கிரகங்கள்

சந்திரன்

உங்கள் ஜாதகத்தில் கிரக நிலையும் பரிகார கடவுளும்.

சத்தியபுரி ஜோதிட மாமணி மு. திருஞானம்

ஜோதிட சாஸ்திரப்படி ஒரு ஜாதகத்தில் 12 ராசி மண்டலங்கள் உள்ளன.

மேஷம் தொடங்கி மீனம் வரை உள்ள இந்த 12 ராசி வீடுகளை ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் உள்ள நட்சத்திரத்தின் அடிப்படையில் ராசி நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு ராசிக்கு 9 நட்சத்திரப்பாதங்கள். ஒரு நட்சத்திரம் நான்கு பாதமாக பிரிக்கப்படுகிறது. பிறந்த  நட்சத்திரம் ராசியை நிர்ணயிக்கிறது.

அந்த ராசியில் சந்திரனின் ஆதிக்கம் வருகிறது. நவகிரகங்களில் இரண்டாமிடத்தை பெறும் சந்திரனுக்கு  சொந்த வீடு கடக ராசி.  உச்ச வீடு  ரிஷப ராசி,  நீச்ச வீடு  விருச்சிக ராசி.

27 நட்சத்திரங்களில் ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய மூன்று நட்சத்திரங்கள் - சந்திரனின் ஆதிக்கம் பெற்ற நட்சத் திரங்களாகும்.சந்திரனுக்கு நட்பு கிரகம் சூரியன், செவ்வாய், சந்திரன் - வளர்பிறையாக இருந்தால் சுபர். தேய்பிறையாக இருந்தால் அசுபர். சந்திரனின் ஆட்சி வீடு.  கடகம் ஜலராசி.

சந்திரனின் குணாதிசயங்கள் :

மனம், தாய், வளர்பிறையின்போது நன்மை தருதல், தேய்பிறையின் போது கெடுதல் விளைவித்தல். பெண்மை, வெள்ளை நிறம், பெண்கள், கப்பலில் வேலை செய்தல், முத்துக்கள், ரத்தினங்கள், நீர், மீன்  பிடித்தல், பிடிவாதம், காதல், குளியலறை, ரத்தம், பிரசித்தி, மனித இனம் சார்ந்த பொறுப்புகள். தீட்சை பெறுதல், இடமாற்றம்,  அயல்நாட்டில்  தங்குதல், ஆடை அணிகலன்,  விவசாயம், நீர்வாழ் சங்கு போன்ற உயிரினங்கள், பித்தளை, வாழை மரம், பூசணிக்காய், முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்ற காய்கறிகள், வெள்ளி, இனிப்பு பண்டங்கள் போன்ற  விஷயங்கள் சந்திரனின் ஆதிக்கம் பெறுகின்றன.

பிறக்கும் போது ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம் நட்சத்திரம் என்றால் - அந்த குழந்தையின் ஆரம்ப திசா சந்திர திசாவாக இருக்கும். சந்திர திசா 10 வருடங்கள் மொத்த கணக்கு.  ஆனால் பிறக்கும் போது எந்த பாதம் என்பதை வைத்து எத்தனை வருடம், மாதம், நாள் கணக்கை பிரித்து அறியலாம்!

வேறு நட்சத்திரமாக இருந்தாலும், அந்த நட்சத்திரத்திற்குரிய கிரகத்தின் திசா முதல் திசாவாக இருக்கும்.

கிரக அம்சம் :

சந்திரன்                   -              பெண்

கிரக ஜாதி                -              வைசியன்

கிரக ரத்தினம்         -              முத்து

கிரக வாகனம்         -              முத்து விமானம்

கிரக வடிவம்           -              குறியர் (குள்ளம்)

கிரக தேவதை         -              பார்வதி

கிரக குணம்             -              சவுமியர் (சாது)

கிரக தான்யம்          -              நெல்

கிரக சுவை               -              இனிப்பு

கிரக பிணி                -              சிலேத்துமம்

கிரக வஸ்திரம்        -              வெள்ளை

கிரக உலோகம்        -              ஈயம்

கிரக நிறம்                -              வெள்ளை

கிரக க்ஷேத்திரம்    -              திருப்பதி

கிரக புஷ்பம்           -              வெள்ளல்லி

கிரக சமித்து           -              முறுக்கு

கிரக திக்கு              -              தென் கிழக்கு

ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம்         - இரண்டரை நாள்

சந்திரன் வளர்பிறையாக இருந்து சுபஸ்தானங்களில், கேந்திர திரிகோண பணபர ஸ்தானங்களில் இருந்தால் நற்பலன்களையும், யோகங்களையும் வழங்குவார்.

