இந்தியாவில் 2025ம் ஆண்டுக்குள் காசநோய் ஒழிக்கப்படும் : பிரதமர் மோடி அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 13 மார்ச் 2018 16:34

புதுடில்லி,

   இந்தியாவில் 2025ம் ஆண்டுக்குள் காசநோய் ஒழிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார். தேசியளவிலான காசநோய் ஒழிப்பு திட்டத்தை துவக்கி வைத்து பேசும்போது மோடி இதை அறிவித்தார்.

புதுடில்லியில் மத்திய சுகாதார துறை மற்றும் உலக சுகாதார நிறுவனம் இணைந்து நடத்திய காசநோய் ஒழிப்பு மாநாடு இன்று துவங்கியது.  பிரதமர் மோடி இன்று இந்த மாநாட்டை துவங்கி வைத்தார். உலகளவில் இருந்து பல தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். 

மேலும் மாநாட்டில்  ‘காசநோய் இல்லாத இந்தியா’ என்ற திட்டத்தையும் மோடி துவக்கி வைத்தார். இந்தியாவில் 2025ம் ஆண்டுக்குள் காசநோய் ஒழிக்க வேண்டும் என்பதே தேசியளவிலான இந்த திட்டத்தின் குறிக்கோளாகும்.

மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றியதன் விவரம்

உலகளவில் காசநோயை 2030ம் ஆண்டுக்குள் ஒழிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு 5 வருடங்கள் முன்பாகவே இந்தியாவில் காசநோய் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பல ஆண்டுகளாக காசநோய்க்கு எதிராக பல திட்டங்கள் வகுத்தும் இதுவரை நல்ல பலன்கள் கிடைக்கவில்லை. அதனால் நிலைமையை மேலும் தீவிரமாக ஆராய்ந்து புதிய அணுகுமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.

இந்த தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. எனவே இந்த திட்டத்தில் சேரும்படி அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் நான் கடிதம் எழுதியுள்ளேன். மேலும் மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதில் பெரும் பங்காற்ற வேண்டியது அவசியம்.

காசநோயால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மக்களே. எனவே காசநோய் ஒழிப்பதற்காக எடுக்கப்படும் எந்த முயற்சியும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த உதவ வேண்டும் என மோடி கூறினார்.

உலகவளவில் சுமார் 1 கோடி மக்கள் காசநோயால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் கடந்த 2016ம் ஆண்டு மட்டும் 17 லட்சம் மக்கள் காசநோயால் இறந்துள்ளனர் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதிகரித்து வரும் காசநோய் பிரச்சனையை தடுக்க வரும் செப்டம்பர் மாதம் ஐநா பொது சபையில் நடக்கவுள்ள உயர்மட்ட கூட்டத்தில் முதல்முறையாக காசநோய் குறித்து தலைவர்கள் விவாதிப்பார்கள்.