பாலிடெக்னிக் விரிவுரையாளர் முறைகேடு:டேட்டா என்ட்ரி ஆபரேட்டருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2018 08:28

சென்னை:

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட டேட்டா என்ட்ரிஊழியருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சென்னை எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் 1058 விரிவுரையாளர்கள் பணியிடங்கள் காலியாக இருந்தன. இப்பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) எழுத்துத் தேர்வை நடத்தியது. தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் மாதம் 7ம் தேதியன்று வெளியானது. தேர்வு முடிவில் குளறுபடி இருப்பதாக தேர்வர்களிடம் இருந்து தேர்வு வாரியத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து தேர்வு முடிவுகள் திரும்பப் பெறப்பட்டன. பின்னர் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள் நகல்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் கடந்த 11-ந்தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் எழுத்துத் தேர்வு முடிவிலும், விடைத்தாள் நகலிலும் மதிப்பெண் வித்தியாசம் காணப்பட்டது. இதன் மூலம் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் உமா சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார்.

 அந்த புகார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்’ போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.இதில் டிஆர்பி தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானது. இதனையடுத்து குறுக்கு வழியை கையாண்டதேர்வர்கள், உடந்தையாக இருந்த அதிகாரிகள், மதிப்பெண் பட்டியலை இணையதளத்தில் பதிவிடும் போது திருத்திய

டில்லியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் என முதற்கட்டமாக 156 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார்வழக்குப் பதிவு செய்தனர். அவர்கள் மீது மோசடி, நம்பிக்கை மோசடி, ஆவணங்களை திருத்துதல் ஆகிய 3பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த மாதம் 28ம் தேதியன்று டிஆர்பி முறைகேட்டுக்கு

தரகராக செயல்பட்ட கால்டாக்சி டிரைவர் கணேசன் என்பவரை சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த டேட்டா எண்டரி ஊழியர் ஷேக் தாவூத் கடந்த 6-ம்தேதி பொன்னேரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் போலீஸ் காவலில் எடுப்பதற்கான மனுவை எழும்பூர் பெருநகர நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவானது நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கயல்விழி, 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தவிட்டார். பொங்கல் விடுமுறை இருப்பதால், வரும் ஜன.17ம் தேதி அன்று தாவூத்தை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தலாம் என உத்தரவிட்டுள்ளார்.

இந்த முறைகேடு வழக்கில் பல்வேறு கோணங்களில் தாவூத்திடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மின்வாரிய அதிகாரி சுப்ரமணியன் எங்கு பதுங்கியுள்ளார் என்ற விவரங்கள் தெரியவில்லை. அது தொடர்பாகவும், தாவூத்திடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.