பைக் திருட்டு வழக்கில் நெல்லை மாவட்ட வாலிபர்கள் 5 பேர் கைது

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2017 08:01


சாத்தான்குளம்:

 சாத்தான்குளம் பகுதிகளில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டுவந்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு  7 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

  சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகம் அருகே கார் டிரைவர் ஷேக் முகம்மது, புதுவேதக்கோயிலைச் சேர்ந்த வியாபாரி மகாராஜன், அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் உட்பட 10 க்கும் மேற்பட்டவர்களின் பைக்குகள் சாத்தான்குளம், தட்டார்மடம், திசையன்விளை பகுதிகளில் திருடுபோயிருந்தன. இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள் சாத்தான்குளம், தட்டார்மடம் போலீசில் புகார் செய்தனர். தொடர் பைக் திருட்டை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து பைக் திருடர்களை தேடி வந்தனர்.

 இதற்கிடையில் தட்டார்மடம் பயிற்சி எஸ்.ஐ. ஜெயராஜ் மற்றும் போலீசார் தட்டார்மடம், சாத்தான்குளம் பகுதிகளில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது சாத்தான்குளத்தில் சந்தேகத்திற்கிடமாக திரிந்த வாலிபர் ஒருவரைப் பிடித்து விசாரித்தனர்.

 விசாரணையில் அவர் நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள மகாதேவன்குளத்தைச் சேர்ந்த முருகன் மகன் கிருஷ்ணன் (21) என்பதும், அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. கிருஷ்ணன் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் அவரது நண்பர்களான திசையன்விளையைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் துரைராஜ் (23), கீரைக்காரன்தட்டைச் சேர்ந்த அரிராமன் மகன் திவாகர் (22), மகாதேவன்குளத்தைச் சேர்ந்த தேவ ஆசீர்வாதம் மகன் தனசிங் (25), அதே ஊரைச் சேர்ந்த பொன்பாண்டி இசக்கிகாளி (23) ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் நடத்திய விசாரணையின் அடிப்படையில் திருடு போன 7 பைர்குகளை போலீசார் மீட்டனர்.

இவர்களுக்கு வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், விசாரணை நடத்தி வருகிறார்.