சை குழந்தைகளை தூக்க வில்லில் தூக்கி கோயிலை ஒருமுறை சுற்றி வந்து வேண்டுதலை முடிக்கின்றனர். தூக்க வில்லில் தூங்கும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு கவசங்கள் அணியபட்டு இருந்தது. தூக்க வில் சுற்றி வரும் பாதை காங்கிரட் தளம் அமைக்கபட்டு இருந்தது.  தூக்க திருவிழாவை காண தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.   குளச்ல்சல் ஏ.எஸ்.பி சாய் சரண் தேஜஸ்வி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  கொல்லங்கோடு தீயணைப்பு நிலைய வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  பக்தர்களுக்கு குடிக்க சுத்தமான குடிநீர் மற்றும் அவசர உதவி மருத்துவம் வழங்கவும் ஏற்பாடுகள்    செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை கோயில் தலைவர் சதாசிவன் நாயர், செயலாளர் மோகன் குமார், பொருளாளர் சூரிய தேவன் தம்பி, துணை தலைவர் பிரேம்குமார், இணை செயலாளர் பிஜு குமார், பிரதிநிதி தலைவர் மணிகண்டன் நாயர், பிரதிநிதி துணை தலைவர் விஜயகுமாரன் தம்பி உள்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

கோயிலின் சிறப்பம்சங்கள் 

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனுக்கு இரண்டு கோயில்கள் உள்ளது

 அதேபோல் இங்கு இரண்டு தேவிகள் உள்ளது ஒன்று பத்ரா என்ற பெயரிலும் மற்றொன்று ருத்ரா என்ற பெயரிலும் பக்தர்கள் அழைத்து வழிபடுகின்றனர். இரண்டு கோயில்கள் மற்றும் இரண்டு தேவிகள் இருந்தாலும் இருவரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது ஒரே இடத்தில் இருந்து தான் இதனால் வெங்கஞ்சி கோயிலுக்கு திருவிழா கோயில் என்றும் வட்டவிளை கோயிலுக்கு மூலக்கோயில் என்றும் அழைக்கின்றனர். திருவிழா கோயிலில் திருவிழா நாட்களான பத்து நாட்கள் தங்கி இருந்து பகதர்களின் குறைகளை நிவர்த்தி செய்கின்றனர். இங்கு இரண்டு தேவிகள் உள்ளது போல் தூக்க தேரிலும் இரண்டு தூக்க வில்கள் பொருத்தபட்டிருக்கும். இதில் இரண்டு வில்லிலும் இரண்டிரண்டு தூக்க காரர்கள் என நான்கு தூக்க காரர்கள் தூங்கி குழந்தைகளுக்காக வேண்டபட்டிருக்கும் வேண்டுதலை கோயிலை சுற்றி ஒருமுறை வலம் வைத்து நேர்ச்சையை முடித்து வைக்கின்றனர். திருமணமாகி பல வருடங்களாக குழந்தை பேறு இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டியும் பிறக்கும் குழந்தைகளின் நீண்ட ஆயுளுடன் நோய் நொடிகள் இல்லாமல் வாழ வேண்டி குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை வேண்டபடுகிறது. தூக்க வில்லில் பிறந்து ஒரு மாதம் முதல் ஒரு வயது வரை உள்ள குழந்தைகள் தூக்க நேர்ச்சை நடத்த அனுமதிக்கின்றனர்.