சேமிப்பு கணக்கின் குறைந்தபட்ச இருப்பு தொகைக்கான அபராதத்தை எஸ்பிஐ வங்கி குறைத்தது

பதிவு செய்த நாள் : 13 மார்ச் 2018 12:05

மும்பை,

குறைந்த பட்ச இருப்புத்தொகை பராமரிக்காத வங்கி கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 75 சதவீதம் குறைத்துள்ளது. இந்த நடைமுறை 2018 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது.

மெட்ரோ மற்றும் நகரப் பகுதிகளில் குறைந்த பட்ச இருப்புத்தொகை வைக்காத வாடிக்கையாளர்களிடம் ஒவ்வொரு மாதமும் அபராதத் தொகை ரூ. 50 உடன் ஜிஎஸ்டி கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்பட்டது.

தற்போது மாதம் ஒன்றுக்கு அபராதத் தொகை ரூ. 15 உடன் ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
புறநகர் மற்றும் கிராமங்களில் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் குறைந்த பட்ச இருப்புத்தொகை பராமரிக்காவிட்டால் ரூ. 40 அபராதம் + ஜி.எஸ்.டி

வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் முறையே ரூ. 12 மற்றும் ரூ.10 ரூபாயுடன் ஜிஎஸ்டி உடன் சேர்த்து கணக்கிட்டு அபராதம் வசூலிக்கப்படும் என்றும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

இதன் மூலம் 25 கோடி வங்கி வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று வங்கி நிர்வாகம் கூறியுள்ளது.

வாடிக்கையாளர்களின் கருத்துகள் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் அபராதத் தொகை குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதை கணக்கில் கொண்டு எடுக்கப்பட்ட முயற்சி இது என்று எஸ்பிஐ நிர்வாக இயக்குநர் பி.கே. குப்தா கூறினார்.

மேலும் வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கில் இருந்து நேரடியாக அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு (Basic Savings Bank Deposit Account) என்ற கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம். அந்த சேமிப்பு கணக்கில் எந்தவிதமான வரியும் விதிக்கப்படுவதில்லை என்றும் குப்தா தெரிவித்தார்.

எஸ்பிஐ வங்கியில் 41 கோடி வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இதில் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா, பிஎஸ்பிடி மற்றும் ஓய்வூதியதாரர்கள், சிறார்கள், சமூக பாதுகாப்பு பயன் பெறுவோர் உள்ளிட்ட 16 கோடி வாடிக்கையாளர்களிடம் இருந்து குறைந்தபட்ச இருப்புத்தொகைக்கான அபராதத் தொகை வசூலிக்கப்படுவதில்லை.