ஜம்மு காஷ்மீர் கல்வித்துறை அமைச்சரிடம் கூடுதல் பொறுப்பாக நிதி அமைச்சகம் ஒப்படைப்பு

பதிவு செய்த நாள் : 13 மார்ச் 2018 20:14

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் கல்வித்துறை அமைச்சர் சையத் முகமது அல்டாஃப் புகாரி  இன்று நிதி அமைச்சராக கூடுதல் பொறுப்பேற்றார். சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காரணத்தால் முன்னாள் நிதி அமைச்சர் ஹசீப் திரபு நேற்று பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து இன்று இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் நிதி அமைச்சர் ஹசீப் திரபு ‘‘ஜம்மு காஷ்மீர் விவகாரம் அரசியல் பிரச்சனை இல்லை. அனைவரும் இதை தவறாக பார்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் ஒரு சமூகம் சார்ந்த பிரச்சனை என கூறினார். அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முப்தி நிதி அமைச்சர் ஹசீப் திரபுவை நேற்று பதவி நீக்கினார். ஜம்மு காஷ்மீரில் பிடிபி – பாஜக கூட்டணி அமைவதில் முக்கிய பங்கு வகித்தவர் ஹசீப் திரபு. எனவே இந்த பதவி நீக்கத்தால் பிடிபி – பாஜக உறவில் பிரச்சனை ஏற்படலாம் என பாஜக நேற்று செய்தி வெளியிட்டது.

இந்நிலையில் காலியாக உள்ள நிதி அமைச்சர் பதவிக்கு கல்வித்துறை அமைச்சர் சையத் முகமது அல்டாஃப் புகாரி இன்று கூடுதல் பொறுப்பேற்றார். இது குறித்து முதல்வர் மெஹ்பூபா முப்தி கையெழுத்திட்ட அறிக்கையில்

‘‘பிடிபி கட்சி உருவாக காரணமாக இருந்த மூத்த தலைவர்களுல் ஒருவரான சையத் முகமது அல்டாஃப் புகாரியிடன் ஜம்மு காஷ்மீர் நிதி அமைச்சகம் மற்றும் தொழிலாளர் துறை கூடுதலாக ஒப்படைக்கப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டது.