உத்தரபிரதேசம், பீகார் இடைத்தேர்தல் முடிவுகள்: தலைவர்கள் கருத்து

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2018 19:36

புதுடில்லி:

   மக்கள் அளித்த தேர்தல் தீர்ப்பை ஏற்பதாகவும் இவை எங்களுக்கு பாடங்கள். இந்த தேர்தல் முடிவுகள் பாஜக கொள்கை மீதான தீர்ப்புகளாகக் கருதக்கூடாது. இந்த தொகுதிகளின் உள்ளூர் பிரச்சினைகளின் எதிரொலியாக நம்புகிறேன், என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் கூறினார்.

உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மாநில மக்களவை தேர்தல்களில் பாஜக வீழ்த்தப்பட்டுள்ளது குறித்து தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் மற்றும் புல்பூர் மக்களவை தொகுதிகளுக்கும், பீகார் மாநிலத்தில் உள்ள அராரியா மக்களவை தொகுதிக்குமான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதன் முடிவுகள் தேர்தல் ஆணையத்தால் அறிவித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தின் கோராக்பூர் மற்றும் புல்பூர் ஆகிய இரண்டு மக்களவை தொகுதிகளிலும் சமாஜ்வாடி கட்சி அமோக வெற்றிபெற்றுள்ளது.

பீகார் மாநில அராரியா மக்களவை தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் அமோக வெற்றிபெற்றுள்ளது. இதைத்தவிர பீகார் மாநிலத்தின் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஜகனாபாத் சட்டமன்ற தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் வெற்றிபெற்றுள்ளது.

பபுவா சட்டமன்ற தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றுள்ளது. சட்டமன்ற தேர்தலில் வெற்றியைப்பெற்ற பாஜகவினால் இந்த இரண்டு மாநிலங்களில் நடந்த 3 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றிபெறமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இடைத்தேர்தலின் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளன.

உத்தர பிரதேச முதல்வர் வாழ்த்து

முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசினார். இதில் பேசிய யோகி ஆதித்யநாத்,”மக்களின் இந்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இந்த முடிவை நாங்கள் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை. இந்த தேர்தல் முடிவுகள் எங்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். குறைபாடுகளை மதிப்பாய்வு செய்து அதற்கேட்ப பணியாற்றுவோம். சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ்வாடி கட்சிகளின் உடன்பாடு எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை நாங்கள் உணரவில்லை. நாங்கள் அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்திருந்தோம். அதுவே இந்த இடைத்தேர்தலில் பாஜகவின் மோசமான செயல்திறனுக்கு முக்கிய காரணமாகும். மத்திய அரசின் கொள்கைகளால் இந்த தோல்வி ஏற்படவில்லை. வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்.

அகிலேஷ் யாதவ் நன்றி

சமாஜ்வாடி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் இன்று செய்தியாளர்களை சந்தித்துப்பேசினார். இதில் பேசிய அகிலேஷ் யாதவ், ”இந்த இரண்டு மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் எங்களுக்கு ஆதரவளித்த பகுஜன் சமாஜம் கட்சித் தலைவர் மாயாவதிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.

மேலும்,”தலித்துகள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் என அனைவரின் ஆதரவோடு நாம் வெற்றிபெற்றுள்ளோம். சமூக நீதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது” என்று பெருமிதத்துடன் கூறினார்.

“மக்களை பிரச்சனைகளில் சிக்கவைக்கும் அரசுகள் கீழே இறக்கிவிடப்படுகின்றன. இந்த அரசு மக்களை அச்சுறுத்தி வருகின்றது. இது மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கும் பொருந்தும். பாஜகவிற்கு மோசமான காலத்தைக் கொண்டுவர மக்கள் ஒன்று திரண்டு செயல்படத் துவங்கியுள்ளனர்” என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.

ராகுல் காந்தி வாழ்த்து

இரு தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “பாஜக மீது மக்கள் கொண்ட கோபத்தையே இந்த இடைத்தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன. பாஜக அல்லாத கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்கவேண்டும் என்று மக்கள் கருதுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,”இன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று டுவிட்டரில் பதிவுசெய்துள்ளார்.

மம்தா பானர்ஜி வாழ்த்து

மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,”மிகப்பெரிய வெற்றி. மாயாவதி அவர்களுக்கும், அகிலேஷ் யாதவ் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இறுதியின் ஆரம்பம் துவங்கிவிட்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ”அராரியா மற்றும் ஜகனாபாத் தொகுதிகளில் வெற்றிபெற்ற லாலு பிரசாத் யாதவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள். இது ஒரு மிகப்பெரிய வெற்றி” என்று பதிவிட்டுள்ளார்.

தேஜஸ்வி யாதவ் பெருமிதம்

பீகார் மாநில முன்னால் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களை சந்தித்துப்பேசினார். இதில் பேசிய தேஜஸ்வி யாதவ், ”ஜகன்பாத் தொகுதியின் வெற்றி, லாலு பிரசாத் யாதவ் கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகும். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மீது வைத்துள்ள நிகரில்லா அன்பு, நம்பிக்கை ஆகியவற்றிற்காக பீகார் மாநில மக்களுக்கு நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மகத்தான வெற்றியை பீகார் மாநில மக்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்” என்று கூறியுள்ளார்.

லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பார்தி, ”நிதிஷ்குமார் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கை துவங்கிவிட்டது” என்று கூறினார்.