பச்சிழம் குழந்தை கொலை வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில், ரூ., 20 ஆயிரம் அபராதம்

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2018 07:53

கொல்லங்கோடு:

கொல்லங்கோடு அருகே இடப்பிரச்சனை சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில் பச்சிழம் குழந்தையைக் தரையில் அடித்து கொன்ற வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

கொல்லங்கோடு அருகே உள்ள கல்லடி தோப்பு பகுதியை  சேர்ந்த  நாகேந்திரன் மனைவி சரஸ்வதி (56). இவருக்கும் எதிர் வீட்டில் வசிக்கும்  கபேரியல் மகன் ஜாண்பிரிட்டோ (35) என்பவருக்கம் முன்விரோதம் இருந்து வந்தது.  2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி    ஜாண்பிரிட்டோ   சரஸ்வதியை பார்த்து தகாதவார்த்தைகள் பேசி வீட்டில் அத்துமீறி சரஸ்வதியை தள்ளி தோளில் வைத்திருந்த அர்ஷா என்ற 50 நாட்கள் ஆன பெண் குழந்தையை காலை பிடித்து இழுத்து தரையில் அடித்து கொன்றதாக கொல்லங்கோடு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.  இது சம்பந்தமான  வழக்கு நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த மகிளா கோர்ட் நீதிபதி ஜாண் ஆர்.டி சந்தோஷம் குற்றவாளி ஜாண் பிரிட்டோவுக்கு அத்துமீறி வீட்டில் நுழைந்ததற்காக 5 ஆண்டுகள்  கடுங்காவல் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும். குழந்தையை கொன்றதற்காக 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிப்பதுடன் அபராதம் கட்டதவறினால் மேலும் ஆறு மாதம் தண்டனையும் வழங்கி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கில் மீனாட்சி வாதாடினார்.