நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2018 11:52

புதுடில்லி,

நாடாளுமன்றத்தில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்களும், காவிரி வேளாண்மை அமைக்கக்கோரி அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்பிக்களும் போராட்டம் நடத்தினர். இதனால் இரு அவைகளும் சில மணி நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டன.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த வாரம் 5-ம் தேதி துவங்கியது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பி.என்.பி மோசடி, காவிரி மேலாண்மை வாரியம் என பல்வேறு விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் முடங்கியே வருகிறது.

இந்தநிலையில் இன்று காலை நாடாளுமன்றத்தில்  தெலுங்கு தேச கட்சி, அதிமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளை  சேர்ந்த எம்பிக்கள் தங்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவை கூடிய உடனேயே எம்பிக்கள் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர். எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பகல் 12 மணி வரைக்கும் மாநிலங்களவை 2 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.