கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 212

பதிவு செய்த நாள் : 06 ஜனவரி 2020

கண்ணதாசன் பாட்டில் காளமேகம்!

‘லட்­சுமி கல்­யா­ணம்’ (1968) படத்­திற்­குக் கண்­ண­தா­சன் கதை, வச­னம், பாடல்­கள் எழு­தி­னார். முதல் காட்­சி­யில்,  கிரா­மத்­துக் குளத்­தில் குளிக்­கும் பெண்­களை மரத்­தின் பின்னே ஒளிந்து கொண்டு  ரசித்­துப் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றார், சுருட்டு சுந்­த­ரம் பிள்ளை (நம்­பி­யார்). அப்­போது அவர் மீது ஒரு கல் வந்து விழு­கி­றது. அடி பலம் இல்­லை­யென்­றா­லும் பயந்­து­போ­கும் சுந்­த­ரம் பிள்ளை ஓட ஆரம்­பிக்­கி­றார்.

சுந்­த­ரம் பிள்­ளை­யின் திருட்டு வேலைக்­குக் கல்லை எறிந்து முற்­றுப்­புள்ளி வைத்த கதிர்­வேலு (சிவாஜி) அவ­ருக்கு எதிரே வரு­கி­றார்.

‘‘என்ன சுருட்டு சுந்­த­ரம் பிள்ளை....காலை­யிலே சப­லமா? பழகி ரசிக்­கிற வய­சு­போய் பாத்து ரசிக்­கிற வயசு வந்­தி­டுச்­சில்லை...’’ : வாயிலே ஆலங்­குச்­சியை வைத்து பல் துலக்­கத் தொடங்­கும் முன் கதிர்­வேலு கேட்­கிற கேள்வி இது.

‘‘இத்­த­னைப் பொண்­க­ளுக்கு கல்­யா­ணம்  ஆக­வேண்­டி­யி­ருக்கே... யாருக்­கா­வது வாழ்வு கொடுக்­க­லா­மான்னு பாக்­க­றேன்..’’ , என்­பது காசு கொடுக்­கா­மல் காட்சி பார்த்த சுருட்­டுப் பிள்­ளை­யின் பதில்.

‘‘அவங்­க­வங்­க­ளுக்கு வாழ்வு எங்­கெங்­கேயோ இருக்­கய்யா...நீங்க ஒண்­ணும் வாழ்வு கொடுக்­க­வேண்­டாம்’’,   என்று கதிர்­வேலு கூறு­கிற பதிலை இங்கே படிக்­கும் போது,  ஏதோ அவ­ம­ரி­யா­தை­யா­கச் சொன்­ன­து­போல் தோன்­றும்.

ஆனால் கதிர்­வே­லு­வாக நடிக்­கும் சிவாஜி இதைப் பேசும் போது அதில் எதி­ரா­ளியை அலட்­சி­யப்­ப­டுத்­தும் நோக்­கம் குறை­வு­தான்....இந்த  கிரா­மத்­தில் பிறந்து வள­ரும் பெண்­க­ளுக்கு  எங்­கெங்கோ இருக்­கும் பையன்­க­ளு­டன் மண உறவு என்ற பந்­தத்தை அமைத்­து­வி­டும்  காலத்தை வியக்­கும் தன்மை அந்­தப் பதி­லில் தெரி­கி­றது!

நேர­டி­யாக செவு­ளில் அறை­யும் நெத்­தி­யடி நையாண்டி, சுருட்­டுப் பிள்­ளை­யின் அடுத்த பேச்­சுக்கு எதிர்­வி­னை­யாக வரு­கி­றது. கொஞ்­சும் நெளிந்து கொண்டு, ‘‘ஏன் கதிர்­வேலு, இப்போ எனக்கு என்ன வய­சா­யி­டுச்சு’’, என்று கேட்­கி­றது சுருட்டு.

‘‘மூணு மையிலு....’’ என்­கி­றார் கதிர்­வேலு.

