மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்! – 94

பதிவு செய்த நாள் : 13 மார்ச் 2018

பிறகு, திருநாவுக்கரசர் அங்கிருந்து புறப்பட்டு பழையனூர் திருவாலங்காட்டை அடைந்து, அங்குள்ள இறைவனை வணங்கி, ‘திருவாலங்காடுறையும் செல்வர் தாமே!’ என்று பெருந்திருத்தண்டகம் பாடித் தொழுது, வழிபட்டு வந்தார். பின்னர், வடதிசையிலுள்ள திருத்தலங்களை தரிசிக்க அவர் விருப்புற்றவராய், பல நெடிய மலைகளையும் காடுகளையும் கடந்து, ‘திருக்காரி  கரையை அடைந்து, அங்குள்ள இறைவனை பணிந்து சென்று, திருக்காளத்தி தலத்திற்கு வந்து சேர்ந்தார்.

 அங்கு அவர் பொன்முகலி ஆற்றில் தீர்த்தமாடி தலைவணங்கித் திருக்காளத்தி தொடர்மலையில் ஏறி திருக்காளத்திநாதரை வலம் வந்து தரிசித்து மனங்களிக்க, கண்களிக்க பரவசமடைந்து, ‘என் கண்ணுளான்’ என்னும் திருத்தண்டகத்தை பாடினார்.

 திருக்காளத்திநாதரின் மருங்குற முன்னே சிலை வடிவமாக நிற்கும் வில்வேடர் கண்ணப்ப நாயனாரின் திருவடிகளையும் அவர் சேர்த்து வணங்கி கண்ணருவி பொழிய, தலை மீது கைகுவித்துக் கும்பிட்டபடியே வெளியே வந்து திருமலையில் திருப்பணிகளை செய்து கொண்டு தங்கியிருந்தார்.

 அப்போது, தென் கயிலையாகிய திருக்காளத்தி, அவருக்கு வடகயிலையை நினைவூட்டியது.  அந்த வடகயிலையையும் காணவேண்டும் என்று அவர் பெரும் வேட்கையும் உறுதியும் கொண்டு வடதிசை நோக்கி யாத்திரை புறப்பட்டு மலைகளையும், காட்டாறுகளை யும் கடந்து சென்று, திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) என்னும் சிவத்தலத்தை அடைந்தார். அங்குள்ள இறைவனை அவர் தமிழ்ப்பதிகம் பாடி துதித்தார்.

சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலாயத்தைக் காணவேண்டும் என்று பேராவல் உந்தித் தள்ளவே திருநாவுக்கரசு விரைந்து சிவனடியார்கள் புடைசூழ காடுகள், மலைகள், ஆறுகள், முதலானவற்றையெல்லாம் தாண்டி, மாளவ தேசத்தையும், லாட தேசத்தையும்,

(இது வங்காளத்தின் ஒரு பகுதி) மத்திய பிரதேசத்தையும் கடந்து, கங்கை நதி  வலஞ் செய்யும் வாரணாசியை (ஸ்ரீகாசி) அடைந்து, காசி விஸ்வநாதரை தரிசித்து வணங்கினார்.  பிறகு, அவர் தம்முடன் வந்த அடியார்களை, அங்கேயே நிறுத்திவிட்டு, கங்கை நதிக்கரையைச் சூழ்ந்திருக்கும் பகுதிகளைக் கடந்து கற்பாறைகள் நிரம்பிய மலைக் கானல்களை அடைந்தார்.

 மனிதர்கள் நடக்கக்கூடிய  வழியில்லாத கற்கள் நிறைந்த கானகங்களின் வழியாக அவர் நடந்தார். அதுமட்டுமன்றி, திருக்கயிலையை விரைவில் காணவேண்டும் என்ற பெருங்காதலினால், காய், கனி, கிழங்கு முதலியவற்றை உண்பதையும் விடுத்து தன்னந்தனியராக விரைந்து சென்றார். இரவு, பகல் என்று கூடப் பாராமல் ஓயாமல் நடந்து கொண்டேயிருந்தார்.

 அவ்வாறு அந்த அன்பர் இரவிலும் பக்தி சிரத்தையோடு நடந்து செல்லும்போது, கொடிய காட்டு மிருகங்கள் அவரை நெருங்கித் தீமை புரியவும் அஞ்சி, விலகும். விஷம் உமிழும் பாம்புகளோ தங்கள் படங்களில் நாகமணிகளை விரித்துக் காட்டி விளக்கேந்தி வழிகாட்டும்!

