தமிழிசையை கட்சியில் சேர்த்த கமல்ஹாசன்! பாஜகவினர் கிண்டல்: மக்கள் நீதி மய்யம் மறுப்பு

பதிவு செய்த நாள் : 13 மார்ச் 2018 19:56

சென்னை,

      மக்கள் நீதி மய்யத்தில் தன்னை இணைத்து மெயில் அனுப்பி உள்ளதாக பாஜக தலைவர் தமிழிசை  கிண்டலடித்துள்ளார். இதற்கு மக்கள் நீதி மய்யம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி இணையதளம் மூலம் என்னை இணைத்துள்ளதாக மின்னஞ்சல் வந்தது நகைப்புக்குரியதாக உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: நடிகர் கமல்ஹாசன் அவரது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கிறார். இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் பாஜக தலைவரான என்னையே உறுப்பினராக இணைத்து எனக்கு மெயில் வந்துள்ளது. நான் நாம் ஆனோம், இன்றிலிருந்து நீங்கள் எங்கள் கட்சியில் உறுப்பினர் என எனக்கு இ- மெயில் வந்தது

கிடைக்கும் இ-மெயில் முகவரிக்கு எல்லாம் அழைப்பு அனுப்புகிறார் கமல். மக்கள் நீதி மய்யம் கட்சி இணையதளம் மூலம் என்னை இணைத்துள்ளதாக மின்னஞ்சல் வந்தது நகைப்புக்குரியதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் மறுப்பு

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம், செல்போன் எண்ணுடன் கட்சியில் பதிவு செய்தால் மட்டுமே இ-மெயில் வரும், கட்சியில் சேர யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை, இணையத்தில் பதிவு செய்பவர்களுக்கு மட்டும் மின்னஞ்சல் அனுப்பப்படும் என தமிழிசைக்கு மக்கள் நீதி மய்யம் விளக்கம் அளித்துள்ளது.