நெல்லை டவுனில் அரிசி மொத்த கடையில் வருமானவரித்துறையினர் அதிரடி ‘ரெய்டு’

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2018 02:04


திருநெல்வேலி:

நெல்லை டவுனில் அரிசி மொத்த விற்பனை கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக ரெய்டு நடத்தினர். இந்த சம்பவம் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை டவுன் மேலமாடவீதியில் நெல் அரிசி மொத்த வியாபாரம் செய்யும் கடை உள்ளது. இந்த அரிசி வியாபார கடையில் இருந்து பல்வேறு ரக அரிசிகள் மொத்தமாகவும், சில்லறையாகவும் பல்வேறு ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த மொத்த அரிசி கடையில் நடந்து வரும் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் செய்து, வரி ஏய்ப்பு செய்வதாக வருமானவரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அரிசி மொத்த வியாபார கடையில் அதிரடியாக ரெய்டு நடத்தினர். கடையில் தினமும் நடைபெற்று வரும் வியாபாரம் விபரங்கள் உள்ளிட்ட பல்வேறு கணக்குகளை அதிகாரிகள் சரிபார்த்தனர்.

தொடர்ந்து கடையின் ஷட்டரை கீழே இறக்கிவிட்டு, உரிமையாளர்கள் மற்றும் கடை ஊழியர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நள்ளிரவு வரை இந்த அதிரடி ரெய்டு நடந்தது. ரெய்டின் முடிவில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலமாடவீதியில் உள்ள அரிசி மொத்த விற்பனை கடையில் நடந்த இந்த வருமானவரித்துறை ரெய்டு அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.