 பகற்பொழுதில் வெயில் கொளுத்தும் போதோ, கானகத்து நடை வழியெல்லாம் பாதங்களைச் சுட்டெரிக்கும். ஆயினும் உறுதியுள்ளம் வாய்ந்த திருநாவுக்கரசரோ கயிலை செல்ல வேண்டும் என்று

பெருங்காதல் ஒன்றே குறியாக இரவிலும், பகலிலும் சிறிதும் அயராமல் அருஞ்சுரத்தில் நடந்து போய்க் கொண்டேயிருந்தார். நடந்து நடந்து தாமரைப் மலரைப் போன்ற அவருடைய பாதங்கள் தேய்ந்து, கணுக்கால் அளவு சதையும் பிய்ந்துவிட்டது. ஆயினும் உமையொரு பாங்கர் வீற்றிருக்கும் திருக்கயிலையை காணவேண்டுமென்ற சிந்தையை திருநாவுக்கரசர் மறப்பாரோ?  கால்கள் போனாலென்ன, கைகள் இருக்கின்றனவே என்று நினைத்து அவர் தம் இரு கைகளாலும் தாவித் தாவிச் சென்றார். கைகளும் தேய்ந்து மணிக்கட்டுவரைக் கரைந்து சிதைந்தது.

அதன் பிறகு பருக்கைக் கற்கள் அனற்புகை வீசும் வழியில் அன்பர் தன் மார்பினாலே ஊர்ந்து சென்றார். மார்பும் நைந்து தேய்ந்தது. அறன் இட்டு எலும்புகளும் முறிந்தன. சதை பிய்ந்து இனிக் கயிலைக்குச் செல்ல முடியாது என்ற அறிகுறி தோன்றினாலும், சிந்தையில் சிவநேசம் உந்தித் தள்ளியதால் கயிலை காணவேண்டும் என்ற ஒரே ஆர்வத்தோடு அவர் புரண்டு புரண்டு நகர்ந்தார்.

உடம்பிலுள்ள ஊன் அனைத்தும், கரைந்தொழிந்தது. அப்புறம் புரள்கிற அங்கமெல்லாம் கரைந்து தேய்ந்திடவே தம் சிந்தையாவது கயிலைக்குச் செல்லட்டும் என்ற ஆவலோடு அவர் தம் உடம்பிலுள்ள உறுப்புகள் அனைத்தும் அழிந்த பிறகும் அவர் மெல்ல மெல்ல தம்மை உந்தித் தள்ளி நகர முயன்றார்.

அதற்கு மேல் அவர் செயலற்றுவிட்டார். அந்நிலையில், அவர் மூலமாக இன்னும் தீந்தமிழ் பாடல்கள் வெளிவருதல் வேண்டும் என்ற திருவுளங் கொண்ட சிவபெருமான், தம் அடியார் திருக்கோயிலை அடைவதற்கு அருள் புரியாமல், அவர் செயலற்று கிடந்த இடத்தின் அருகே, ஒரு தடாகத்தை தோற்றுவித்தார். பிறகு அவர் ஒரு முனிவர் போல் வடிவமெடுத்து அப்பர்முன்    

வந்து உற்றுப் பார்த்து, ‘உம் உறுப்புக்கள் எல்லாம் சிதைந்து அழியும்படி நீர் இந்த கொடிய காட்டில் வந்ததன் நோக்கம் என்ன?’ என்று கேட்டார்.

  இடையில் மரவுரி ஆடையையும், மார்பில் பூணூலையும், தலையில் சடையையும் பார்த்தவுடன், அப்பர் சுவாமிகளுக்குப் பேசும் ஆற்றல் வந்தது. ‘ஐயனே!  வடகயிலையில் சிவபெருமான் மலைமகளுடன் வீற்றிருக்கும் திருக்கோலத்தை அடியேன் கண்டு வணங்க வேண்டும் என்ற பெருங்காதலால் இங்கு வந்தேன். முனிவரே! இதுதான்  நான் கொண்ட குறிப்பு’ என்றார்.

 அது கேட்ட அந்த முனிவர், ‘கயிலைக் காட்சியா? அது தேவர்க்கும் கிட்டுவது அரிதாயிற்றே! அப்படியிருக்க பூவுலகத்து மானிடருக்கும் அது எளிதில் கிட்டுமோ?’ என்றார்.