கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 118

பதிவு செய்த நாள் : 12 மார்ச் 2018மேல்நாடு சென்று மேலுலகம் அடைந்த மேலான பிரபலங்கள்!

யாரும் எதிர் பாராதவிதமாக ஸ்ரீதேவி துபாய் சென்று  மறைந்துபோனதும், எத்தனையோ பேருக்கு அவரைப் பற்றிப் பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. அவருக்கு நெருக்கமானவர்களும், அவருடன் பல படங்களில் நடித்தவர்களும், அவரைப் பற்றிப் பேசினார்கள். நம்பமுடியாத சம்பவத்தின் தாக்கத்தை மென்று விழுங்கி,  எதையோ நினைத்து எதையோ பேசிக்கொண்டிருந்தார்கள்! ஸ்ரீதேவியின் வாழ்க்கை எந்தப் பாதையில் சென்றுகொண்டிருந்தது, அவருடைய வாழ்க்கை ஏன் இப்படியொரு இன்னலை சந்தித்திருக்கக்கூடும் என்பதையெல்லாம் யாரும் எண்ணிப் பார்க்கத்துணியவில்லை. ஆனது ஆச்சு, போனது போச்சு, அவர் நினைவைப் போற்றுவோம் என்பது அவர்களுடைய எண்ணமாக இருந்திருக்கலாம்.

ஒருவிதத்தில் பார்த்தால் அதுவும் நல்ல விஷயம்தான். குப்பையைக் கிளறுவதால் நிரந்தர ‘குட்பை’ சொல்லியோ சொல்லாமலோ போனவர், திரும்பியா வரப்போகிறார்?

இதற்கு நேர் எதிராக, சில மீடியாக்காரர்கள் ஸ்ரீதேவி மூழ்கி இறந்ததாகக் கூறப்பட்ட குளியல் தொட்டியின் அகல நீளங்களை கணக்கெடுத்து, அவர்களே தொட்டியில் நீச்சல் அடித்துக்கொண்டிருந்தார்கள்!

அவர்கள் இப்படி  தங்களை துப்பறியும் நிபுணர்களாக நினைத்துக்கொண்டிருக்க, என்ன இது துப்புக்கெட்டத்தனமான ஜர்னலிஸம் என்று சிலர் துப்பினார்கள்!  

ஸ்ரீதேவியைக் குறித்துக் கருத்துத்தெரிவித்தவர்கள் இடையே உருப்படியாகப்பேசினார் ராம்கோபால் வர்மா. அவர் ஸ்ரீதேவியை வைத்து ‘க்ஷணக்ஷணம்’ என்கிற த்ரில்லர் படம் எடுத்தவர். துபாயில் ஸ்ரீதேவி இறந்த செய்தி கேட்டு, மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பவர்போல் பேசினார் வர்மா.

ஸ்ரீதேவியை ‘சினிமா ராணி’ என்று உலகம் கைத்தட்டி குதூகலித்ததே, அவர் தன்னைப் பற்றி என்ன நினைத்தார் என்று கேள்வி கேட்டார், ராம்கோபால் வர்மா!

உலகம் எவ்வளவுதான் புகழ்ந்தாலும் சிலருக்குத் தங்களைப் பற்றிய மதிப்பான எண்ணம் இருக்காதாம்.  அப்படிப்பட்டவர்தான் ஸ்ரீதேவி என்று அவர் நினைத்தார்.

இப்படிப்பட்ட தன்னுடைய உள்மனதை யாராவது அறிந்துகொண்டுவிடுவார்களோ என்று ஸ்ரீதேவி தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் போல் இட்டு யாரையும் அண்ட விடமாட்டார் என்றெல்லாம் வர்மா பேசினார். ஸ்ரீதேவியுடன் தான் பழகியதை வைத்து, மனோதத்துவரீதியிலான அவருடைய கணிப்பு அது.

சில பிரபலங்களுக்குத் திருமணம் போன்ற சந்தோஷமான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிறகு, உலகமே மகிழ்ச்சியாக இருக்கிறது, ஆனால், நம்முடைய உள்ளத்தில் மட்டும் தனிமையும் இருளும் படர்ந்திருக்கிறது என்கிற மனச்சோர்வு (டிப்ரெஷன்) ஏற்படுமாம்!

