விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்: குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2018 13:05

லண்டன்

   உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங் கேம்பிரிட்ஜில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார்.  விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு, உலகம் முழுவதும் இருந்து பலரும் தங்கள் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.  நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் டுவிட்டரில் தன்னுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ஸ்டீபன் ஹாக்கிங்கின் மறைவு செய்தியினை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். அவரின் பிள்ளைகளான லூசி, ராபர்ட், டிம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”எங்கள் அன்புமிகு தந்தை இன்று காலமானார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

மேலும்,”அவர் பெரிய விஞ்ஞானி. அசாதாரண மனிதர். அவரின் பெயரும் புகழும் நீண்ட காலம் கடந்து நிற்கும். அவரது தைரியம், அறிவாற்றல் மற்றும் அவரது திறமை உலகில் உள்ள பலரை ஊக்கிவித்துள்ளது. அவருக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டில் கடந்த 1942 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி பிறந்தார்.

பின்னர் அவர் நரம்பு சீரழிவு நோயால் பாதிக்கப்பட்டார். அவரது 21 வயதில்தான் மருத்துவர்கள் இதனை கண்டுபிடித்தனர். ஸ்டீபன் ஹாக்கிங்கால் இனி கை, கால்களை அசைக்க முடியாது. தானாக எதையும் செய்துகொள்ள முடியாது. வாய் திறந்து பேச முடியாது. வாழும் வரை சக்கர நாற்காலி மட்டும்தான் துணை. அதுவும் சில ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்வது கடினம் என மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். இவரால் தன் விரல்களை மட்டுமே நகர்த்தமுடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.

அந்த நிலையில், அவர் காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு சென்று படித்தார். ஆல்பர்ட் ஐன்ஸ்டினிற்கு பிறகு வாழ்ந்த மிகச்சிறந்த தத்துவார்த்த இயற்பியலாளராக ஹாக்கிங் திகழ்ந்தார்.

மருத்துவ உலகிற்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த உலகிற்குமே அந்த ஸ்டீபன் ஹாக்கிங் ஆச்சரியமளித்தார். அண்டப் பெருவெடிப்பு, குவாண்டம் ஏற்றத்தாழ்வுகள், கருந்துளை கோட்பாடுகளின் மூலம் பிரபஞ்சத்தின் புதிரை விடுவித்தார்.

"தி பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்" என்ற அவரது புத்தகம் அதிக அளவு விற்பனையான புத்தகங்களில் ஒன்று என்ற சாதனையைப் படைத்தது. 1988 ஆம் ஆண்டு விற்பனை செய்யத்துவங்கிய இந்த புத்தகம் 237 வாரங்கள் விற்பனையானது. இதனால் இவருக்கு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் "லூகாஸியன் நாற்காலி" என்ற அதி கௌரவம் மிக்க பதவியும் அவரைத் தேடி வந்தது. இந்த நூற்றாண்டின் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் என புகழப்பட்டவர்.

டைம் மெஷின், பிளாக் ஹோல், ஏலியன், பிக்பேங் தியரி உள்ளிட்ட பல்வேறு அண்டவியல் தொடர்பான ஆய்வுகளை ஸ்டீபன் ஹாக்கிங் மேற்கொண்டார். இவ்வளவையும் அவர் சக்கர நாற்காலியில் இருந்தபடியே சாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசு தலைவர் இரங்கல்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில்,

”விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மரணசெய்தி மிகவும் வருத்தத்தை அளித்துள்ளது. நமது உலகம் மற்றும் மர்மமான இடமான நமது பிரபஞ்சம் குறித்து ஸ்டீபன் ஹாக்கிஙின் புத்திசாலித்தனத்தால் நாம் அறிந்து கொண்டோம். அவரது தைரியம் மற்றும் அவரது திறமை இனி வரும் தலைமுறைகளுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

துணை குடியரசு தலைவர் இரங்கல்

துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு டுவிட்டரில்,

”பிரபஞ்சத்தின் மர்மங்களை மக்களுக்கு விளக்கிய புகழ்பெற்ற தத்துவார்த்த இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்கின் மறைவு, அறிவியல் உலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும்” என்று பதிவிட்டிருந்தார்.

பிரதமர் இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில்,

”பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு தலைசிறந்த விஞ்ஞானி மற்றும் கல்வியாளர் ஆவார். உலகெங்கிலும் உள்ள அவரது புத்திசாலித்தனம் மற்றும் விடாமுயற்சியால் மக்கள் ஈர்க்கப்பட்டனர். அவரது மறைவு மிகவும் வேதனையளிக்கின்றது. பேராசிரியர் ஹாக்கிங்கின் கண்டுபிடிப்புகள் நம் உலகத்தை ஒரு சிறந்த இடமாக மாற்றியுள்ளது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

கமல்ஹாசன் இரங்கல்

கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ள இரங்கல்:

“ஸ்டீபன் ஹாக்கிங் நம்மிடை வாழ்ந்ததில் பெருமை கொள்வர் உலக மக்கள். அவர் நமக்களித்த ஞான தானத்தை என்றும் நினைவில் கொள்வோம். அவர் புகழ் வாழும்” என்று கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.