‘‘எதுக்கு?’’ என்­கி­றது சுருட்டு.

‘‘சுடு­காட்­டுக்கு’’ என்று பதில் வரு­கி­றது!

ஒரே வார்த்­தை­யில் எத்­தனை எகத்­தா­ளம், நல்ல தமி­ழில் சொல்ல வேண்­டும் என்­றால் ‘லொள்ளு’, அள்­ளிக்­கொண்டு போகி­றது!

திரைப்­பாட்­டில் மட்­டும் அல்ல...வச­னம் எழு­து­வ­தி­லும்  தனக்­கி­ருந்த கூர்­மை­யைக் கண்­ண­தா­சன் காட்­டும் இடம் அது. ‘லட்­சுமி கல்­யா­ண’த்­தில், கிரா­மத்­தின் புல­வ­ரா­க­வும்  கவி­ஞ­ரா­க­வும் பழம்­பெ­ரும் காமெடி நடி­கர்  பி.டி.சம்­பந்­தம் வந்து போகி­றார்.

ஒரு நாள் காலை, கதிர்­வே­லு­வும் அவர் அப்பா ஏகாம்­ப­ர­மும் (வி.கே.ராம­சாமி),  கடை­யைத் திறக்­கும் போது, வந்து சேர்க்­கி­றார் இந்­தக் நாலரை அடி குட்­டைக் கவி­ஞர். ‘நானோ ஒரு தனிக் கட்டை’ என்று அவர் ஒரு வரி உதிர்க்க, கதிர்­வே­லு­வும் அவர் அப்பா ஏகாம்­ப­ர­மும் மாறி மாறி,

‘‘உடம்போ கொழுக்­கட்டை

தலையோ திருப்­பதி மொட்டை

நெற்­றி­யில் விபூதி பட்டை

கழுத்­திலே உத்­தி­ராட்ச கொட்டை’’ என்று அடுக்­கு­வது ஒரு­வி­தத்­தில் பாடா­வ­தி­யான போக்­குத்­தான். ஆனால், எதிரே வந்­து­கொண்­டி­ருக்­கும் சுருட்டு சுந்­த­ரம் பிள்­ளையை  பார்த்து, ‘‘இதோ வரு­கி­றது கொள்­ளிக் கட்டை’’ என்று இரட்டை அர்த்­தத்­தில் குட்­டைக் கவி­ஞர் கூறி சீனி­லி­ருந்து வெளி­யே­று­வது, டைமிங்­கு­டன் கூடிய ஒரு அறிய அமைப்பு. அங்கே வந்து சேர்­கிற சுந்­த­ரம் பிள்­ளைக்கு வச­ன­கர்த்தா அமைத்­தி­ருக்­கும் வக்­க­ணை­யான வசவு! ஆசை கண்ணை மறைக்க, தன்­னு­டைய வயதை மறந்த சுருட்டு சுந்­த­ரம் பிள்ளை, ‘‘பெண்ணை பெத்­த­வங்க எல்­லாம் என் வீட்டு வாச­லில் வரி­சை­யாக நிக்­க­றாங்க....’’ என்­கி­றார்.

இதற்கு, ‘‘போகப்­போக ஒரு நாளைக்­குக் கூட்­ட­மா­கவே வந்து நிப்­பாங்க’’ என்று பதில் வரு­கி­றது.

சுருட்டு: -- ‘‘கல்­யா­ணத்­துக்­குத் தானே?’’

சிவாஜி: -- ‘‘தூக்­கிக்­கிட்­டுப் போற­துக்கு!’’

