சூரியன்
உங்கள் ஜாதகத்தில் கிரக நிலையும் பரிகார கடவுளும்.
வாசகர்களே ஒன்பது கிரகங்களுக்கும் தனித் தனியே அதன் தன்மைகளை கீழே தந்திருக்கிறோம். இது தங்களது ஜாதகக் கட்டத்தில் உள்ள இடங்களைக் குறிப்பிடாது.
ஆனால் கிரகங்களுக்கான பலன்கள் இதுதான். இது எக்காலத்திலும் மாறாது.
சத்தியபுரி ஜோதிட மாமணி மு. திருஞானம்
பிரபஞ்சம் என்று சொல்லக்கூடிய இந்த அண்ட சராசரத்தில் உள்ள நட்சத்திர மண்டலங்களில் நாம் வசிக்கும் இந்த பூமி - நமது சூரிய மண்டலத்தில் ஓர் அங்கம். பிரபஞ்சத்தில் நமது சூரிய மண்டலம் ஒரு புள்ளிதான். பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் உள்ள பால்வெளி மண்டலத்தில் நமது சூரிய குடும்பம் அங்கம் வகிக்கிறது. சூரியனை மையமாக வைத்து நமது பூமி, சந்திரன் உள்பட 9 கிரகங்கள் சூரியனை சுற்றி வருகின்றன. ஒன்பது கிரகங்களின் ஈர்ப்பு சக்தி கதிர்வீச்சு இந்த பூமியின் மீது படுவதால் பல நன்மை, தீமைகள், சூழ்நிலை மாற்றங்கள் உருவாகின்றன. பூமியை போன்றே பூமியில் வசிக்கும் ஜீவராசிகளான மனிதர்களின் அன்றாட வாழ்க்கையிலும் இந்த நவகிரகங்களின் பாதிப்பு ஏற்படுகிறது. அது ஒன்பது கிரகங்களின் குணாதிசயத்தை பொறுத்து, 12 ராசிகளின் சூழ்நிலை பொறுத்தே நன்மையாகவும் தீமையாகவும், ஏற்ற இறக்கமாகவும் மாறுபடுகின்றன. | ![]() |
நமது சூரிய குடும்பத்தில் சூரியனே மையமாக இருந்து மற்ற அனைத்து கிரகங்களும் சுற்றி வருகின்றன. எனவே நவகிரக பரிபாவனத்தில் சூரியனே முதன்மை கிரகமாக பாவிக்கப்படுகிறது.
விண்வெளியில் நமது சூரிய மண்டலத்தில் அதிலும் குறிப்பாக, பூமியின் சுற்று வட்டப்பாதைக்கு நேரே இருக்கும் 27 நட்சத்திரங்களின் ஒளி வீச்சின் பாதிப்பும் உள்ளடங்கி இருப்பதால் மனித வாழ்க்கையில் நட்சத்திரங்களின், கிரகங்களின் பாதிப்பு மாறுபட்ட பலாபலன்களை தருகிறது. அந்த வகையில் மனிதன் இந்த பூமியில் பிறக்கும் போது ஒன்பது கிரக சூழ்நிலைகள், பன்னிரண்டு ராசிகளில் எப்படி அமைகிறதோ அதன் அடிப்படையில்தான் ஜனனமாகும் அந்த குழந்தையின் வாழ்க்கை அமைகிறது.
