எதிர்க்கட்சியினர் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

பதிவு செய்த நாள் : 13 மார்ச் 2018 12:23

புதுடில்லி,

   காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் தொடர்ந்து 7-வது நாளாக நாடாளுமன்றத்தின் மக்களவை செவ்வாயன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக அவை நாளை தொடங்கும் என்ற அறிவிப்போடு ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையில் கேள்வி நேரம் துவங்குவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். இதையடுத்து காங்கிரஸ், அதிமுக, தெலுங்கு தேசம்,  தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் பதாகைகளை ஏந்தியபடி ‘நீதி வேண்டும்’ என கோஷமிட்டவாறு சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட சென்றனர்.

தெலுங்கு தேசம் எம்பிக்கள் ‘கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்கவும்’ என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு முழக்கமிட்டனர்.

இதையடுத்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை பகல் 12 மணி வரை ஒத்தி வைத்தார்.

அவை ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள் மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த குமாருடன் உரையாடிக் கொண்டிருந்தனர்.

அதிமுக எம்பிக்கள் போராட்டம்

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்பிக்கள் மக்களவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவற்றை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று போராடி வருகிறோம். தமிழகத்தின் உரிமைகளை பெறுவதில் அதிமுக பின்வாங்காது.

நாடாளுமன்றம் துவங்கி 7 நாட்கள் முடங்கிய நிலையிலும் அதிமுக எம்பிக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எத்தனை நாட்கள் ஆனாலும் எங்களது போராட்டம் தொடரும் என்று தம்பிதுரை தெரிவித்தார்.