கிரகங்கள்

சனீஸ்வரன்

உங்கள் ஜாதகத்தில் கிரக நிலையும் பரிகார கடவுளும்.

சத்தியபுரி ஜோதிட மாமணி மு. திருஞானம்

நல்லது - கெட்டதை தீர்மானிக்கும் நடுநிலையாக இருப்பவர், சனி பகவான். ஆயுட்காரகன் என்று குறிப்பிடப்படும் சனி பகவான், ஜாதகத்தில் பலம் பெற்று எட்டாமதிபதியுடன் சம்பந்தம் பெற்றால், தீர்க்காயு” என சொல்லலாம். மிகவும் மெதுவாகவே  செல்லும் கிரகம். கிரக மண்டலங்களில் இயற்கையில் பாவி எனப்படுபவர். இவரின் செயல்பாட்டிற்கு அஞ்சாதவர்களே இல்லை எனலாம்.

சனி பகவான் யாரையும் தண்டிப்பதில்லை. எந்த கிரகங்களும் யாருக்கும் கெடுதல் செய்வதில்லை. அவரவருக்கு விதித்த வினைகளுக்கேற்ப பலன்கள் தருவார்கள். கர்மாவின் வினையை ஒருவருக்கு தெரிவிப்பவர்களே நவக்கிரக நாயகர்கள். இதில் சனி கிரகம் மட்டும் ஒருவரது கர்மாவின் வினைகளுக்கேற்ப நன்மை, தீமைகளை தந்து அவர்களை உணர வைத்து திருந்தும் நிலையைத் தருபவர். நீதிக்கு அதிபதி, நேர்மை தவறாதவர். எந்தவித பாகுபாடுமின்றி அனைவருக்குமே சமமாக தம் பணியை செய்பவர்.

சூரியனின் புத்திரர். அவருக்கு நேர் எதிரானவர். சூரியன் பகல், சனி இரவு.

சனி திசா 19 ஆண்டுகளாகும். சனி பன்னிரண்டு ராசிகளில் ஒவ்வொரு ராசியிலும் 30 மாதங்கள் அதாவது 2½ ஆண்டு காலம் சஞ்சரிப்பார். மொத்தம் பன்னிரண்டு ராசிகளை சுற்றி வர 30 ஆண்டு காலம் ஆகும். கிரகங்களில் ஒரு ராசியில் அதிக காலம் சஞ்சரிப்பவர் சனி பகவான்தான்!

மகரம், கும்பம் அதாவது தை, மாசி ஆகிய 2 மாதங்களுக்குரிய ராசிகள் இவரது ஆட்சி வீடு. துலாம் ராசியில் உச்சமாகிறார். மேஷம் ராசியில் நீசம் பெறுகிறார். இவரது ஆட்சி வீடு மகரம், உச்ச வீடு துலாம், நீசம் வீடு மேஷம் ஆகிய மூன்றும் சர ராசிகளாகும். கும்பம் இவரது ஆட்சி வீடு ஸ்திர ராசியாகும்.

கும்பம் ஆண் ராசி, மகரம் பெண் ராசி. பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய 3 நட்சத்திரங்களும் சனி ஆதிக்கம் பெற்ற நட்சத்திரங்கள். ஒரு குழந்தை பிறக்கும் போது இந்த 3 நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்று என்றால், அதற்கு ஜாதகப்படி முதல் திசா, சனி மகா திசா ஆகும். பிறக்கும் நேரத்தின் அடிப்படையில் நட்சத்திரத்தின் 4 பாதங்களில் எந்த பாதம் என்பதை கணக்கிட்டு திசா, புத்தி, அந்தரம் ஆகியவற்றை கால அளவுடன் இருப்பு திசா அறியலாம்!

சந்திரன் இருக்கும் ராசிக்கு முன் ராசி, பின் ராசி என மூன்று ராசிகளில், அதாவது மேஷம் ராசி என்றால் மீனம், மேஷம், ரிஷபம் என்று வரிசைப்படி சனி கிரகம் சஞ்சரிக்கும் காலம்தான் ஒருவரின் ஏழரை சனி காலமாகும். அதாவது,

3 x 2½ = 7½ ராசிக்கு முன் இருக்கும் முதல் வீட்டில் சஞ்சாரம் செய்யும் பொழுது சிரசு சந்திரன் இருக்கும் ராசியில் சஞ்சாரம் செய்யும் பொழுது ஜென்ம சனி 2-ம் வீட்டில் சஞ்சரிக்கும் போது பாத சனி எனக் குறிப்பிடுவார்கள். இதில் ஜென்ம சனியின் உபாதைதான் அதிகம் இருக்கும். எனவே, உங்கள் ராசியில், நடப்பு சனி சஞ்சாரம் செய்யும் காலம்தான் ஏழரை சனி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

சனி கிரகத்தின் காரகத்துவங்கள் :

தீர்க்காயுள், இரவு காலம், தந்தை, ஐயனார் (சாஸ்தா), உபாயம், ஜீவனம், எருமை விருத்தி, இரும்பு, ஆளடிமை, சேவக விருத்தி, வயல், விவசாயம், நீலரத்தினம், மரவேலை, களவு, மனநோய், சிறைப்படல், அரச தண்டனை, வீண் வார்த்தை, வெட்கமின்மை, துன்பம், வாயடித்தல், கடன், அசுபகர்மம், மது அருந்துதல், மயக்கம், போஜனம், நீச ஸ்திரி, கைம்பெண், கற்பற்ற பெண், அல்லது ஊனமான பெண், அலி அங்கஹுனம், சித்தபிரமை, மேகநீர் உபத்திரவம், பித்த நோய், கடுகு, உளுந்து, எள், எண்ணெய் இவற்றுக்கெல்லாம் சனி கிரகமே காரகத்துவம் பெறுகிறது!

