குஜராத் சட்டமன்றத்தில் எம்எல்ஏக்கள் கைகலப்பு: மைக்கை பிடுங்கி அடித்த காங். எம்எல்ஏ சஸ்பென்ட்

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2018 18:01

ஆமதாபாத்,

  குஜராத் பட்ஜெட் கூட்டத் தொடரில் காங்கிரஸ் உறுப்பினர் பிரதாப் தூதத் மேஜையில் இருந்த மைக்கை பிடுங்கி அதன் இரும்பு கம்பியால் பாஜக உறுப்பினர் ஒருவரை அடித்தார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் பிரதாப்பை பட்ஜெட் கூட்டத் தொடர் முழுக்க அவைக்கு வரக்கூடாது என அவைத்தலைவர் உத்தரவிட்டார்.


பட்ஜெட் கூட்டத் தொடரில் கேள்வி நேரம் முடிந்து பட்ஜெட் மீதான விவாதம் துவங்கியது. காங்கிரஸ் உறுப்பினர் விக்ரம் மதாம் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவைத்தலைவர் திரிவேதி  குறுக்கிட்டு பேச்சை நிறுத்தும்படி விக்ரமிடம் கூறினார்.

ஆனால் விக்ரம் அதை ஏற்கவில்லை. நான் முழுக்க பேசிவிடுகிறேன் என்று மறுபடி பேச ஆரம்பித்தார். விக்ரமுக்கு ஆதரவாக மற்றொரு காங்கிரஸ் உறுப்பினரான அம்ரிஷ் டேர் அவைத்தலைவரிடம் விக்ரமை பேச அனுமதியுங்கள் என்று குறுக்கிட்டு கூறினார்.

டேர் உரத்த குரலில் விக்ரமுக்கு ஆதரவாக பேசியதை அவைத்தலைவர் திரிவேதி ஆட்சேபித்தார். அப்பொழுது விக்ரமும் டேரும் அவைத்தலைவர் இருக்கையை நோக்கி ஓடினார்கள்.

அந்த இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் நாள் முழுக்க அவைக்கு வரக்கூடாது என அவைத்தலைவர் திரிவேதி ஆணை பிறப்பித்தார். அவர்களை வெளியேற்றும்படி காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

விக்ரம் பேசும்பொழுது அவரை பேச வேண்டாம் என ஜெகதீஷ் பாஞ்சால் என்ற பாஜக உறுப்பினர் கத்தினார்.  அவர் அருகில் இருந்த காங்கிரஸ் உறுப்பினர் பிரதாப் எழுந்து மைக்கை பிடுங்கி மைக் கம்பியால் ஜெகதீஷ் பாஞ்சாலை அடித்து நொறுக்கினர்.

அதன்பிறகும் பிரதாப் கோபம் குறையவில்லை. அவர் முகத்தில் ஓங்கி குத்துவிட்டார். அவைத்தலைவர் திரிவேதி பிரதாப்பை பட்ஜெட் கூட்டத் தொடர் முழுக்க அவைக்கு வரக்கூடாது என உத்தரவிட்டார்.

அதற்கடுத்து அவையை 10 நிமிடத்துக்கு ஒத்திவைப்பதாக கூறிவிட்டு  தனது அறைக்கு சென்றுவிட்டார்.

அவையிலிருந்து  வெளியேற்றப்பட்டவர்களில் ஒருவரான அம்ரிஷ் டேர் பின்புறம் வழியாக அவைக்குள் வந்தார். நேரே ஜெகதீஷ் பாஞ்சாலிடம் சென்றார். இரண்டாவது முறையாக ஜெகதீஷ் பாஞ்சால் குத்து உதை வாங்கினார்.

இதற்குள் மற்ற பாஜக உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து அம்ரிஷ் டேரை அடிக்கத் தொடங்கினார்கள். அவைக்காவலர்கள் உள்ளே நுழைந்து சண்டையை விலக்கி விட்டார்கள். அதனால் நிலைமை கட்டுக்குள் அடங்கியது. ஆக ஒரே நாளில் அவைத்தலைவர் இருக்கும்போதும் அவர் இல்லாத நேரத்திலும் குஜராத் சட்டமன்றத்தில் கைகலப்பு நடந்தது.