பணத்தைத் திருப்பித் தர தயார், உண்மையை பேச அனுமதி வேண்டும்; ஸ்டெபானி கிளிஃபோர்ட் கோர்ட்டில் குமுறல்

பதிவு செய்த நாள் : 13 மார்ச் 2018 20:17

லாஸ் ஏஞ்சல்ஸ்,

ஆபாச படங்களில் நடிக்கும் ஸ்டார்மி டேனியல்ஸ் என்ற நடிகை, அதிபர் டொனால்டு டிரம்ப் உடனான உறவு குறித்து வெளியே சொல்லாமல் இருக்க வாங்கிய 1,30,000 அமெரிக்க டாலர்களை திருப்பித் தர தயார் என்று தெரிவித்துள்ளார்.

ஸ்டார்மி டேனியல்சின் இயற்பெயர் ஸ்டெபானி கிளிஃபோர்ட். இவருடனான டிரம்ப்பின் உறவு பற்றி வெளியில் எதுவும் சொல்லாமல் இருக்க 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் நகல் நடிகை கிளிஃபோர்டின் வழக்கறிஞர் மூலம் பத்திரிகையாளர்களுக்கு கிடைத்தது.

அக்கடிதம் டிரம்ப்பின் தனிப்பட்ட வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மற்றும் அவரது வழக்கறிஞர் லாரன்ஸ் ரோசனுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. பணத்தை திருப்பி அளிப்பதன் மூலம் ரகசியத்தை வெளியிடாமல் இருக்க செய்த ஒப்பந்தம் ரத்தாகி விடும்.

அதன் பின்னர் கிளிஃபோர்ட் டிரம்ப் உடனான உறவு குறித்த அவரிடம் உள்ள செய்திகள், போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியவற்றை வெளியிடலாம் என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் அவரது வழக்கறிஞரும் இதை ஏற்றுக் கொண்டு கிளிஃபோர்ட் பேச அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் யார் உண்மையைக் கூறுகிறார்கள் என்பதை அமெரிக்க மக்கள் முடிவு செய்யட்டும் என்று கிளிஃபோர்டின் வழக்கறிஞர் மைக்கேல் அவெனாட்டி கூறினார்.

2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன் செய்த ரகசிய ஒப்பந்தத்தில்  கிளிஃபோர்ட் மட்டுமே கையெழுத்திட்டுள்ளார். டிரம்ப்போ அல்லது அவரது வழக்கறிஞர் கோஹனோ கையெழுத்திடவில்லை. இதனால் இந்த ஒப்பந்தம் செல்லாது என்று வழக்கு ஒன்றில் நடிகை கோரியுள்ளார்.

மேலும் அந்த ஒப்பந்தத்தில் டிரம்ப்பை டேவிட் டென்னிசன் என்றும் கிளிஃபோர்டை பெக்கி பீட்டர்சன் என்றும் புனைப்பெயரில் உண்மையை மறைத்து குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து வெள்ளைமாளிகையின் பத்திரிகை தொடர்பு செயலாளர் சாரா சாண்டர்ஸ் கூறுகையில், இந்த குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மையானவை அல்ல என்று தெரிவித்தார்.

நடிகை வாயைத் திறக்காமல் இருக்க பணம் அளித்தது தேர்தல் பிரச்சார நிதி விதிமுறைகளை மீறியுள்ளதாக தேர்தல் ஆணையம் மற்றும் நீதித்துறைக்கு டிரம்ப் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வாயை அடைக்க பணம் கொடுப்பது வர்த்தக வட்டாரங்களில் சகஜம் என்றாலும் அதிபர் தேர்தல் நேரத்தில் அது செலவழிக்கப்பட்டது என்றால் அது பற்றிய உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்று கொள்கை மற்றும் வழக்குகளுக்கான குழுவின் துணைத் தலைவர் பால் எஸ். ரையான் தெரிவித்துள்ளார்.