தலைமை நீதிபதி பற்றி அவதுாறு கருத்து: ஐகோர்ட் போலீஸ் வழக்குப் பதிவு

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2018 08:31

சென்னை:

தலைமை நீதிபதி பற்றி அவதுாரு கருத்து பரப்பிய நபர்கள் மீது சென்னை ஐகோர்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி குறித்து வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக தவறான செய்திகள் பரவின. இது குறித்து சென்னை ஐகோர்ட் போலீஸ் நிலையத்தில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் நேற்று முன்தினம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி குறித்து, சமூக வலைதளமான பேஸ்புக்கில் 'நான் தனி ஒருவன்' என்ற பக்கத்தில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என கூறப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து சொலிசிட்டர் ஜெனரலின் புகாரின் பேரில், அடையாளத்தை மறைத்து அவதூறு பரப்புதல், பெண்ணின் கண்ணியத்தை குறைத்தல், பெண்கள் வன்கொடுமை சட்டம், இணைய தளத்தில் அவதூறு பரப்பியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத  நபர்கள் மீது சென்னை ஐகோர்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அது குறித்து போலீசார் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.