சூரிய மின்சார உற்பத்தி சாதனங்கள் மீது இந்தியா இறக்குமதி வரி விதிக்கக் கூடாது: ஐரோப்பிய முதலீட்டு வங்கி கருத்து

பதிவு செய்த நாள் : 13 மார்ச் 2018 17:19

புது டில்லி,

    சூரிய மின்சார உற்பத்தி சாதனங்கள்மீது இந்தியா இறக்குமதி வரி விதிக்கக் கூடாது என்று ஐரோப்பிய முதலீட்டு வங்கி தலைவர் ஹோயெர் கூறியுள்ளார்.

ஒரு நாட்டின் சிறந்த நலன்கள் பல நாட்டுடனான வர்த்தகம், கட்டுப்பாடில்லாத சுதந்திரமான வணிகம் ஆகியவற்றின் மூலமே காக்கப்படும் என்று ஹோயெர் தெரிவித்தார்.
இறக்குமதித் தீர்வைகள் விதிப்பது நல்லது என்ற நினைப்பு சில நேரங்களில் தோன்றலாம். ஆனால் இறக்குமதித் தீர்வை விதிப்பது என்ற கருத்தே அடிப்படையிலேயே தவறானது. கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பே இறக்குமதிக்கு தடைவிதிக்கக் கூடாது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

அவ்வாறு இறக்குமதி வரி விதித்தால் சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகளுக்கும் நஷ்டம் ஏற்படும் என்பது தான் உண்மையான நிலையாகும்.

இரண்டு நாடுகளும் லாபமடைய வேண்டுமானால் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் இந்தியாவுக்கான ஒரே ஆலோசானை உலக நாடுகளுக்கு வர்த்தகத்துக்கு அனுமதி கொடுங்கள்.

உங்கள் ஏற்றுமதி மிகவும் குறைவு என்று நினைக்கவே வேண்டாம். சுதந்திரமான வர்த்தகம், பலநாட்டு வணிகம் இந்தியாவுக்கு முக்கியமில்லை என்று நினைக்க வேண்டும்.

சுதந்திரமான இறக்குமதி உங்கள் உற்பத்தியாளார்களுக்கும் பயனாளிகளுக்கும் மிகவும் முக்கியமானது. அதே சமயம் நீங்கள் அறிவியல், தொழில்நுட்பம், புதுமைசெய்தல், கல்வி ஆகியவற்றுக்கு நிறைய செலவிடுங்கள், நிறையச் செய்யுங்கள் என்று ஹோயெர் தெரிவித்தார்.

மலேசியா, சீனா ஏற்றுமதி செய்யும் சூரிய மின்சார உற்பத்தி செல்கள் மீது 70 சதவீத பாதுகாப்புத் தீர்வை விதிக்கலாம் என்று 2018 ஜனவரியில் இந்தியப் பாதுகாப்புப் பிரிவு இயக்குனர் ஜெனரல் கூறியுள்ளனர். ஆனால் இந்திய அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.