இது­போன்ற காட்­ட­மான ஏசு­த­லைத் தாங்­கக்­கூ­டிய அள­வுக்­குக் கெட்ட எண்­ணம் பிடித்த பாத்­தி­ரங்­கள் ‘லட்­சுமி கல்­யா­ண’த்­தில் இருந்­தன. அத­னால் தான் காட்­ட­மான வச­வு­கள் ரசிக்­கக்­கூ­டி­ய­ன­வாக அமைந்­தன. வசைப்­பாட்­டிற்கு காள­மே­கம் என்று 15ம் நூற்­றாண்­டின் பிற்­ப­கு­தி­யில் வாழ்ந்த கவி­ஞ­ருக்கு  முத்­தி­ரைக் குத்­து­வார்­கள். திரை இசைப் பாட்­டிற்­குப் பெயர் பெற்ற கவி­ஞர் கண்­ண­தா­சன், ‘வானம்­பா­டி’­­யில் காள­மே­கத்­தின் சித்­திர கவி­தை­யான ‘தாதி தூது தீது’ பாட­லைப் பயன்­ப­டுத்­தி­னார். ஆனால் காள­மே­கத்­தின் வசை வகை­ற­யா­வில் தானும் குறை­வா­ன­வர் அல்ல என்று பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்.

‘‘மானி­ட­ரைப் பாடி அவர் மாறி­ய­தும்

ஏசு­வ­தென் வாடிக்­கை­யான பதி­கம்

மலை­ய­ளவு தூக்­கிப் பின் வலிக்­கும் வரை

தாக்­கு­வ­தில் மனி­த­ரில் நான் தெய்­வ­மி­ரு­கம்’’ என்று,   தூக்­கு­வ­தும் தாக்­கு­வ­தும் தன் போக்­கின் இரு பக்­கங்­கள் என்­ப­தைத் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

ஒரு மிகப்­பெ­ரிய தயா­ரிப்­பா­ள­ரைப் பற்றி இந்த முறை­யில் ஒரு வெளிப்­ப­டை­யான விமர்­ச­னத்தை அவர் வெளி­யிட, அவ­ருக்­குக் கல்தா, அவ­ரு­டைய போட்­டி­யா­ள­ருக்கு வர­வேற்பு என்ற நிலை ஏற்­பட்­டது. கடை­சி­யில் ஒரு முக்­கிய அர­சி­யல் புள்­ளி­யைக் கொண்டு அந்­தத் தயா­ரிப்­பா­ள­ருக்­குத் தூது அனுப்­ப­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டு­விட்­டது !

வசை பாடு­வ­தில் ஒரு­வர் காள­மே­க­மாக இருந்­தால், அதற்கு சில விளை­வு­கள் ஏற்­ப­டு­வது சக­ஜம் தானே. அப்­பர், சம்­பந்­தர் போன்­ற­வர்­கள், கவி பாடி (ஆலய) கத­வு­க­ளைத் திறந்­தார்­கள். ஆனால், பொது­வாக  வசைப்­பா­டல்­க­ளுக்­குக் கத­வு­களை மூடும் சக்­தி­தான் அதி­கம்!   ‘ஒரு கதவு மூடி­னால் இன்­னொன்று திறக்­கும்’ என்­கிற பொது நியதி இருப்­பது வேறு விஷ­யம். கரு­ணா­நி­திக்­கும் கண்­ண­தா­ச­னுக்­கும் இடை­யே­யான கத­வு­கள் மூடிக்­கொண்­ட­போது, எம்.ஜி.ஆர். உட­னான கபா­டங்­கள் அக­லத்­தி­றந்­து­கொண்­டன என்று கண்­ண­தா­சனே குறிப்­பிட்­டி ­ருக்­கி­றார்.  ஆனால், ‘ஜவ்­வாது மேடை­யிட்டு, சர்க்­க­ரை­யில் பந்­த­லிட்டு’ என்ற பாடலை எம்.ஜி.ஆருக்­காக எழு­திய பின், அவ­ருக்­குத் தாத்தா பாடல் (‘செம்­மா­து­ளைப் பிளந்து தா தா தா’) எழு­தி­னேன் என்று கண்­ண­தா­சன் கூறி­ய­தும், இன்­னொரு பாதை வில­கல் தொடங்­கி­விட்­டது! அது அவ்­வப்­போது இணைந்து கொண்­ட­தும் அர­ச­வைக் கவி­ஞர் என்ற பதவி வரை சென்­ற­தும் பலர் அறிந்­த­து­தான்.  நாற்­ப­து­க­ளின் இடைப்­ப­கு­தி­யில், திரா­விட இயக்­கக் கவி­ஞ­ரும் தலை­வ­ரு­மான பார­தி­தா­ச­னுக்­குப் பண­மு­டிப்­புத் தரும் முயற்­சி­யில் இணைந்த திரு அண்­ணா­துரை,   28.06.1946 அன்று நடந்த பொதுக்­கூட்­டத்­தில்  அவ­ருக்­குப் ‘பொன்’­­னாடை போர்த்தி, ‘பொற்’­­கி­ழி­யாக ரூ. 25,000 வழங்­கி­னார்.

