ரூ. 40 கோடி நில மோசடி வழக்கில் கைதான ஹெலிகாப்டர் தொழிலதிபர் மீண்டும் சிறையில் அடைப்பு

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2018 08:30

சென்னை:

ரூ. 40 கோடி நில மோசடி வழக்கில் கைதான ஹெலிகாப்டர் தொழிலதிபர் 2 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து நேற்று மீண்டும் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரது வங்கிக் கணக்கு, பாஸ்போர்ட் ஆகியவை முடக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடரமணன். இவர் காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நிலம் வாங்கி தருவதாக பலரிடம் ரூ.40 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடரமணின்  கூட்டாளிகளான முத்து நாராயணன், கமலேஷ் சேத், விஜயகுமார் மற்றும் கோபிநாத் ஆகிய 4 பேரை கடந்த வாரம் கைது செய்தனர். ஆனால், வெங்கடரமணன் தொடர்ந்து 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். 

இந்நிலையில், அவர் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கி அதன் மூலம் மும்பை, கோவா, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் சுற்றி வருவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் கடந்த 31ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் இருந்த வெங்கடரமணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஹெலிகாப்டர் மற்றும் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மேலும், வெங்கடரமணனிடம் விசாரணை நடத்திய போது வெளிநாடுகளில் இருப்பவர்களை குறி வைத்து நிலம் வாங்கி தருவதாக கூறி பல கோடி மோசடி செய்தது தெரியவந்தது. பின்னர் கோர்ட் உத்தரவின் பேரில் அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் அவரிடம் விசாரணை நடத்தினால், இன்னும் பல தகவல்கள் கிடைக்கும் என்பதால் மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் 5 நாள் போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, வெங்கடரமணன் பல்வேறு மோசடி வழக்குகளில் ஈடுபட்டு இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, வெங்கட ரமணனை 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மீது 3 புகார்கள் தனித்தனியாக கொடுக்கப்பட்டு தனித்தனியாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வெங்கடரமணன், சிங்கப்பூர், லண்டன், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் கட்டுமான நிறுவனங்களை நடத்தி வருகிறார். ரூ. 40 கோடி மோசடி பணத்தை இந்நிறுவனத்தில் வெங்கடரமணன் முதலீடு செய்திருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அந்த அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவருடைய வங்கி கணக்குகள், பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதாகவும், சொத்துக்களை முடக்க வருவாய்த்துறையினரிடம் பரிந்துரை செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்றோடு அவரது 2 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து போலீசார் வெங்கடரமணனை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.