தேய்பிறை சந்திரனாக இருந்து மறைவு ஸ்தானங்களில் இருந்தால் கெடு பலன்களை தருவார். அப்படிப்பட்ட தோஷ அமைப்புகளில் இருந்தால் சந்திரனுக்குரிய அதிதேவதை பார்வதி

அம்சத்திலிருக்கும் அம்மனை வழிபடுவது உத்தமம். இரவில் குளிர்ச்சி தரும் கிரகம் - ஒருவரின் மனதை ஆள்பவர்.

தோஷ பரிகார வழிமுறைகள்:

திங்கட்கிழமைதோறும் விரதம் இருந்து மாலையில் சந்திரன் உதயமான பின் உணவு உட்கொள்வது, உடல் நலம் தரும். திருப்பதி வெங்கடாஜலபதியை நினைத்து பிரார்த்தனை செய்து வரலாம்.

வெங்கடாஜலபதி உருவப்படத்தை வைத்து தினமும் காலையில் பிரார்த்தனை செய்து வருவதால் மனநிம்மதி பெறலாம்!

* ஏழைக் குழந்தைகளுக்கு பால் கொடுக்கலாம். ஏழை ஊனமுற்றவர்களுக்கு உணவு தானம் செய்யலாம்.

* ஜாதி முத்துவை மோதிரமாகவோ, மாலையாகவோ கட்டி அணிந்து வருவதால் சந்திரனால் ஏற்படும் வியாதிகள் குணமாகும்.

*   தாய், பாட்டி இவர்களுக்கு மனமுவந்து உதவி செய்தல் வேண்டும். தாய் நலம் பேண வேண்டும். அவர்களை இறுதிக் காலம் வரை பாதுகாத்து பராமரித்து வர வேண்டும். தாய்க்கு செய்யும் தொண்டு இறைவனுக்கு செய்யும் தொண்டிற்கு சமம்.

* ஆறுகளில் நீராடுதல் நலம். புண்ணிய நதி நீராடல் நலம்.

* வயதானவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வருவதால் சந்திரனால் ஏற்படும் பாதிப்பு குறையும்.

* வயதான பெண்மணிகளுக்கு உடை தானமாக கொடுக்கலாம்.

* சவுந்தர்ய லஹரி ஸ்லோகம் படிப்பது உத்தமம்.

சந்திரனுக்குரிய காயத்ரி  மந்திரம்

ஓம் பத்மத்வஜாய வித்மஹே

ஹேம ரூபாய தீமஹி

தந்நோ ஸோமஹ் ப்ரசோயதயாத்


தமிழில் சந்திரனுக்குரிய மந்திரம்

எங்கள் குறைகளெல்லாம் தீர்க்கும்

திங்களே போற்றி!

திருவருள்  தருவாய்  சந்திரா  போற்றி!

சத்குரு போற்றி!

சங்கடம்  தீர்ப்பாய் சதுரா  போற்றி!

இந்த மந்திரங்களை சந்திரனை நினைத்து மனதில் ஜெபிக்கலாம். நவகிரகங்களில் சந்திர கிரகத்திற்கு முன்னால் நின்று 11 முறை சொன்னால் - நம் குறைகள்,  சங்கடங்கள் தீரும்.

நாம் வசிக்கும் பூமிக்கு மிக அருகில் சந்திரன் உள்ளது. நிலவை ஒரு பெண் தெய்வமாக வணங்கும் வழக்கம் உள்ளது.

சிவபெருமானின் தலைமுடியை நிலாப்பிறை அலங்கரிக்கிறது! நவீன விஞ்ஞானத்திலும் பூமியின் துணைக்-கோளாகவே சந்திரனை குறிப்பிடுகின்றனர்.

நிலவு வழிபாட்டை சக்தி வழிபாடாகவும் கொள்ளும் வழக்கம் உள்ளது.

நிலவை பச்சரிசி கோலமாக வரைவார்கள். பிறை தோன்றும் நேரம் தொடங்கி அது மறையும் நேரம்

நோன்பு முடியும். பிறை வளர வளர, நோன்பு நேரமும் வளரும். இந்த நோன்பின் போது அர்ச்சனை, மாவிளக்கு, கரும்புத் தொட்டில் பலகாரம் படைத்தல் போன்ற சடங்குகளும் நிகழும்.

ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் வரும் பொழுது சந்திராஷ்டமம் தினமாகும். சந்திராஷ்டம தினத்தில் வீண் அலைச்சல், மனக்குழப்பங்கள் வரும். இது மாதத்தில் இரண்டரை நாட்கள் இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் சந்திரனுக்குரிய மந்திரங்களை  உபாசனை செய்வது, விநாயகர் வழிபாடு -  சக்தி பூஜை - சிரமங்களுக்கு பரிகாரமாக இருக்கும்.