இப்படி மனித வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தும் ஒன்பது கிரகங்கள் பற்றிய ஜோதிடரீதியான குணாதிசயங்கள், அவற்றால் ஏற்படும் நன்மை தீமைகள் அந்த கிரகங்களால் ஏற்படும் தோஷத்திற்கு பரிகாரமாக இருக்கும் தெய்வங்களை பற்றி விளக்கமாக தெரிந்து கொள்வது அவசியமான ஒன்று. இன்று மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் தங்கள் ராசி, நட்சத்திரம் மற்றும் கிரக சூழ்நிலை பலன்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக செயல்படுவது வழக்கமாகிவிட்டது. எனவே, ஒன்பது கிரகங்களின் குணாதிசயங்கள் பலாபலன்கள், தோஷ பலன்களை தெரிந்து கொண்டு, அவற்றிற்குரிய பரிகார தெய்வங்களை பற்றியும் தெரிந்து கொண்டால், பலவிதத்திலும் நன்மையாகும். எனவே, வாரம் ஒரு கிரகம் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். அந்த வகையில் நவகிரகங்களில் முதன்மை ஸ்தானத்தை பெறும் கிரகமான சூரியனை பற்றி இந்த வாரம் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒளி வீசிப் பிரகாக்கும் சூரியனை ஜோதிட சாஸ்திரத்தில் பாஸ்கரன், ஆதித்யன், ஆதவன், ரவி என்றும் குறிப்பிடுவார்கள். பன்னிரண்டு ராசிகளும், பன்னிரண்டு மாதங்களின் அடிப்படையில் சூரியன் ஒவ்வொரு ராசியிலும் 1 மாத காலம் சஞ்சரிக்கிறார். மேஷ ராசி சித்திரை தொடங்கி கடைசி பங்குனி மாதம் மீன ராசியில் முடியும்.
சூரியனுக்குரிய ராசி, சிம்மம். இது அவரது ஆட்சி வீடு. சிம்மம் ஆவணி மாதம், சூரியனுக்குரிய மாதம். அதே போல் சூரியனுக்கு மேஷம் உச்ச வீடு.
சித்திரை மாதம் அதன் ஒளிக் கதீர்வீச்சு அதிகமாக இருக்கும். அதே போல் சூரியனுக்கு துலாம் நீசம் ராசி. இங்கு சூரியன் பல வீனப்படுகிறார். துலா மாதம் ஐப்பசியில் சூரியனின் கதீர்வீச்சு பூமிக்கு குறைவு. 27 நட்சத்திரங்களில் சூரியனுக்குரிய நட்சத்திரங்கள் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்கள். சூரியனுக்கு சந்திரன், செவ்வாய், புதன், குரு ஆகிய நான்கு கிரகங்களும் நட்பு கிரகங்களாகும்.
சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய 4 கிரகங்களும் பகை கிரகங்களாகும். சுபாவத்தில் சூரியன் பாவ கிரகம்.
சூரியனின் குணா திசயங்கள் :
ஆண் கிரகம், பாவ கிரகம், செம்பு நிறம், தத்துவ ஞானம், அரசருக்குரிய கம்பீரம், ஆத்மா அல்லது தான் என்கிற முனைப்பு, தந்தை, தந்தை வழி சொத்து, தன் கையை தான் நம்பி இருத்தல், அரசியல், அரசு சார்ந்த அதிகாரம், வயிற்றுப்பொருமல் பித்தத் தன்மை, இறைவனை வணங்கும் இடங்கள், வட்டிக்கு பணம் கடனாக கொடுப்பவர்கள், தட்டான், உடம்பில் எலும்புகள், நெருப்பு, முடி சூட்டும் அவை, வைத்திய திறமை, பஞ்சலோகம், புகழ், தவம், நேர்மை, கோதுமை, மிளகு, மலை, காடு, கிராம சஞ்சாரம், அரசாங்க உத்தியோகம், வருமானம் ஆகிய அனைத்து விஷயங்களுக்கும் சூரியன் காரகத்துவம் பெறுகிறார். இவற்றை பற்றிய பலா பலன்களை சூரியனின் ஜாதகத்தில் உள்ள நிலையைக் கொண்டு ஜோதிடர்கள் கணிப்பார்கள்.
சூரியன் மேன்மையாக இருந்தால் இவற்றில் நன்மையான பலன்களும், சமமாக - மத்திமமாக இருந்தால் மத்திம பலனும், அதமமாக - கெடுதலாக இருந்தால் கெடு பலன்களையும் வழங்குவார். இதன் அடிப்படையிலேயே கோசார பலன்கள் சொல்லப்படுகின்றன.