ஆனால் பத்து பன்­னி­ரண்டு வரு­டங்­க­ளில் இது குறித்­துப் பிரச்னை வெடித்­தது. பொற்­கிழி அளித்­த­தில் முறை­கேடு நடந்­தது என்­பது உட்­பட பல்­வேறு கண்­ட­னங்­களை வைத்­தார் பார­தி­தா­சன். ‘யார் யார் எவ்­வ­ளவு கொடுத்­தார்­கள் என்­பது குறித்து எனக்கு கணக்­குத்­த­ரப்­ப­ட­வில்லை’ என்­றார். திரா­விட இயக்­கத்­தில் முதல் கணக்­குக்­கேட்­கும் பட­லம் இந்த வகை­யில் 1958லேயே தொடங்­கி­யது. இந்த நிலை­யில், அப்­போது  அண்­ணா­து­ ரையை  தன்­னு­டைய தலை­வ­ராக கொண்­டி­ருந்த கண்­ண­தா­சன், பார­தி­தா­சன் மீது ‘குரல் கெட்ட குயிலே கேள்’ என்ற தலைப்­பில் வசை­பாடி தீர்த்­தார்!

‘‘பழ­கு­வோர்க்கு இனி­யன், நல்ல

பண்­பி­னர்க்கு அறி­ஞன், கல்வி

அழ­கினை மன­மாய்க் கொண்ட

அண்­ண­னைத் திரு­டன் என்­றாய்!

பிழை­புரி குயிலே, நீ முன்

பேசிய படியே சொல்­வேன்,

அழ­குற முடிச்­ச­விழ்த்­தாய்

ஆம், அதன் தலை­வன் ஆனாய்!’’

இது போன்ற பதி­னாங்கு அறு­சீர் விருத்­தங்­க­ளில் பார­தி­தா­ச­னைக் கண்­டித்த கவி­ஞர், சில வரு­டங்­க­ளுக்­குப் பின் அதே பார­தி­தா­சன் தலை­மை­யில் நடந்த தமிழ் தேசிய கட்­சி­யின் முதல் மாநாட்­டில் கவிதை பாடி­னார்! தன்­னு­டைய கடந்த கால கண்­ட­னத்­திற்கு மன்­னிப்­பும் கோரி­னார்!

‘‘சிறு குழந்தை கடித்­த­தெ­னில் கோபம் கொள்­ளாச் சிறப்­பான தாயுள்­ளம் கொண்ட தந்­தாய்!

இரு­ப­து­டன் பதி­னாங்கு வயது சென்­றும் இயல்­பி­னில் நான் குழந்­தை­யென அறி­வாய் அன்றோ!

இருள் சூழ்ந்த உல­கில் நான் வாழ்ந்த காலை

என் பெரும நின் கையைக் கடித்­து­விட்­டேன்

பொறுத்­த­ருள்­வாய் யான­றி­வேன் என்ற போதும்

பொறுக்­காத நெஞ்­சத்­தால் புலம்­பு­கின்­றேன்!’’

