பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்கள் விரட்டியடிப்பு: மார்த்தாண்டம் அருகே பரபரப்பு

பதிவு செய்த நாள் : 13 செப்டம்பர் 2017 03:59

மார்த்தாண்டம்,

களியக்காவிளை அருகே மேக்கோடு அரசு உயர்நிலை பள்ளியில் காலாண்டு தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவ, மாணவிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட கும்பல் துரத்தி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பள்ளிகளில் தற்போது காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கும் வரும் மாணவ, மாணவிகளை ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள கும்பல் துரத்தி அடிக்கும் சம்பவங்கள் மார்த்தாண்டம், களியக்காவிளை, அருமனை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரங்கேறி வருகிறது.

கடந்த திங்களன்று காலாண்டு தேர்வு மாணவர்கள் எழுதி கொண்டிருந்தனர். மார்த்தாண்டம், அருமனை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு கும்பலாக சென்ற போராட்டக்காரர்கள் அவர்களை தேர்வு எழுத விடாமல் துரத்தி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், களியக்காவிளை அருகே மேக்கோடு அரசு உயர்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு ஒரு வேனில் வந்த  25க்கும் மேற்பட்ட டிப்டாப் ஆசாமிகள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்தனர். பறக்கும் படையினராக இருக்கும் என மாணவ, மாணவிகள் நினைத்தனர். தேர்வு அறைக்குள் புகுந்த அந்த கும்பல் மாணவர்களை அங்கிருந்து தேர்வு எழுதக்கூடாது எனவும், வீட்டிற்கு செல்லுமாறும் கூறி கலைந்து போகச் செய்தனர். அப்போது தான் அவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என்பது மாணவ, மாணவிகளுக்கு தெரியவந்தது. இதனால் தேர்வுகள் தடைப்பட்டது.

தகவல் அறிந்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனவே, மாணவ, மாணவிகளின் எதிர்காலம் பாதிக்காமல் இருக்க அனைத்து பள்ளிகளிலும் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.