முதல்வர் பாக்கெட்டில் பிரதமர் மோடி படம் : உசிலம்பட்டி பழவியாபாரியை கைது செய்தது தனிப்படை

பதிவு செய்த நாள் : 23 டிசம்பர் 2017 07:30

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில்  பிரதமர் மோடியை வரவேற்ற தமிழக முதல்வர் பழனிசாமியின் சட்டை பாக்கெட்டில் பிரதமர் மோடியின் படம் இருப்பது போன்ற போட்டோ தொடர்பாக  உசிலம்பட்டி வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை ஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவும் கடந்த 19ம் தேதி பிரதமர் நரேந்திமோடி கன்னியாகுமரி வந்தார். பிரதமரை தமிழக கவர்னர் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் வரவேற்றனர். பின்னர் கன்னியாகுமரி அரசுவிருந்தினர் மாளிகையில் நடந்த கூட்டத்திற்கு பின்னர் மாலையில் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிசென்றடைந்தார். கன்னியாகுமரி வந்த பிரதமரை , தமிழக முதல்வர் வரவேற்றபோது அவரின் சட்டை பாக்கெட்டில் பிரதமர் மோடியின் படம் இருப்பதுபோன்ற படம் கடந்த சிலநாட்களாக வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் வெளிவந்தது. அவ்வாறு வந்த படத்தை பலர் ஷேர் செய்ததுடன் குரூப்பில் வேகமாக பரவியது. இந்நிலையில் முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாக கன்னியாகுமரி மாவட்ட அதிமுக வக்கீல் பிரிவு இணைசெயலாளர் வக்கீல் கனகராஜ் கன்னியாகுமரி போலீசில் புகார்செய்தார். இந்த புகாரின் பேரில் தனிப்படைபோலீசார், சைபர்கிரைம் போலீசாரின் உதவியை நாடினர். சைபர்கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த எம் பாரப்பட்டி கிராமத்தை சேர்ந்த பகவத்சிங் மகன் பழவியாபாரி அலெக்ஸ் பாண்டி (28) என்பது தெரியவந்தது. இதனையடுத்து உசிலம்பட்டிக்கு சென்ற  தனிப்படைபோலீசார் பழவியாபாரி அலெக்ஸ் பாண்டியை கைது செய்து கன்னியாகுமரி போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட வாலிபர் அதிமுக (தினகரன் அணி உறுப்பினர்) என்பது விசாரணையில் தெரிய வந்தது.