இலங்கைக்கு எதிரான முத்தரப்பு ‘டுவென்டி-20’ போட்டி: இந்தியா சூப்பர் வெற்றி

பதிவு செய்த நாள் : 13 மார்ச் 2018 00:10


கொழும்பு:

இலங்கைக்கு எதிரான முத்தரப்பு ‘டுவென்டி-20’ லீக் போட்டியில் ஷர்துல் தாக்கூர் (4 விக்கெட்), பாண்டே (42*), தினேஷ் கார்த்திக் (39*) கைகொடுக்க இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

இலங்கை தனது 70வது சுதந்திரதினத்தை முன்னிட்டு முத்தரப்பு ‘டுவென்டி&20’ தொடரை நடத்துகிறது. இதில், இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. முதலில் போட்டிகள் லீக் முறையில் நடக்கிறத. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோதுகிறது. பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 4வது லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மீண்டும் மோதின. மழைகாரணமாக மைதானம் ஈரப்பதத்துடன் இருந்ததால் ஆட்டம் 90 நிமிடம் தாமதமாக துவங்கியது. இதனால், இப்போட்டி 19 ஓவர்கள் கொண்டதாக நடத்தப்பட்டது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் ‘பவுலிங்கை’ தேர்வு செய்தார். இந்திய அணியில் ரிஷாப் பன்ட் இடத்தில் லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட கேப்டன் சண்டிமால் இடத்தில் லக்மல் இடம் பிடித்தார். இதையடுத்து கேப்டன் பொறுப்பை திசாரா பெரேரா ஏற்றார்.

இலங்கை அணிக்கு குணதிலகா, குசால் மெண்டிஸ் இருவரும் சமாரான துவக்கம் தந்தனர். ஷர்துல் தாக்கூர் வேகத்தில் குணதிலாக (17) சரிந்தார். அடுத்து வந்த குசால் பெரேரா (3) வாஷிங்டன் சுந்தர் ‘சுழலில்’ சிக்கினார். சூப்பர் பார்மில் உள்ள குசால் மெண்டிஸ் இந்திய பந்து வீச்சை அடித்து நொறுக்கி அரைசதம் கடந்தார். இவர் 31 பந்தில் அரைசதம் அடித்தார். விஜய் சங்கர் பந்தில் தரங்கா (22) கிளீன் போல்டானார். 11வது ஓவரில் இலங்கை 100 ரன் எடுத்தது. முக்கிய கட்டத்தில் சாகல் அணிக்கு திருப்புமுனை தந்தார். இவரது பந்து வீச்சில் குசால் மெண்டிஸ் 55 ரன் (38 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார்.

இவர் ஆட்டமிழந்த நிலையில், இந்திய பவுலர்கள் எழுச்சியுடன் பந்து வீசினர். கேப்டன் திசாரா பெரேரா (15), ஜீவன் மெண்டிஸ் (1), ஷனகா (19), தனஞ்சயா (5), சமீரா (0) ஆட்டமிழந்தனர். முடிவில் இலங்கை அணி 19 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்தது. லக்மல் (5), பிரதீப் (0) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஷர்துல் தாக்கூர் 4 (4&0&27&4) விக்கெட் வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர் 2, உனத்கட், சாகல், விஜய் சங்கர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா (11), தவான் (8) சொதப்பினர். பின் வந்த ரெய்னா சற்று அதிரடியாக விளையாடினார். இருந்தும் இவரால் களத்தில் அதிக நேரம் நீடிக்க முடியவில்லை. 15 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சர் உட்பட 27 ரன் எடுத்த நிலையில், பிரதீப் வேகத்தில் சரிந்தார். ஜீவன் மெண்டிஸ் ‘சுழலில்’ லோகேஷ் ராகுல் (18) ‘ஹிட் விக்கெட்’ முறையில் ஆட்டமிழந்தார். பின் மணிஷ் பாண்டேவுடன் தினேஷ் கார்த்திக் இணைந்தார். 12வது ஓவர் முடிவில் இந்தியா 100 ரன் கடந்தது. 8 ஓவரில் 52 ரன் தேவை என இருந்தது. இதையடுத்து மணிஷ் பாண்டே அதிரடியில் இறங்கினார். இவருடன் தினேஷ் கார்த்திக்கும் இணைந்து கொள்ள இந்தியாவின் வெற்றி எளிதானது. முடிவில் இந்திய அணி 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. மணிஷ் பாண்டே (42), தினேஷ் கார்த்திக் (39) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை தரப்பில் தனஞ்சயா 2, பிரதீப், மெண்டிஸ் தலா 1 விக்கெட் சாயத்தனர். பந்துவீச்சில் அசத்திய ஷர்துல் தாக்கூர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா இந்தியா இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2ல் வெற்றி ஒரு தோல்வி அடைந்துள்ளது. இலங்கை அணி 2 தோல்வி, ஒரு வெற்றி பெற்றுள்ளது. இதே மைதானத்தில் நாளை நடக்க உள்ள ஐந்தாவது லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்தியா எதிர்கொள்கிறது.