ஒகி புயலின்போது கடலில் காணாமல் போன 177 மீனவர்களுக்காக தலா ரூ. 20 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2018 12:20

சென்னை,

ஒகி புயலின் போது கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 177 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக முதல்வர் பழனிசாமி இன்று வழங்கினார்.

தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 177 மீனவ குடும்பத்தினரிடம், நிவாரண நிதியை முதல்வர் பழனிசாமி வழங்கினார். வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடிய ஏராளமான மீனவக் குடும்பத்தினர் கண்ணீருடன் நிவாரண நிதியை பெற்றுக் கொண்டனர்.

கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை ஒகி புயல் தாக்கியதால், மீன்பிடி படகுகள், உபகரணங்கள் பெருத்த சேதத்துக்கு உள்ளானதோடு மட்டுமின்றி, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீன்பிடி படகுகள் மற்றும் மீனவர்கள் காணாமல் போயினர்.

மீன்பிடிக்கச் சென்று ஒகி புயலினால் கரை திரும்ப முடியாமல் போன மீனவர்களை மீட்க தமிழ்நாடு அரசு, இந்திய கடற்படை, இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடலோர காவல் படயினருடன் இணைந்து எடுத்த நடவடிக்கையின் காரணமாக 3,506 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 27 மீனவர்கள் உயிரிழந்தனர். மேலும், கடலில் மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 177 மீனவர்கள் காணாமல் போயினர்.

ஒகி புயலால் உயிரிழந்த 27 தமிழக மீனவர் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் நிவாரண நிதியாக வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டதை அடுத்து, மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக இந்த தொகை பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து காணாமல் போன 177 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார். இதில் 10 லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. மீதம் ரூ.10 லட்சம் வங்கிக் கணக்கில் வைப்பு வைக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டிருக்கும் ரூ.10 லட்சத்தை 6 மாதங்களுக்குப் பிறகே பயனாளர்கள் வங்கியில் இருந்து பெற முடியும்.

தலைமைச் செயலகத்தில் மீனவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதி வழங்கியபோது அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, காமராஜ், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி, செங்கோட்டையன், எம்.சி. சம்பத், ஜெயக்குமார், அன்பழகன், வளர்மதி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மீனவர்களுக்கு முதல்வர் நிதி வழங்கியது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு கீழே தரப்பட்டுள்ளது.