தன்னுடைய நாடு, தன்னுடைய நகரம், தன்னுடைய மக்கள், தன்னுடைய உற்றார் உறவினர், தன்னுடைய ரசிகர்கள் என்று யாரும் இல்லாத அயல்நாட்டில் ஸ்ரீதேவியின் இதுபோன்ற மனச்சோர்வு அதிகரித்திருக்கலாம். அதுதான் அங்கேயே அவருடைய விலகலுக்கு வழிவகுத்துவிட்டதோ என்னவோ தெரியவில்லை.  

சிலருக்கு மரணம் இந்த வகையில் அமைந்துவிடுகிறது. மேல் நாடு சென்று மேலுலகம் செல்லும்படியாக அவர்களின் முடிவு நேர்கிறது.

அப்படி போனவர்களில் இன்னொருவர், பிரபல நடிகர் ரஞ்சன். மார்ச் 2, 1918ல் பிறந்த அவருடைய இயற்பெயர், வெங்கடரமண சர்மா. சென்னை லாயிட்ஸ் சாலையில் ரஞ்சன் பில்டிங் என்ற பிரமாதமான கட்டடம் அவருக்கு சொந்தமாக இருந்தது. ஆனால், அவர் அமெரிக்காவில் இருந்தபோது, 12.09.83 அன்று  தனிமையில் மறைந்தார். இத்தனைக்கும் அவர் ஒன்பது சகோதர சகோதரிகளுடன் பிறந்தவர்!

ஒரு காலத்தில் உலகமே அவர் கைக்குள் இருப்பதுபோல் இருந்தது. ‘‘குதிரை சவாரி, காரோட்டம் என்பவை எல்லாம் அவருக்குத் தண்ணிப்பட்ட பாடு...இப்போது அவர் விமானம் ஓட்டிப்பழகுகிறார்,’’ என்ற செய்தி, இந்தியா சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் வெளிவந்தது.

தமிழ் சினிமாவில் முதல் சகலகலாவல்லவர் ரஞ்சன்தான். ரஞ்சன் கத்திச் சண்டை போடுவார், பாடுவார், ஆடுவார். ‘நாட்டியம்’ என்ற மாத இதழையே நடத்தினார். சென்னைப் பல்கலைக் கழகத்தில், ‘ஜதிகள் மற்றும் தீர்மானங்களின் வகைகள்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்தார்.  அவருக்கு ஓவியம் தீட்டும் பழக்கமும் இருந்தது.  

தியாகராஜ பாகவதர் நடித்த ‘அசோக்குமா’ரில், புத்தபிட்சுவாக நடித்த ரஞ்சன், ‘ரிஷ்யசிருங்க’ரில் வசுந்தரா தேவியின் ஜோடியாக நடித்தார்! வசுந்தராவை வஞ்சிக்கும் இளைய ராஜாவாகவும், வசுந்தராவின் மகனாகவும் ‘மங்கம்மா சபத’த்தில் மாறுபட்ட இரு வேடங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் ரஞ்சன்.

 தென்னாட்டு சினிமா ‘சந்திரலேகா’வின் வாயிலாக இந்தி சினிமா உலகத்தின் மீது படையெடுத்து வெற்றி கண்டது. ‘சந்திரலேகா’வின் அக்கிரம வில்லனாக அகில பாரதப் புகழ்பெற்றார் ரஞ்சன்.

‘அபூர்வ சகோதரர்க’ளின் இந்திப் பதிப்பான ‘நிஷா’னில் ரஞ்சன்தான் இரட்டை வேடங்களில் நடித்தார்.  மும்பைக்கே இடம்பெயர்ந்து,  முப்பது இந்திப் படங்களுக்கு மேல் நடித்தார்.

‘ஆக்ஷ்ன் ஹீரோ’ என்ற பெயரும்  முத்திரையும் அவரை இந்தி சினிமாவில் ஓர் இரண்டாந்தர நாயகனாக ஆக்கிவிட்டன. ஆனால், பலரை வெளுத்து வாங்கிய பிலிம் இண்டியா பத்திரிகையின் ஆசிரியர் பாபுராவ் படேல் போன்றவர்கள் ரஞ்சனைப் புகழ்ந்து தள்ளினார்கள்!  ஏனென்றால், ரஞ்சன் ஒரு அறிவுஜீவி. அவருக்கு  பரதநாட்டியம் ஆடவும் தெரியும், அதைப் பற்றி ஆராய்ச்சி செய்யவும் தெரியும். கர்நாடக சங்கீதம் பாடவும் தெரியும்...அதைப் பற்றிய ஆழமான உணர்வும் அவருக்கு இருந்தது.