காள­மேக கவி­யின் தனி விசே­ஷ­மாக அவ­ரு­டைய ஆசு கவித் திற­னைக் கூறு­வார்­கள். ஆசு­க­வித் திறன் என்­றால் விரை­வா­கக் கவி­பா­டும் ஆற்­றல். கொடுத்த பொரு­ளில் அடுத்த பொழுது கவி­பா­டும் கற்­பனை வளம். காள­மே­கத்­திற்கு இருந்­த­தா­கக் கூறப்­ப­டும் இந்த திறன், கண்­ண­தா­ச­னி­ட­மும் இருந்­த­தைக் கண்டு பலர் வியந்­தி­ருக்­கி­றார்­கள். அவ­ருக்கு  சில சம­யம் எழுத்­துப் பெருக்கு நின்­று­போ­ன­துண்டு.

ஆனால், கற்­ப­னைப் பெரு­கும் போது கவி­தைப் பொழி­யும், காள­மே­கம் போல். திரைப்­பா­ட­லுக்கு இரண்டு முன்று சர­ணங்­கள் போது­மா­ன­தாக இருக்க, கண்­ண­தா­ச­னி­ட­மி­ருந்து மடை­தி­றந்த வெள்­ளம் போல் பற்­பல சர­ணங்­கள் சல­ச­ல­வென்று வந்து கொண்டே போகும். எதை எடுப்­பது எதை­வி­டு­வது என்று தெரி­யா­மல் போய்­வி­டும்.

வசைப்­பாட்­டில் தனக்கு முன்­னோ­டி­யான காள­மே­கத்தை கண்­ண­தா­சன் நேர­டி­யாக சில திரைப்­பா­டல்­க­ளில் கையாண்­டார். ‘‘சுருக்­க­விழ்ந்த முன் குடு­மிச்­சோ­ழியா, சோற்­றுப் பொருக்­கு­லர்ந்த வாயா, புலையா, திருக்­கு­டந்­தைக் கோட்­டானே, நாயே, குரங்கே உனை ஒருத்தி

போட்­டாளே வேலை­யற்­றுப்­போய்’’ என்­றொரு காள­மேக வெண்பா உண்டு. ஒரு சத்­தி­ரத்­தில் காள­மே­கம் உணவு அருந்­திக்­கொண்­டி­ருந்­த­போது ஏற்­பட்ட கோபத்­தில் வெளிப்­பட்ட கவிதை.

இதி­லி­ருந்து ஒரு வரியை எடுத்­துத் தன்­னு­டைய ‘லட்­சுமி கல்­யா­ணம்’ படத்­தில் பாட­லின் பல்­ல­வி­யா­கவே ஆக்­கிக்­கொண்­டார் கண்­ண­தா­சன். அந்­தப் பாடல்­தான், ‘‘போட்­டாளே, உனை­யும் ஒருத்­திப் பெத்­துப் போட்­டாளே.’’   ஆவர்த்­தம் முடி­வ­தற்கு முன் இடம் இருக்­கும் பகு­தி­யில். ‘கோட்­டானை’  என்று அவ்­வப்­போது   ஒட்­டிக்­கொள்­ளும்.

இந்த பாட­லின் முழு முனைப்பே, ஊரைக்­கெ­டுக்­கும் மர­க­தம் அம்­மா­ளின் எச­கு­பி­சகு மக­னான சீனு­வைக் (சோ) கிண்­ட­லுக்கு உண்­டாக்­கு­வ­து­தான். இது நடப்­பது சீனு­வின் பிறந்­த­நா­ளில்! கதா­நா­ய­கன் (சிவாஜி), அவன் நண்­பன் (பாலாஜி), கதா­நா­யகி (வெண்­ணிற ஆடை நிர்­மலா) ஆகி­ய­யோர் சேர்ந்து, மற்­ற­வர்­கள் முன் அவ­னைக் கேலிக்கு ஆளாக்­கு­கி­றார்­கள். மர­க­தம் அம்­மாள், ஏழ்­மை­யில் இருக்­கும் நாய­கி­யைத் தன்­னு­டைய மக­னுக்கு எப்­ப­டி­யா­வது மண­மு­டித்து வைக்க முனை­வ­து­தான் திரைக்­கதை  படி இதற்­கான நியா­யம்.

