செப். 13ல் நடக்கும் நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் : ராமகிருஷ்ணன் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2017 11:07

துாத்துக்குடி:

வரும் செப். 13–ம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டத்தில் மா. கம்யூ. முழுமையாக பங்கேற்கும் என்று அக் கட்சியின் தமிழ் மாநில செயலாளர்.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மா. கம்யூ., கட்சியின் 22வது மாநில மாநாடு தொடர்பாக துாத்துக்குடியில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

மா. கம்யூ., கட்சியின் 22வது மாநில மாநாடு துாத்துக்குடியில் வரும் 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. பிப்ரவரி 17ல் துவங்கி 20ம் தேதிவரை நான்கு நாட்கள் இந்த மாநாடு நடைபெறும். இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதில் இருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். நிறைவு நாளான பிப். 20ம் தேதி நடைபெறும் பேரணி, பொதுக்கூட்டத்தில்  கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

நீட் தேர்வுக்கு எதிராக போராடும் தமிழக மாணவர்களை போலீசார் கைது செய்து ரிமாண்ட் செய்து சிறையில் அடைப்பது கண்டிக்கத்தக்கது. போராட்டம் என்பது ஜனநாயக உரிமை. அதை ஒடுக்க நினைப்பதை மா. கம்யூ. கடுமையாக கண்டிக்கிறது. நீட் தேர்வு தொடர்பாக போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மத்திய அரசு உருவாக்கிய மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வு பொருந்தாது. அதற்கென தனிச்சட்டம் உள்ளதுபோல், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

நீட் தேர்வை எதிர்த்து வரும் 13ம் தேதி திமுக தலைமையில் நடக்கும் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டத்தில் மா. கம்யூ. முழுமையாக பங்கேற்கும்.

 நடுத்தர. பிற்பட்ட தலித் மாணவா்களுக்கு மருத்துவ கல்வி நீட் தோ்வால் மறுக்கப்படுகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தை கண்டித்து இடதுசாரிகள், வணிகா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினார்கள். ஜி.எஸ்.டி வரி விதிப்பால் சிறு, குறு, தொழில்கள் நலிவடைந்துள்ளன. பொதுமக்களின் வாங்கும் சக்தி குறைவதால் இந்திய பொருளாதாரம் சீா் குலைந்துள்ளது.

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலைக்கு சங்க் பரிவார் அமைப்புகளே காரணம்.

எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. குதிரை பேரத்திற்கு ஆளுநா் துணை போகிறார். அரசு ஊழியா்கள். ஆசிரியா்கள் புதிய பென்ஷன் தி்ட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆா்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதுபோல் போக்குவரத்து தொழிலாளர்களும் தங்களது ஊதியத்தி்ல் பிடிக்கப்பட்ட பி.எப். தொகையை உடனே வழங்க கோரியும். ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்ககோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர், தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அனிதா மரணத்தை கொச்சைப்படுத்தி உள்ளார். இதை கண்டித்த முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதிக்கு மிரட்டல் விடுத்தது கண்டிக்கத்தக்கது. நீட் தோ்வு எதி்ர்ப்பால் தமிழகமே கொந்தளித்து உள்ளது. சிலர் அதை திசை திருப்ப முயல்கின்றனா். தமிழக ஆளுநா் மத்திய பா.ஜ.வின் பிரதிநிதியாக செயல்படுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின் .போது மத்திய செயற்குழு உறுப்பினா் சம்பத். மாநில செயற்குழு உறுப்பினா் கனகராஜ், மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ரசல், பெருமாள், பாலசுப்பிரமணியன், மாநகர செயலாளா் ராஜா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளா் முத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.