சுக்கிரன்
உங்கள் ஜாதகத்தில் கிரக நிலையும் பரிகார கடவுளும்.
சத்தியபுரி ஜோதிட மாமணி மு. திருஞானம்
சுக்கிரன் சுகபோகங்களை அள்ளி வழங்குபவர். களத்திரகாரகன் என்று குறிப்பிடுவார்கள். அசுரர்களின் குருவாக இருந்தவர் சுக்ராச்சாரியார். நவகிரகங்களில் லட்சுமி கடாட்சத்தை வழங்கும் சக்தி படைத்த கிரகம்.
நவகிரகங்களில் அதிகபட்ச திசா பலன்களை வழங்குபவர். அதனால்தான் சுக்ரதிசா 20 ஆண்டுகள் பலன்களை வழங்கும்.
ரிஷபம் - துலாம் ஆகிய இரு ராசி வீடுகளுக்கு சொந்தக்காரர்.
மீனம் ராசியில் உச்சம் பெறுகிறார். கன்னி ராசியில் நீசம் பெறுகிறார். 1, 4,7, 10 ஆகிய கேந்திர ஸ்தானத்தில் சுக்கிரன் புதன் சேர்க்கை ஜோதிடக் கலையில் மிகுந்த ஆர்வம் உண்டாகும்.
வாக்கு ஸ்தானமாகிய 2-ல் சுக்கிரன் இருந்தால் ஜோதிட ஆராய்ச்சியும், ஜோதிடத்தால் தனலாபமும் உண்டாகும்.
பிருகு என்று குறிப்பிடப்படும் சுக்கிரன் நின்ற ஸ்தானத்துக்கு 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானத்தில் செவ்வாய் இருந்தால் இதை பிருகு மங்கலயோகம் என குறிப்பிடுவார்கள்.
சுக்கிரன் களத்திரகாரகன் என்பதால் செவ்வாய் பூமிகாரகன் என்பதால் மனைவியின் வருகையால் நிலபுலன் சேர்க்கை உண்டாகும்.
சுக்கிரனின் நட்பு வீடுகள் - மிதுனம், தனுசு, மகரம், கும்பம் ஆகும்.
சுக்கிரனின் பகை வீடுகள் கடகம், சிம்மம் ஆகும்.
கிரக அம்சங்கள் :
சுக்கிரன் - பெண் கிரகம்.
கிரக நிறம் - வெள்ளை.
கிரக ஜாதி - அந்தணன்.
கிரக ரத்தினம் - வைரம்.
கிரக வாகனம் - கருடன்.
கிரக வடிவம் - சமன் (நடுத்தர உயரம்).
கிரக அதிதேவதை - லட்சுமி, இந்திரன், வருணன்.
கிரக குணம் - சவுமியர்.
கிரக தான்யம் - மொச்சைப்பயறு.
கிரக சுவை - தித்திப்பு, புளிப்பு.
கிரகப் பிணி - சிலேத்துமம்.
கிரக வஸ்திரம் - வெண்பட்டு.
கிரக உலோகம் - வெள்ளி.
கிரக க்ஷேத்திரம் - ஸ்ரீரங்கம்.
கிரக மந்திரம் - அஷ்டலட்சுமி கவசம், மகாலட்சுமி அஷ்டகம்.
கிரக புஷ்பம் - வெண்தாமரை.
கிரக சமித்து - அத்தி.
கிரக திக்கு - கிழக்கு.
கிரகம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் - 1 மாதம்.
கிரக திசா ஆண்டு - 20 ஆண்டுகள்.
பரணி, பூரம், பூராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்கள் கிரக ஆதிக்கம் பெற்றவை.
ஒரு குழந்தை பிறக்கும் போது இந்த மூன்று நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்று என்றால், முதல் திசா சுக்ர திசாவாகும்.
பிறந்த நேரப்படி எந்த பாதம் என்று கால அளவை வைத்து இருப்பு திசா கணிக்கப்படுகிறது.
சுக்கிரன் பகல் வேளை என்றால் பலம் அதிகம். சுக்கிரன் உலகியல் இன்பங்களை வாரி வழங்குபவர். ஆண், பெண் தாம்பத்யத்திற்கு உரியவர். மேலை நாட்டினர் இவரை ‘காதல் தேவன்’ என்றே குறிப்பிடுகின்றனர்.