‘துக்­ளக்’ ஆசி­ரி­ய­ரா­க­வும் தன்­னு­டைய திரைப்­பட வச­னங்­க­ளில் அர­சி­யல் நையாண்டி அதி­கம் உதிர்க்­கி­ற­வ­ரா­க­வும்,  சோ இன்­னும் உரு­வா­காத காலம் அது. காமெடி நடி­கன் என்று பரி­மா­ணம் மட்­டும் முதன்­மை­யாக இருந்த நேரம்.

ஆனால் பின்­னா­ளில்  அர­சி­ய­லி­லும் மிகப்­பெ­ரிய ஆளு­மை­யா­கப் பரி­ண­மித்த சோவைக் குறித்து, ‘நாட்­டுக்­கும் வீட்­டுக்­கும் லாப­மில்­லாமே, நல்­லதை சொல்­ல­வும் மூளை­யில்­லாமே’  என்று வரும் வரி­கள்  எவ்­வ­ளவு வினோ­த­மா­னவை! படத்­தில் கூட இது பொய் என்று கடை­சி­யில் தெரிந்­து­வி­டு­கி­றது.

கண்­ண­தா­ச­னின் வெளிப்­பா­டு­க­ளில் வசை புரா­ணம் ஓர­ள­வுக்­குத் தொடர்ந்து கொண்டே இருந்­தது. கண்­ண­தா­ச­னுக்­கும் சோவுக்­கும் இடையே உண்­மை­யில்  நல்ல இணக்­கம் இருந்­தது. கவி­ஞரை, சோ மிக­வும் மதித்­தார். ஒரு நாள் ஒரு ஸ்டூடி­யோ­வில் சோவுக்­குப் படப்­பி­டிப்பு இருந்த போது, யாரோ அவ­ரைக் கூப்­பி­டு­வது தெரிந்­தது.  பார்த்­தால் கண்­ண­தா­சன். ‘‘என்ன சோ, எப்­படி இருக்கெ,’’ என்­றார் கவி­ஞர்.

‘‘ஆமாம்...பாக்­கும் போது நல்லா பேசு­வீங்க...ஆனா பன்னி அது இதுன்னு பேப்­பர்ல திட்­டு­வீங்க...,’’  என்­றார் சோ.

‘‘நானா, உன்னை திட்­டி­னேனா,’’  என்று கேட்­டார் கவி­ஞர். அவ­ருக்கு அப்­படி செய்­தது மறந்­து­போய்­விட்­டது! அவர் இந்­திரா காங்­கி­ர­சுக்கு மாறி­யி­ருந்த நேரம்...இது தொடர்­பாக சோ இப்­ப­டிக் கூறு­கி­றாரே என்ற கேள்­விக்கு, எந்­தப் பன்னி என்ன சொன்­னா­லும்.  என்­ப­து­போல் பதில் கூறி­யி­ருந்­தார்.

‘நான் உடனே மன்­னிப்­புப் போட்டு விடு­கி­றேன்’ என்று கூறி­ய­வர், அடுத்த நாள், ‘எங்­கள் அலு­வ­ல­கத்­தில் ஒரு பன்­னி­யின் கவ­னக்­கு­றை­வால் இப்­படி நேர்ந்­து­விட்­டது... மன்­னிக்­க­வும்’, என்று போட்­டி­ருந்­தார்! இந்த பன்னி என்ற விலங்கு ஒன்­றைத்­தான் காள­மே­கம் தன்­னு­டைய வெண்­பா­வில் குறிப்­பி­டா­மல் விட்­டி­ருந்­தார்!

(தொட­ரும்)