ராகு
உங்கள் ஜாதகத்தில் கிரக நிலையும் பரிகார கடவுளும்.
சத்தியபுரி ஜோதிட மாமணி மு. திருஞானம்
நவக்கிரகங்களில் சாயா கிரகம் அதாவது, நிழல் கிரகம் என்று குறிப்பிடப்படுவது ராகு, கேது ஆகிய இரு கிரகங்கள்.
திருப்பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த போது - அந்த அமுதத்தை தேவர்கள் மட்டுமே பருகும் பாக்கியம் பெற்றனர்.
அரக்கர்களில் யாருக்கும் அமுதம் கிடைக்கவில்லை. ஆனால், காசிபரின் புத்திரர்களில் ஒருவரான விப்ரசித்தி என்ற அசுரனுக்கும் தட்சணின் மகள்களில் ஒருத்தியான சிம்ஹிகை என்ற பெண்ணுக்கும் பிறந்த புத்திரன் - அசுரகுரு சுக்ராச்சாரியாரின் உதவியுடன் தேவ வடிவத்தில் - தேவர்களுடன் கலந்து சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் நின்று - அமுதத்தை பெற்று பருகும் பொழுது சூரிய சந்திரர்கள் - மோகினி வடிவில் இருந்த திருமாலிடம் அசுரன் என்ற விபரத்தை தெரிவிக்க, கையிலிருந்த கரண்டியால் அவனது கழுத்தை வெட்டினார் திருமால்.
அமுதம் பருகியதால், தலையும் தலையற்ற உடல் பகுதியும் உயிர் பெற்று தலைப்பகுதி கேதுவாகவும் உடல் பகுதி ராகுவாகவும் உருவெடுத்தன. அதன் பிறகு, இருவரும் பிரம்மா சிவனை நோக்கி தவமிருந்து கிரக அந்தஸ்து பெற்றனர்.
அந்த வகையில் ராகுவும், கேதுவும் ராசி மண்டலத்தில் சப்தமஸ்தானமான 1, 7 என்ற ஸ்தானங்களில்தான் பிரிந்து நிற்பார்கள். எல்லா கிரகங்களும் இடமிருந்து வலமாக சூரியனை சுற்றி வருகின்றன. ஆனால், சாயா கிரகங்கள் இரண்டும் எதிர் திசையில் அதாவது, வலமிருந்து இடமாக ஆன்டி-கிளாக்வைஸ் (எதிர் கடிகாரச் சுற்று) சுற்றி வருகின்றன.
சூரியனும், சந்திரனும் காட்டிக் கொடுத்ததால் ராகுவிற்கு இரண்டு கிரகங்களும் எதிரிகளாகும். அந்த கோபத்தை தன் நிழலால் சூரியனையும், சந்திரனையும் மறைத்து கிரகணம் ஏற்படச் செய்கின்றது! இது ராகு, கேது சயாயா (நிழல்) கிரக புராணக்கதை.
ராகு ஒரு ராசியை கடக்க, ஒன்றரை ஆண்டு காலம் ஆகும். கருநிறமுடையவர். பாபக் கோள்களில் தலையாய பங்கு வகிப்பவர், ராகு. புத்திர தோஷத்தையும், களத்திர தோஷத்தையும் தருவார்.
விருச்சிக ராசியில் உச்ச பலமும், ரிஷப ராசியில் நீச்ச பலமும் உடையவர்.
மேஷம், கடகம், சிம்மம், கும்பம் முதலிய ராசிகள் பகை வீடாகும்.
மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் முதலிய ராசிகள் நட்பு வீடாகும்.
3, 6, 7, 11 ஆகிய இடங்களை வலமிருந்து இடமாக பார்ப்பவர்.
திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களை ஆதிக்கம் செய்பவர். இந்த மூன்று நட்சத்திரங்களில் குழந்தை ஏதாவது ஒன்றில் பிறந்தால் - பிறக்கும் பொழுது ராகு திசா ஆரம்பம். பிறந்த நேரத்தை வைத்து பாதக் கணக்குப்படி இருப்பு திசா அறியலாம்!
ராகு கிரகத்தின் தன்மை சனி கிரகத்தின் தன்மையை போன்றே இருக்கும். சனி கிரகத்தை போன்றே அச்சம் தருபவர்.
