மூதாட்டியை வெட்டி நகை கொள்ளையடித்த வழக்கில் பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2018 08:11

திருநெல்வேலி:

பாளை.,யில் மூதாட்டியை கட்டிப்போட்டு அரிவாளால் வெட்டி 6 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் பெண்ணுக்கு 7 ஆண்டு சிறைதண்டனை விதித்து நெல்லைகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

பாளை.,ரகுமத்நகர் 40 அடி ரோட்டை சேர்ந்தவர் ரஷீதா பேகம் (77). இவரது மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ம் தேதி ரஷீதா பேகம் வீட்டில் இருந்த போது, அவரது வீட்டில் வேலைபார்த்த பெண் ஒருவர் அவரை கட்டிப்போட்டு அரிவாளால் வெட்டி 6பவுன் நகை கொள்ளையடித்து சென்றார். இதுகுறித்து அவர் பாளை.,போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், தென்காசி நன்னகரம் இந்திரா நகரை சேர்ந்த பவுசியா (64) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நெல்லை முதலாவது உதவி அமர்வு கோர்ட்டில் நடந்தது. நீதிபதி ஹேமானந்த் குமார் வழக்கை விசாரித்தார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பவுசியாவுக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும், 500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு வக்கீல் ரவி ஆறுமுகம் ஆஜரானார்.