ஆதார் எண் இணைப்புக்கு இறுதி தீர்ப்பு வரும் வரை அவகாசம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2018 01:16


புது டில்லி,    

வங்கி கணக்கு, மொபைல் போன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் இணைக்க மார்ச் 31ம் தேதி கடைசி நாள் என்ற அவகாசம் காலவரையின்றி நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்பு வரும்வரை காலஅவகாசத்தை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மத்திய மாநில அரசின் நலத்தி்ட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டது. இதனால் ஆதார் எண் இல்லாதவர்கள், அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதில் சிரமங்கள் ஏற்பட்டன.   சமையல் காஸ் மானியத்துக்கு ஆதார் எண் கட்டாயம் என்று ஆரம்பித்து வங்கி கணக்கு, மொபைல் எண், ரேஷன் கார்டு பதிவு, வாக்காளர் அடையாள அட்டை... என நீண்டு கொண்டே போகிறது. ஆதார் இணைப்புக்கு மார்ச் 31ம் தேதி என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில்  அரசின் நலத் திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதார் திட்டத்துக்கான அரசமைப்புச் சட்ட அங்கீகாரத்தை எதிர்த்தும் சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை இன்னமும் நிலுவையில் உள்ளது.  ஆதார்இணைப்பு பற்றி கடந்த ஜனவரி 17ம் தேதியில் இருந்து தொடர்ந்து வாதங்களை நீதிபதிகள் கேட்டனர்.

இந்த நிலையில் மார்ச் 31ம் தேதிக்குள் வழக்கில் இறுதி முடிவு எட்டப்படுமா... என்ற கேள்வி எழுந்துள்ளது. இது பற்றி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐவர் பெஞ்ச் முன் , சாரித்து வரும் நிலையில் நேற்று மத்தியஅரசின் வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் ஆஜராகி;ஆதார் தொடர்பான வழக்கு நீண்டகாலம் நடந்து வருகிறது. பல்வேறு நலத்திட்டங்களின் பயன்பெற ஆதாரை இணைக்க வேண்டும் என்பதற்கான காலக்கெடுவை கடந்த காலத்தில் ஏற்கெனவே சிலமுறை நீட்டித்துள்ளோம். எனவே, இப்போதுள்ள காலக்கெடுவான மார்ச் 31- ம் தேதிக்குள் வழக்குகள் முடிவதற்கான சாத்தியம் இல்லை. எனவே இப்போதைய  காலக்கெடுவை  மேலும்  நீட்டிக்க வாய்ப்பிருக்கிறது என்றார்.

தட்கல் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் பெற ஆதார் அவசியம் என்று புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன என்று வக்கீல் விருந்தாகுரோவர் சுட்டிக்காட்டினார்.  தட்கல் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் பெற  வகுக்கப்பட்ட புதிய விதிகள் பொருந்தாது. தீர்ப்பு வரும் வரை மற்ற அடையாள அட்டைகளை காண்பித்தே பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம் என்று  நீதிபதிகள் கூறினர். ஏற்கனவே அரசியல் சாசன பெஞ்ச் அங்கீகரித்த 6 திட்டங்களுக்கு மட்டுமே  ஆதார்கார்டுகளை பயன்படுத்துவதை அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர் நீதிபதி புட்டசாமி உள்ளிட்டவர்கள்தரப்பில் வாதிடப்பட்டது. ஆதார் கார்டு என்பது சுய விருப்ப முடிவாகத்தான் இருக்க வேண்டுமே தவிர கட்டாயம் ஆக்கக்கூடாது என்றும் வலிய।றுத்தினர்.

இதையடுத்து  வங்கிக் கணக்கு, செல்போன்  எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மறு உத்தரவு வரும்வரை  நீட்டிப்பு செய்வதாக கோர்ட் உத்தரவிட்டது.  இது குறித்து தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,  ஆதார் தொடர்பான மனுக்கள் மீது மார்ச் 31-ஆம் தேதிக்குள் முடிவு எட்டப்படுவது சாத்தியமில்லை .எனவே, ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா? என்பதை தெளிவுபடுத்தும் வகையில் உரிய உத்தரவை அரசு பிறப்பிக்கும்.  கடைசி நேரத்தில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டால், வங்கிகள் உள்ளிட்ட நிதித் துறை நிறுவனங்களுக்கு சிரமம் ஏற்படும்.  எனவே வங்கிக் கணக்கு, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது. இது தொடர்பான வழக்கினை அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை, ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக மத்திய அரசு கட்டாயப்படுத்தக் கூடாது; எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. சமூக நலத்திட்டங்களுக்கு மட்டுமே ஆதார் எண்ணை கேட்க வேண்டும். ஆதார் சட்டம் 7வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அரசின் நலத்திட்ட உதவிகள், மானியங்கள், சேவைகள் பெறுவதற்கு ஆதார் இணைப்புக்கான அவகாசம் 31ம் தேதி முடிவடையும். இவ்வாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.