புனித யாத்திரைக்குப் பொறுப்பு ஏற்பவர் இவரே. மனித உடலில் கால்களில் ஆதிக்கம் செலுத்துபவர் இவர். தொற்று நோய்களுக்கு காரகர் ஆவார்.
வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ் போன்ற நவீன மின்னணு துறை சாதனங்களுக்கு பொறுப்பானவர்.
ஜெனன ஜாதகத்தில் சந்திரனுடன் ராகு இணைந்து 3, 9, 10 ஆகிய இடங்களில் ராகு சஞ்சரித்தால் அரச யோகமும், பதவியும் அனுபவிப்பார். முதிய வயதிலும் மாறாத இளமை உண்டு. அதே சமயம், இவர்கள் தீய வழியில் செல்வம் சேர்ப்பார்கள். வரி ஏய்ப்பு, கள்ளக்கடத்தல் போன்ற முகாந்திரம் உண்டாகும்.
சந்திரனுக்கு 6, 12 ஆகிய ஸ்தானங்களில் ராகு நிற்க பிறந்தவர். ஊராளும் உயர் பதவி பெறுபவர். பொன், பொருள் சேர்க்கை என தனலாபங்கள் உண்டாகும்.
சந்திரனுக்கு 4, 5, 10 ஆகிய இடங்களில் ராகு நிற்க பிறந்தவர். புத்திர தோஷம், எதிர்பாராத கண்டம் இருக்கும். இதற்கு பரிகாரங்கள் செய்து நற்பலன் பெறலாம்!
ராகு, கேது ஆகிய இரு கிரகங்களுக்கும் நடுவில் மற்ற கிரகங்களுக்கும், லக்னம், ராசி ஆகிய அனைத்தும் இருக்கப்பெற்ற ஜாதக அமைப்பை காலசர்ப்ப தோஷம், காலசர்ப்ப யோகம் என குறிப்பிடலாம். இந்த அமைப்பில் இளமையில் வறுமை, கஷ்டம், கடின உழைப்பு என இருக்கும். 30 வயதுக்கு மேல் அனைத்து விஷயங்களும் யோகமாக மாறி நல்ல பலன்களை வழங்கி, ஜாதகருக்கு பின்யோகத்தை அளிக்கும் அளவில் இருக்கும். இந்த காலசர்ப்ப தோஷ அமைப்பு இருந்தால், அதே அமைப்பு உள்ள ஜாதகரை திருமணம் செய்வது சிறப்பு. காளஹஸ்தி கோயிலுக்கு சென்று பிரார்த்திப்பது இந்த தோஷத்திற்கு பரிகாரமாகும்.
ராகு கிரகத்தின் அம்சம்:
கிரக ஜாதி - சங்கிரம ஜாதி.
கிரக ரத்தினம் - கோமேதகம்.
கிரக வாகனம் - ஆடு.
கிரக வடிவம் - நெடியர் (உயர்ந்தவர்).
கிரக தேவதை - காளி, துர்க்கை, கருமாரி அம்மன்.
கிரக குணம் - குரூர் (பாவக்கிரகம்).
கிரக தானியம் - உளுந்து.
கிரக சுவை - புளிப்பு.
கிரக பிணி - பித்த நாடி.
கிரக வஸ்திரம் - கறுப்புத்துணி.
கிரக உலோகம் - கருங்கல்.
கிரக நிறம் - கறுப்பு.
கிரக க்ஷேத்திரம் - காளஹஸ்தி.
கிரக புஷ்பம் - மந்தாரை.
கிரக சமித்து - அறுகு.
கிரக திக்கு - தென்மேற்கு.
ராசியில் சஞ்சரிக்கும் காலம் - ஒன்றரை வருடங்கள் (18 மாதங்கள்).
கிரக பாராயணம் - துர்க்கை கவசம், மகிஷாசுரமர்த்தினி கவசம்.
கிரக வேறு பெயர்கள் - கரும் பாம்பு, மதிப்பகை, மதியுணி, பாழி, விழவு.
அலி கிரகமான ராகு பிதாமகாரகன் (தந்தை வழி பாட்டன், பாட்டி) என்று ஜோதிட நூலில் குறிப்பிடப்படுகிறது!