மும்பைக்கும் சென்னைக்கும் இடையே பறந்து கொண்டிருந்த ரஞ்சன், இடைக்காலத்தில் இரண்டு நகரங்களுக்கும் அந்நியப்பட்டுப்போனார். எழுபதுகளில் அவருக்குப் மும்பையில் ஒத்தமனம் உள்ள சரியான பேச்சுத்துணை கூட இல்லாமல் போனது!

அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்ற ரஞ்சனுக்கு அமெரிக்கா சரியான புகலிடமாக அமைந்துபோயிற்று.

கலைத்தேனீயாக விளங்கிய ரஞ்சன், தன்னுடைய நாட்டிற்கும் மக்களுக்கும் ஆயிரமாயிரம் மைல்களுக்கு அப்பால்  மறைந்து போனார். இதுவும் அவருக்கு ஏற்புடையதாகக் கூட இருந்திருக்கலாம். 1956ல் வந்த ஒரு செய்தி ரஞ்சனைப் பற்றி இப்படி கூறியது– -- ‘‘அவர் போலந்து, ரஷ்ய நாடுகளுக்கு சென்றுவிட்டு, பீக்கிங் வழியாக ஹாங்காங் சென்று பாங்காக்கை அடைந்து அங்கிருந்து மும்பை திரும்பியிருக்கிறார்!’’

இப்படியெல்லாம் சுற்றியவர், நியூ ஜெர்ஸி நகரின் ஓர் ஓட்டலில் மறைந்தார். சொந்த நாட்டில் மட்டுமல்ல, சொந்த வீட்டில் காலமாகும் யோகம்கூட இல்லை ரஞ்சனுக்கு! ஏறக்குறைய ஸ்ரீதேவியைப்போலத்தான். என்ன,  மாரடைப்பால் ரஞ்சன் பொசுக்கென்று போய்விட்டார். ஸ்ரீதேவி நிலையும் அப்படித்தான் என்று முதலில் செய்தி வந்தது. ஆனால் அது தவறு என்று பின்பு தெரிந்தது. அயல் நாட்டில் போனார் என்பதுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்தார் என்பது ஸ்ரீதேவியின் மறைவினுடைய தன்மை.

ஸ்ரீதேவியைப் போல், 54வது வயதில் காலமானவர் கண்ணதாசன்! அதுமட்டும்தானா ஒற்றுமை என்று கேட்பவர்கள்கூட உண்டு! கண்ணதாசனும் அயல்நாட்டிற்குப் பயணமாகி,  அங்கேயே காலமானவர்தான். சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, சளித்தொல்லை என்று பலதையும் வைத்துக்கொண்டுதான் அமெரிக்காவிற்குப் பயணமானார் கண்ணதாசன். பயணத்தைத் தொடரலாமா, சென்னை திரும்பிவிடலாமா என்ற ஊசலாட்டத்திலே மனம் இருந்தாலும், அவர் அயல்நாட்டில் மறைய வேண்டும் என்ற விதி அவரை முந்தித்தள்ளியது.

டெட்ராய்ட் தமிழ் சங்கத்தில் அவருடைய சொற்பொழிவுக்கு ஏற்பாடாகியிருந்தது. தமிழின் பெருமையைப் பற்றி, சிரிக்கச் சிரிக்கப் பேசினார் கண்ணதாசன்.

‘‘எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும், உள்ள நிலை பாதிக்கப்படவில்லை....(என்னை அழைத்து) அவ்வளவு சொல்லி, எனக்கு லெட்டர்கள் எல்லாம் போட்டார்கள். ஒரு மனிதன் அமெரிக்காவைப் பார்க்காமல் சாகக்கூடாது...ஏனென்றால் ஜனநாயகத்திலே இங்குதான் உச்சம். இனிமேல் வேறெந்த நாடும் இதுபோல் வரப்போவதில்லை,’’ என்றார் கண்ணதாசன். சாவைப் பற்றிப் பேசத்தேவையில்லாத சூழ்நிலை. ஆனாலும் தன்னுடைய உடல்நிலையைப் பற்றித் தெரிவித்து, சாவையும் குறிப்பிட்டார் கண்ணதாசன். பேச்சின் இடையே இருமல் தொடர்ந்து வந்து தொந்தரவு செய்தது. ஆனால் அந்த நீண்ட சொற்பொழிவை அவர் வெற்றிகரமாக முடித்தார். பல முறை கரகோஷங்கள் வாங்கினார்.