சனி கிரக அம்சங்கள் :

கிரக ஜாதி                 -  சூத்திரன்.

கிரக ரத்தினம்           - நீலம்.

கிரக வாகனம்           - காகம்.

கிரக வடிவம்              - குறியர் (குள்ளம்).

கிரக தேவதை           - எமன், சாஸ்தா.

கிரக குணம்               - குரூரர்.

கிரக தானியம்           - எள்.

கிரக சுவை                - கைப்பு.

கிரக பிணி                 - வாதம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்

கிரக வஸ்திரம்        - கறுப்பு பட்டு.

கிரக உலோகம்        - இரும்பு.

கிரக நிறம்                 - கறுப்பு.

கிரக க்ஷேத்திரம்       - திருநள்ளாறு, தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்.

கிரக புஷ்பம்               - கருங்குவளை.

கிரக சமித்து               - வன்னி.

கிரக திக்கு                  - மேற்கு.

ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - இரண்டரை ஆண்டுகள்.

கிரக பாராயணம்     - ஐயப்ப கவசம்.

கிரகத்தின் பார்வை -  3, 7, 10.

சனி கிரகத்திற்கு பகை வீடுகள் = கடகம், சிம்மம், விருச்சிகம்.

சனி கிரகத்தின் நட்பு வீடுகள் = ரிஷபம், மிதுனம், கன்னி.

சனி கிரகத்தை குறிக்கும் மற்ற பெயர்கள்:  

அந்தன், கதிர்மகன், காரி, கீழ்மகன், சாவகன், நீலன், நோய்மகன், முடவன், முதுமகன், மேற்கோள், மந்தன் ஆகியவையாகும்.

சனியின் நன்மைகள்

சனி கிரகம், ராகு, செவ்வாயுடன் இணைந்திருந்தால் பாதகமான பலன்களை தரும்.

சுப கிரகங்களுடன்  சேர்ந்திருந்தாலும், கேதுவுடன் இணைந்திருந்தாலும் நன்மையான பலன்களையே வழங்குவார்.

 உபஜெய ராசிகளில் இருந்தாலும் நன்மையே செய்வார்.

சனி 2, 9, 12 ஆகிய ஸ்தானங்களில் இருந்தாலும் கெடுதல் தரமாட்டார்.

சனி ஐந்தாம் பாவத்தில் இருந்தாலும் - செவ்வாய், புதனுடன் இணைந்திருந்தாலும் குழந்தைகளால் பிரச்னைகள் ஏற்படும்.

சனி பகை கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் நன்மை தர மாட்டார்.

சனி கிரகம் பாதிக்கப்பட்டிருந்தாலோ, சனி தோஷ நிலையிலிருந்தாலோ பாதகம் ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்:

* குரங்குகளுக்கு ஆகாரம் கொடுக்கலாம்.

* என்றும் பொய் சொல்லக்கூடாது.

* புற்றுக்கு பால் ஊற்றுவது நன்மை ஆகும்.

* பசு, எருது, கால்நடைகளுக்கு புல், நீர் ஆகாரம் கொடுப்பது நன்மை தரும்.

* சனிக்கிழமைதோறும் விரதம் இருந்து வந்தால் உடல்நலம் பெறலாம்.

* காகம், நாய் இவற்றிற்கு தினமும் காலை, மதியம் உணவு கொடுப்பது நன்மை தரும்.

* எளியவர்களுக்கு தானம் கொடுப்பது நன்மை தரும்.

நவக்கிரகங்களில் தெய்வீக ஆன்மா உள்ள கிரகங்கள் இரண்டு. அதில் குரு எனக் குறிப்பிடப்படும் வியாழக்கிரகத்திற்கும், சனீஸ்வரன் எனக் குறிப்பிடப்படும் சனி கிரகத்திற்கும் உண்டு.

சனி கிரகத்திற்குரிய காயத்ரி மந்திரம் :

ஓம்; காகத்வஜாய வித்மஹே

கட்க ஹஸ்தாய தீமஹி

தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை நவக்கிரகங்களில் மேற்கு திசை நோக்கி இருக்கும் சனீஸ்வரர் முன்னால் நின்று 5 முறை அல்லது 8 முறை சொல்வது சிரம பரிகாரமாகும். உத்தமம்.

இதன் பலன்கள் :

நீண்ட கால வாழ்வு அமையும், வசதி பெருகும், தொல்பொருள் ஆய்வுத்துறையில் சிறந்து விளங்கலாம். தலைமைப் பொறுப்பை ஏற்கும் பாக்கியம் உண்டாகும். பல மொழி பாண்டித்துவம் உண்டாகும்.

தமிழில் மந்திரம் :

                சங்கடம் தீர்ப்பாய் சனிபகவானே

                மங்கலம் பொங்க மனமுவந்தருள்வாய்

                சாகா நெறியில் இச்சகம் வாழ

                இன்னருள் தாராய்!

சனி கிரகத்திற்குரிய நியூமராலஜி எண், 8.

இதற்கு உப எண், 5. புதன் நட்பு கிரகம் என்பதால் இது பொருந்தும்.