தெற்கே வரி வசூல்... வடக்கை வளப்படுத்துவதா...: சந்திரபாபுநாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2018 02:51


ஐதராபாத்:

தென் மாநிலங்கள் தான் மத்திய அரசின் வருவாய் ஆதாரமாக இருக்கிறது. இங்கே வரிகளை வசூலித்து வட மாநிலங்களை மத்தியஅரசு வளப்படுத்திக்கொண்டிருக்கிறது என்று  ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு பரபரப்பான குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளார்.

மத்திய அரசில் பா.ஜ.தலைமையிலான தே.ஜ.கூட்டணியில் இடம் பெற்றிருந்த தெலுங்குதேசம் கடந்த வாரம், வெளியேறியது. ஆந்திராவை மத்தியஅரசு புறக்கணிப்பதாகவும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் மத்தியஅரசு நிறைவேற்றவில்லை என்றும் வடகிழக்கு மாநிலங்களை வாழ வைக்கிற பிரதமர் மோடி, தென்மாநிலங்களை புறக்கணிக்கிறார் என்று முதல்வர் சந்திரபாபுநாயுடு பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார். இதையடுத்து தெலுங்குதேச அமைச்சர்கள் இருவரும், மத்தியஅரசை விட்டு வெளியேறினார்கள். பதிலுக்கு பா.ஜ. அமைச்சர்கள் இருவரும் ஆந்திர அரசை விட்டு விலகினர்.

இந்தநிலையில் தொடர்ந்து பார்லி.யில் தெலுங்குதேச உறுப்பினர்கள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். மஞ்சள் நிற ஆடை அணிந்தே தங்களின் கோரிக்கைகளை முழங்கி வருகிறார்கள் இந்தநிலையில் தெலுங்குதேசம் வைத்த முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான விசாகப்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு தனி ரயில்வே மண்டலம் அமைக்க வேண்டும் என்பதை மத்தியஅரசு நிராகரித்து விட்டது. இது பற்றி தெலுங்குதேசம் குழுவினர் முறையிட்டும் மத்தியஅரசு கை கழுவிவிட்டது.

இதையடுத்து மத்தியஅரசின் மீது ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளார். மத்தியஅரசு தென் மாநிலங்களை புறக்கணிக்கிறது என்றும் இங்கே வருவாய் ஈட்டி விட்டு வடமாநிலங்களை வாழ வைப்பதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது:

ஆந்திராவுக்கு மத்தியஅரசு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது. உணர்வின் அடிப்படையில் ஒரு மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தர முடியாது என்று மத்தியஅமைச்சர் ஒருவர் கூறி இருக்கிறார். . எதற்காக ஒரு மாநிலத்தை உணர்வின் அடிப்படையில் பிரிக்கிற மத்தியஅரசு அதே காரணியின் அடிப்படையில் இன்னொரு மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து தராதது ஏன்...

 மத்திய அரசு பணம் என்றோ... மாநிலங்களின் பணம் என்றோ... எதுவும் கிடையாது. எல்லாமே வரி செலுத்துவோரின் பணம் தான்.  மத்தியஅரசுக்கு கிடைக்கிற வரி வருவாயில் பெரும்பான்மையான பங்கு தென் மாநிலங்களில் இருந்து தான் கிடைக்கிறது. தென் மாநிலங்கள் தான் மத்தியஅரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தருகின்றன.ஆனால் மத்தியஅரசு தென் மாநிலங்களில் வரி வருவாயை வசூலித்துக்கொண்டு அந்தப் பணத்தை வட மாநிலங்களில் வளர்ச்சிப்பணிகளுக்கு திருப்பி விடுகிறது   இது மத்தியஅரசின் துரதிர்ஷ்டவசமான செயல் ஆகும்.  மாநிலங்கள் இடையே ஏன் இந்த பாரபட்சம்.. ஆந்திரா என்ன இந்தியாவில் இல்லையா... தொழிற்சாலை வரி ஊக்கத்தொகை, ஜி.எஸ்.டி.ரீபண்ட் எல்லாம் வடகிழக்கு மற்றும் இமாலய மாநிலங்களுக்கு தரும்போது ஆந்திராவுக்கு ஏன் தர முடியாது என்று மறுக்கப்படுகிறது. மாநில பிரிவினையில் அநீதி இழைக்கப்பட்டு மிகப்பெரிய இழப்பீடுகளை சந்திக்கிற மாநிலத்துக்கு பாராமுகம் ஏன்... தேசிய போலீஸ் அகாடமி,  மத்தியஅரசின் செல்லுலார் மற்றும் மோல்குலர் பயாலஜி மையம் போன்றவற்றை ஆந்திராவில் அமைக்காதது ஏன்.. மாநில பிரிவினையில் தங்களுக்கு பங்கில்லை என்று பா.ஜ. ஒதுங்கிக்கொள்ள முடியாது.  உணர்வின் அடிப்படையில் சிறப்பு அந்தஸ்து  ஆந்திராவுக்கு தரமுடியாது என்று நிதி அமைச்சரே சொல்லுகிறார்.  தனி தெலுங்கானா பிரிக்கப்பட்டதே கடுமையான மாநில உணர்வின் அடிப்படையில்தானே என்பதை மறந்து விட்டாரா...  மத்தியஅரசு தந்த நிதி பட்டியல்கணக்கை காட்டவில்லை என்று பா.ஜ.சொல்வது கடைந்தெடுத்த பொய். நிதி ஆயோக் வசம், முக்கிய பணிகளுக்கான   பயன்பாட்டு சான்றிதழ்களை சமர்ப்பித்து விட்டோம். ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தில் என்ன வாக்குறுதி அளிக்கப்பட்டதோ அவற்றை மட்டுமே நிறைவேற்றும்படி கூறுகிறோம். கூடுதலாக எந்தப் பணத்தையும் நாங்கள் கேட்கவில்லை.

ஆந்திராவுக்கு இழைக்கப்படுகிற அநீதியை பார்லிமென்டில் ஒவ்வொருவரிடமும் விளக்கிக்கூறும்படி தெலுங்குதேசம் எம்.பி.க்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதன் மூலம் மத்தியஅரசின் உண்மை முகம் தெரியட்டும்.  எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை... நீதிகிடைக்கும் வரை  இத்தகைய பாணி போராட்டம் தொடரும்.

இவ்வாறு நாயுடு கூறினார்.

இதே போல தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவும் மத்தியஅரசை குறை கூறியிருந்தார்.  தெலுங்கானாவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கியதாக மத்தியஅரசு கூறியது கடைந்தெடுத்த பொய். கடந்த 2016–17ம் ஆண்டில் தெலுங்கானாவில் இருந்து வரி வருவாயாக மத்தியஅரசு பெற்றது ரூ.50,013 கோடி. இதில் அனைத்து திட்டங்களுக்குமாக தெலுங்கானாவுக்கு தந்தது ரூ.24,561 கோடி தான்.  எங்களிடம் இருந்து மத்தியஅரசு தான் ரூ.25,452கோடி பெற்றுள்ளது என்பதை பொய் கூறும் முன்பு அமித்ஷா நினைத்துப் பார்க்க வேண்டும் என்று முதல்வர் ராவ் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.