கிரக ஜாதியில் சூரியன் - சத்திரியன்,
சூரியனுக்குரிய ரத்தினம் - மாணிக்கம்.
கிரக வாகனம் - மயில், தேர்,
கிரக வடிவம் - உயரமும் அல்லாத குள்ளமும் அல்லாத மத்திமம். அதாவது சமன்,
சூரியனுக்குரிய அதிதேவதை தெய்வம் சிவன்,
சூரியனுக்கு அறுசுவையில் - காரம்,
சூரியனுக்கு அணிவிக்கும் வஸ்திர நிறம் - சிவப்பு, சூரியனுக்குரிய நிறம் - சிவப்பு,
சூரியனுக்குரிய தான்யம் - கோதுமை, சூரியனுக்குரிய உலோகம் - தாமிரம்,
சூரியனுக்குரிய க்ஷேத்திரம் - ஆடுதுறை,
சூரியனுக்குரிய மலர் - செந்தாமரை,
சூரியனுக்குரிய சமித்து - எருக்கு,
சூரியனுக்குரிய திக்கு நடு - மத்தியில் ஒரு ராசியில் சூரியன் 1 மாத காலம் சஞ்சரிக்கிறார்.
பாவகிரகமான சூரியனின் குணாதிசயங்களையும், காரகத்துவத்தையும், சூரியனுக்குரிய அம்சங்களையும் தெரிந்து கொண்டீர்கள்.
சூரியனின் தோஷப் பரிகார தெய்வம், சிவன்.
ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து சிவபிரானை பிரார்த்தனை செய்து வரவேண்டும். பிரதோஷ பூஜைகளில் கலந்து கொண்டு சிவ வழிபாடு செய்ய வேண்டும். எப்பொழுதும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். நேர்மை, நாணயம் கடைப்பிடிக்க வேண்டும்.
வீட்டு முகப்பு வாசலை கிழக்கு பக்கமாக சூரிய ஒளி படும்படி அமைத்தல் நன்மை தரும். ஏழை எளியவர்களுக்கு கோதுமையிலான தின்பண்டங்களை தானம் செய்ய வேண்டும். பசுவிற்கு கோதுமை தானியம், உணவு உண்ணக் கொடுக்க வேண்டும். அனைவருக்கும் இயன்ற அளவு மனத்தால், வாக்கால், செயலால் உதவி செய்வது நன்மையாகும். ஆதித்ய ஹிருதயம் படிப்பது உத்தமம். அதிகாலை சூரிய வழிபாடு உத்தமம்.
சூரியனுக்குரிய காயத்ரி மந்திரம் :
“ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாத்யுதிகராய தீமஹி
தந்நோ ஆதித்யஹ் ப்ரசோதயாத்”
“ஓம் அச்வத் வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத்”
இந்த ஸ்லோகங்களை சொல்லி சூரிய வழிபாடு செய்வது நமது கஷ்டங்களை போக்கி நல்வழிப்படுத்தும். தமிழில் சொல்வதென்றால்,
“சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுதந்திரா போற்றி
விளியா போற்றி எங்கள் வினைகளையெல்லாம்
களைவாய் போற்றி.”
இதன் பலன்கள்:
1. இருதய நோய் குணமாகும்,
2. கண்களுக்கு ஒளியை (பார்வை தெளிவை) தரும்,
3. நோய்கள் விலகும்,
4. புத்தி வளரும்,
5. பயம் அகலும்,
6. வீரம் உண்டாகும்,
7. கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
நவகிரகங்களில் சூரியனை பற்றிய இந்த அனனத்து விபரங்களும் ஜோதிட சாஸ்திரங்களில், நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களாகும்.
எனவே, உங்கள் ஜாதகத்தில் சூரிய கிரகத்தின் சூழ்நிலையைத் தெரிந்து கொண்டு, தோஷம் இருந்தால் இதில் குறிப்பிட்டுள்ள பரிகார தெய்வத்தை வழிபடுவதும் பரிகார வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதும் உங்கள் எதிர்கால நன்மைக்கு உகந்ததாகும்.