தமிழ் சினிமாவிற்கு கண்ணதாசன் திரைப்பாடல் ஆசிரியராக அறிமுகமாகி முப்பது ஆண்டுகளுக்குமேல் ஆகியிருந்த காலகட்டம் அது. ‘யுகக்கவிஞன்’ என்று பி.பி. ஸ்ரீநிவாஸ் வர்ணித்த கண்ணதாசன், மருத்துவப் பரிசோதனைகளுக் காகத்தான் சிக்காகோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனை அவருக்கு சோதனையாக அமைந்துவிட்டது. தன்னுடைய கடைசி சஞ்சாரத்தில் இருந்த அவருடைய உடல், பரிசோதனை என்ற வெளிச்சத்தைக்கூட தாங்க முடியாமல் துவண்டது.

மாதக் கணக்கில் தொடர்ந்த தீவிர மருத்துவ சிகிச்சைகளின் ஊசலாட்டங்களுக்கு இடையே, அக்டோபர் 17, 1981 அன்று கண்ணதாசன் சிகாகோ மருத்துவ மனையில் காலமானார். ஸ்ரீதேவியின் உடல் அழகாக ‘எம்பாம்’ செய்யப்பட்டு  துபாயிலிருந்து மும்பைக்கு வந்ததுபோல், கண்ணதாசனின் உடலும் விமானம் மூலம் சென்னை வந்தது. அயல்நாடுகளில் உயிர் பிரிய நேர்ந்து, இப்படி வானமார்க்கமாக  ஸ்ரீதேவி, கண்ணதாசன் போன்றோரின் உடல் வந்து சேர்ந்ததென்றால், லண்டனிலிருந்து விமானத்தில் வரும் போது  உயிர் பிரிந்த ஒரு விசித்திரம், ‘அருள்மொழி அரசு’ கிருபானந்த வாரியார் விஷயத்தில், 97.11.1993 அன்று நடந்தது. அப்போது அவருக்கு 87 வயது.  

ஆத்திகத்தைப் பரப்புவதில் அவருக்கு நிகர் யாரும் இல்லை என்று இந்து சமய உலகம் போற்றும்படி வாழ்ந்த பெரியவரின்  வாழ்க்கை, லண்டனிலும் அதே வேலையை செய்துவிட்டு வரும்போது ஆகாயத்தில் முற்றுப்பெற்றது!

 அழகாகப் பேசியும் அதற்கேற்றபடி பாடியும் உயர்ந்த கருத்துக்களை மட்டும் வாரியார் முன்வைக்கவில்லை. தான் ஈட்டிய பொருளால் எண்ணற்ற கோயில்களுக்கு குடமுழுக்கு செய்தும்வைத்தார்.  இந்து சமயத்தை ஏளனம் செய்வதை  வாடிக்கையாகக் கொண்டிருந்தவர்கள் ஆட்சிக்கு வந்த காலத்திலும், அவருடைய அருட்கொடி அட்டகாசமாக வானத்தில் பறந்தது. இந்த விஷயத்தில் அவர் திரைத்துறையையும் விலக்கி வைக்கவில்லை. சின்னப்ப தேவர் எடுத்த ‘துணைவன்’, ‘திருவருள்’, ‘தெய்வம்’ முதலிய படங்களில் இடம்பெற்று, படச்சுருள் வாயிலாகவும் மடமை இருளை போக்கினார்! ‘மிருதங்க சக்ரவர்த்தி’, ‘நவக்கிரகநாயகி’, ‘கந்தர் அலங்காரம்’ ஆகிய படங்களிலும் வாரியார் வாரியாகவே வந்து தன்னுடைய பணியைத்தொடர்ந்தார். அவருடைய ஆன்மிக சேவைக்கு ஏற்றாற்போல், அவருடைய கடைசி யாத்திரையும் நிறைவடைந்தது.  

(தொடரும்)