கிரகத்தின் காரகத்துவங்கள் :
மனைவி, இல்லம், பட்டம், புகழ், பகல் காலம், அன்னை, வல ஸ்திரீ தொடர்பு பரத்தையர் சம்பந்தம், இசைக்கருவிகள், பரதக்கலை முதலியவற்றில் ஆர்வம். மணமுள்ள மலர்கள், புனுகு, கஸ்தூரி போன்ற வாசனாதி திரவியங்கள். கட்டில், மெத்தை, சப்பரமஞ்சம், வெண்சாமரம், அரசுப் பெண், அழகு போக பாக்கியம், இளமை, கருவிழி, செல்வம், வாகனம், மாலை, கொடி, முதலியவை - ரத்னம், வெள்ளி, கப்பல், வியாபாரம், எப்பொழுதும் விகடம் பேசுதல், ஆசை, பெண், தெய்வ உபாசனை, ஜனவசியம், மித்திரர், பால், தயிர், அன்னம், மொச்சைப்பயறு, புளி, ஈயம், தேவ பெண்கள், லட்சுமி கடாட்சம், விண்வழிப் பயணம், நீர்வழிப் பயணம் ஆகியவற்றுக்கு சுக்கிர கிரகம் காரகத்துவம் பெறுகிறது!
சுக்கிரன் 4-ம் பாவத்தில் பலமற்று இருந்தால் தாய்மாமனுக்கு உடல் பாதிக்கும். குழந்தைச் செல்வம் காலதாமதமாகும். தினமும் விநாயகப் பெருமானை வழிபட, பாதிப்பு குறையும்.
சுக்கிரன் 6ல் இருந்தால் ஆண், பெண் யாராக இருந்தாலும் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு உடன் பிறப்புகள் இருந்தால் உத்தமம். ஒரே குழந்தை என்றால் தோஷம்.
சுக்கிரன் 7-ல், 8-ல் இருந்தால் தோஷம். அப்படி இருந்தால் கருப்பு, நீல கலர் ஆடைகள் அணியக்கூடாது. தவிர்ப்பது உத்தமம்.
சுக்கிரன், சூரியன், சந்திரன், ராகு போன்ற கிரகங்களுடன் தனியாகவோ, கூட்டாகவோ இணைந்திருந்தால் தோஷம்.
அதற்குரிய தோஷ பரிகாரங்கள்:
*வெள்ளிக்கிழமைதோறும் விரதம் இருந்து வந்தால் உடல் நலம் பெறலாம்!
* வைரத்தை மோதிரத்தில் கட்டி அணிந்து வருவதால் உடல் நலம் பெறலாம்!
* எப்பொழுதும் உடைகளை துவைத்து சுத்தம் செய்தே அணிய வேண்டும். ஒரு நாள் உபயோகித்த துணியை துவைத்து அடுத்த நாள் அணிய வேண்டும்.
* கிழிந்த ஆடைகளை உடுத்தக் கூடாது! ஏழைகளுக்கு உடுத்திய ஆடைகளை தானமாக கொடுத்து வரலாம்!
* வெள்ளிக்கிழமை விநாயகர் கோயில், மகாலட்சுமி கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஆறு வாரங்கள் ஏற்றி வழிபட, சுக்கிரனால் ஏற்பட்ட தோஷங்கள் குறையும்.
மகாலட்சுமி அஷ்டோத்திரம், அஷ்டலட்சுமி ஸ்லோகங்கள் படிப்பதும் தோஷ பரிகாரமாகும்.
சுகபோகங்களை அள்ளி வழங்கும்.
சுக்கிரனுக்குரிய காயத்ரி மந்திரம் :
ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தநு ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ரஹ் ப்ரசோதயாத்!
இந்த மந்திரத்தை நவகிரகங்களில் கிழக்கு நோக்கி இருக்கும் சுக்கிர கிரகத்திற்கு முன்பாக 6 முறை சொல்லி வழிபட தோஷங்கள் விலகி நற்பலன்கள் கிட்டும்.
இதன் மூலம் கலைகளில் சிறந்து விளங்கலாம். விருப்பங்கள் நிறைவேறும். அதிர்ஷ்டம் உண்டாகும்.
நீண்ட ஆயுள் உண்டாகும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும். இல்லறம் இனிமையானதாக அமையும். வியாபாரம் செழித்து வளரும். வித்தைகள் மூலம் உலகப் புகழ் பெறலாம்.
வசதி வாய்ப்புகள் பெருகும்.
தமிழில் சுக்கிரனுக்குரிய மந்திரம்:
சுக்கிர மூர்த்தி சுபமிக ஈவாய்
வக்கிர மின்றி வரம் தந்தருள்வாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கு அருளை!
சுக்கிரனுக்கு எண் கணித சாஸ்திரப்படி 6 எண் ஆதிக்கமாகும்.