ராகு கிரகத்தின் காரகத்துவம்:
ஞானம், தந்தை வழி பாட்டன், பாட்டி, புகழ், செப்படி வித்தை, களவு, பலவித வேடம் புனைதல், சேவகத் தொழில், பரதேசவாசம், சாதிக்கு விரோதமாய் செய்யத்தகாத தொழில் செய்தல், மாயாஜால வித்தைகள், வியாதியுள்ள பெண்ணுடன் பாலியல், குஷ்டம், வீக்கம், தீராப்பிணி, விஷபயம், ஜலகண்டம், அங்ககீனம், பித்தம், குன்மம், வெட்டுக்காயம், பிளவை, விலங்கு, சிறைப்படல், ஆகியவற்றிற்கான காரகத்துவம் பெறுகிறார்.
ராகு கிரக தோஷம் உள்ளவர்கள் கருமாரி அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு, காளி வழிபாடு செய்தால் தோஷ நிவர்த்தியாகும். துர்க்காஷ்டகம், கருமாரி அம்மன் ஸ்லோகம் படிப்பது நன்மை.
ராகு கிரகத்திற்குரிய எளிய பரிகார வழிமுறைகள்:
* சரஸ்வதி பூஜை செய்து வருவது நன்மை தரும்.
* போதைப்பொருள், புகையிலை, உபயோகிக்கக் கூடாது.
* ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது நன்மை தரும்.
* இரும்பு பாத்திரம் அல்லது இரும்பு பொருட்களை யாரிடமும் இலவசமாக வாங்குவது கூடாது. நீல நிற ஆடை அணியக்கூடாது.
* ராகு இரண்டாம் பாவத்தில் இருந்தால்- தங்க மோதிரம், நகை அணிவது நலம். நெற்றியின் முன் பகுதி வகிடு எடுக்கும் இடத்தில் குங்குமம் இட வேண்டும்.
* ராகு நான்காம் பாவத்தில் இருந்தால்- கங்கையில் அல்லது ஓடும் ஆற்றில் நீராட வேண்டும். சாக்கடை நீர் வீட்டின் அருகில் ஓட விடக்கூடாது. மாடிப்படிக்கு கீழ் அடுப்படி, சமையல் அடுப்பு வைக்கக்கூடாது.
* ராகு ஐந்தாம் வீட்டில் இருந்தால் - இரண்டாம் முறையாக மனைவிக்கு திருமாங்கல்யம் கட்டுவதால் தோஷம் நீங்கும்.
* ஏழாம் பாவத்தில் ராகு இருந்தால்- நாய் வளர்க்கக்கூடாது, வெள்ளி நகை அணிவது நலம்.
* எட்டாமிடத்தில் ராகு இருந்தால்- வெள்ளி நகை அணிவது நன்மை தரும்.
* பன்னிரண்டாமிடத்தில் ராகு இருந்தால்- வெள்ளியினால் ஆன யானையை (சிறியதோ, பெரியதோ) வீட்டில் வைத்திருப்பது நன்மை தரும்.
ராகு குருவுடன் சேர்ந்தாலோ, குரு ராகுவை 7ம் பார்வை பார்த்தாலோ குரு, அல்லது ராகு திசையில் ராஜயோக அமைப்பு வரும். இதை ‘கோடீஸ்வர யோகம்’ என ஜோதிட நூல் குறிப்பிடுகிறது!
ராகு காயத்ரி மந்திரம்:
ஓம்; நகத் வஜயா வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்தோ ராஹுஹ் ப்ரசோதயாத்!
@கா-யில் நவக்கிரகங்களில் செவ்வாய் கிரகத்துக்கும், சனி கிரகத்திற்கும் இடையில் இருப்பது ராகு கிரகம். அவருக்கு முன்பாக நின்று இந்த மந்திரத்தை நான்கு முறை சொல்வது உத்தமம்.
அதற்குரிய பலன்கள்:
* வியாதி அகலும்.
* விஷப் பிராணிகளால் உண்டாகும் பயம் நீங்கும்.
* உலகப்புகழ் பெறலாம்.
* பாராட்டுக்கள், உயர் பதவி கிடைக்கும்.
* பொருள் சேர்க்கை உண்டாகும்.
* அந்தஸ்து உயரும்.
ராகுவிற்குரிய தமிழ் மந்திரம் :
அரவெனும் ராகு, ஐயனே போற்றி
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி
ராகுத்தேவே ரம்யா போற்றி..!
நியூமராலஜிபடி ராகுவிற்குரிய எண், 4 (நான்கு).
ராகு ஆதிக்கம் பெற்றவர்கள் இதற்குரிய பொது எண் 5ஐ பயன்படுத்தலாம். புதன் நட்பு கிரகமாகும்.