அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் பதவி நீக்கம் : அதிபர் டிரம்ப் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 13 மார்ச் 2018 20:31

வாஷிங்டன்,

அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனை இன்று அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியில் இருந்து நீக்கினார். அவருக்கு பதிலாக மத்திய புலனாய்வு நிறுவனமான சிஐஏவின் தலைவர் மைக் போம்பியோ புதிய வெளியுறவு துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டார்.

இது குறித்து டுவிட்டரில் செய்தி வெளியிட்ட அதிபர் டிரம்ப் ‘‘சிஐஏ தலைவர் மைக் போம்பியோ அமெரிக்காவின் புதிய வெளியுறவு துறை அமைச்சராக பொறுப்பேற்பார். அவர் தன் கடமைகளை திறன்பட நிறைவேற்றுவார்’’ ‘‘ரெக்ஸ் டில்லர்சன் கடந்த 14 மாதங்கள் தன் பதவியில் சிறப்பாக செயல்பட்டார். அவருக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என டிரம்ப் தெரிவித்தார். புதிய அமைச்சராக மைக் போம்பியோ நியமிக்கப்பட்டதை செனட் சபை அங்கீகரித்தால் மட்டுமே இந்த நியமனம் உறுதிசெய்யப்படும்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட டிரம்பின் அறிவிப்பில் ‘‘வெளியுறவு துறை அமைச்சர் பதவிக்கு மைக் போம்பியோ தகுதியானவர் என உறுதியாக நம்புகிறேன். உலக அரங்கில் அமெரிக்காவின் இடத்தை நிலைநாட்டுவது, கூட்டணி நாடுகளுடனான உறவை பலப்படுத்துவது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத பரவலை தடுப்பது போன்ற கடமைகளை அவர் திறமையாக கையாள்வார்’’

‘‘ராணுவம், பாராளுமன்ற உறுப்பினர், சிஐஏ தலைவர் போன்ற பல பதவிகளில் அவருக்கு கிடைத்த அனுபவம் அவருடைய புதிய பதவியில் சிறப்பாக செயல்பட உதவும்’’ என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் சிஐஏவின் துணை தலைவரான ஜினா ஹாஸ்பல் புதிய சிஐஏ தலைவராக இன்று அறிவிக்கப்பட்டார்.

‘‘புதிய சிஐஏ தலைவராக ஜினா ஹாஸ்பல் நியமிக்கப்படுகிறார். சிஐஏ தலைவராக பொறுப்பேற்க போகும் முதல் பெண் இவர். அனைவருக்கும் எனது வாழ்த்துகள்’’ என டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரெக்ஸ் டில்லர்சனின் பதவி பறிக்கப்படும் என செய்திகள் வெளியான நிலையில் அதிபர் டிரம்ப் அதை மறுத்தது குறிப்பிடத்தக்கது.