திருவாரூர் ஆழித் தேரோட்டம் இன்று கோலாகலத் தொடக்கம்

பதிவு செய்த நாள்

16
ஜூன் 2016
20:30

திருவாரூர்:

உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்ட திருவிழா வெகுவிமர்சையாக தொடங்கியது.

திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் கோயிலின் ஆழித் தேரோட்டம் இன்று காலை துவங்கியது. தேரோட்டத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

5 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் இந்த திருத் தேரோட்டத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க கோயிலாகவும், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திகழும் தியாகராஜசுவாமி கோயிலின் ஆழித்தேரோட்ட விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

எண்கோண வடிவில் 20 பட்டைகளாக சுமார் 350 டன் எடையில் அமைக்கப்பட்டுள்ள இந்த தேரானது, அலங்கரிக்கப்பட்டு வீதிகளில் ஆடி அசைந்து வலம் வரும் காட்சி கண்கொள்ளா காட்சி. ஆழித்தேர் 4 வீதிகளிலும் அசைந்து வரும் அழகை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவாரூரில் குவிந்துள்ளனர்.

திருத்தேரை, திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.