ஒரு பேனாவின் பயணம் – 149– சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 12 மார்ச் 2018

கல்கி ஒரு ஜாலக்காரர்!

மறுநாள் புரட்சிக்காரர்கள் முசோலினியையும், அவர் காதலி கிளாராவையும் ஒரே காரில் அழைத்துப் போனார்கள்.

மலைப்பகுதியிலிருந்து கீழே இறங்கியதும், காரை நிறுத்தினார்கள். முசோலினியையும், காதலி கிளாராவையும்  காரை விட்டு வெளியே கொண்டு வந்தார்கள்.

கீழே இறங்கியதும் இருவரையும் நடுரோட்டில் நிற்க வைத்தார்கள். தங்களை சுடப்போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட கிளாரா, முசோலினியின் முன்னால் வந்து நின்று `முதலில் என்னைச் சுடுங்கள்’ என்றாள்.

எந்திர துப்பாக்கிகளால் புரட்சிக்காரர்கள் சரமாரியாகச் சுட்டார்கள். இருவர் உடல்களும் குண்டுகளால் துளைக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் மிதந்தன.

முசோலினிக்கு உதவியாக இருந்த வேறு சிலரையும் சுட்டுக் கொன்றார்கள். முசோலினியின் உடலையும், மற்றவர்களின் உடல்களையும் புரட்சிக்காரர்கள் மிலான் நகருக்கு கொண்டு சென்றார்கள். அங்கு விளக்குக் கம்பத்தில் தலைகீழாக தொங்க விட்டார்கள்.

அன்று மாலை உடல்கள் இறக்கப்பட்டு அடையாளம் தெரியாத இடத்துக்கு கொண்டு போகப்பட்டு புதைக்கப்பட்டன.

புதைப்பதற்கு முன் குற்ற இயல் ஆராய்ச்சி நிபுணர்கள்  வந்து, முசோலினியின் மண்டை ஓட்டை பிளந்து அவருடைய மூளையை எடுத்துச் சென்றுவிட்டார்கள்–  ஆராய்ச்சி செய்வதற்காக!

என்னை ஒரு பத்திரிகையாளனாக்கிக் கொள்ள வேண்டுமென்றால் நிறைய தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக நிறைய படித்தேன்.

நான் படிக்க, படிக்க, அது என்னுள் ஒரு தன்னம்பிக்கையை விதைத்தது. அந்த நம்பிக்கை வளரும்போது கூடவே இன்னொரு எண்ணமும் வளர ஆரம்பித்தது. `நான் இந்த ஜனசமுத்திரத்தில் பத்தோடு பதினொன்றாக இருக்க போவதில்லை. எனக்கென்று ஒரு தனி அடையாளத்தை தேடிக் கொள்வேன்’ என்கிற எண்ணமும் வளர்ந்தது.

இதற்கிடையில் என் கையெழுத்து பத்திரிகையின் முதல் இதழ் நாங்கள் குடியிருந்த பகுதியிலிருந்த சில வீடுகளுக்கு போய் வந்தது. `வேறு ஏதாவது உருப்படியான வேலையை பாக்கக்கூடாதா?’ என்று கேட்டவர்களும் உண்டு.

சிலர் என்னை அழைத்துப் பேசினார்கள்.  என் எழுத்தை பாராட்ட ஆரம்பித்தார்கள். அந்தத் தெருவில் அப்போது இருந்த குடியிருப்போர் சங்கத்தின் செயலாளர் ராமச்சந்திரன், அவர் இந்தியன் வங்கியில் பெரிய பதவியில் இருந்தார்.

என் கையெழுத்து பிரதியை முழுமையாக படித்திருந்தார்.

ஒரு நாள் அவர் என்னை அழைத்து, `நீ ஜர்னலிஸ்ட்டாகிறதுன்னு முடிவு பண்ணிட்டியா? என்று கேட்டார்.

`நான் பத்திரிகையாளனா வேனான்னு எனக்குத் தெரியாது. ஆனால் இப்ப எனக்கு நிறைய எழுதுற ஆசை வந்திருக்கு’ என்றேன்.

`அடுத்த இதழ் எப்போ கொண்டு வருவே?’  என கேட்டார்.

`இது மாதம் ஒரு முறை பத்திரிகை. அதனால அடுத்த மாதம்தான் அடுத்த இதழை கொண்டு வரணும்’ என்றேன்.

அப்போது 1980ம் வருட நவமபர் மாதம். அவர் சொன்னார். `அப்படீன்னா அடுத்த இதழ்ல  இந்தியா சம்பந்தப்பட்ட ஒரு சர்வதேச  விஷயம் குறித்து எழுது’ என்றார்.

`எனக்கு அகில இந்திய அரசியல் அதிகமா தெரியாதே’ என்றேன்.

`தெரிஞ்சுக்கணும். உனக்கு ஒரு ஹிண்ட் கொடுக்கிறேன். அதிலே இருந்து நீ பிடிச்சுக்கிறியான்னு பாப்போம்.  இப்போ இந்திரா காந்தி மீண்டும் பிரதமராயிட்டாங்க.’ சொல்லிவிட்டு  உள்ளே போனார். சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்தார்.  கையில் சில நாளிதழ்கள் வைத்திருந்தார். எல்லாமே ஆங்கில நாளிதழ்கள்தான். ‘பார் இந்திரா காந்தி பிரதமரானதும் யாரெல்லாம் இந்தியாவுக்கு வந்திருக்காங்கன்னு’. பத்திரிகைகளை காட்டினார். இந்திரா காந்தி பதவி ஏற்ற சில மாதங்களிலேயே பல நாட்டு தலைவர்கள் வந்து இந்திரா காந்தியை சந்தித்து விட்டுப் போன செய்திகள் அதில் இருந்தன.

`இதெல்லாம் வச்சு, அடுத்த இதழ்ல என்னை எழுதுறேன்னு பாக்கிறேன்’ என்றார்.

என் தலையில் ஏதோ ஒரு பாரத்தை வைத்தாற்போல் உணர்ந்தேன். நான் ஏதோ விளையாட்டுப் போக்கில்  எனக்கு தெரிந்ததை எழுதலாமென்று கையெழுத்து பத்திரிகை ஆரம்பித்தால், இந்த மனிதர் பெரிய பாரத்தை என் தலைமீது சுமத்துகிறாரே. அப்போது நான் மாலை நேரக் கல்லூரியில் பி.காம். வேறு சேர்ந்திருந்தேன். படிப்பு வேறு தலையைக் குடைந்தது. ஆனால், கல்லூரி படிப்பில் அத்தனை ஆர்வம் எனக்கு இருக்கவில்லை. `ஒரு டிகிரியாவது இல்லேன்னா யாரும் உன்னை மதிக்கமாட்டாங்க’ என்று வீட்டுப் பெரியவர்கள் சொன்னதற்காக கல்லூரியில் சேர்ந்திருந்தேன்.

படிக்க கல்லூரி புத்தகங்களை எடுத்தாலே எனக்கு அவர் காட்டிய ஆங்கில நாளிதழ்களும், இந்திரா காந்தியின் முகமுமே வந்து கொண்டிருந்தது.

டிசம்பர் மாதம் செமஸ்டர் பரீட்சை வேறு!

பரீட்சையை விட குடியிருப்போர் சங்கச் செயலாளர் எனக்குக் கொடுத்திருந்த பரீட்சைதான் எனக்கு அதிக முக்கியமாக பட்டது.

எங்கள் வீட்டில் இந்து நாளிதழ் வாங்குவதுண்டு. நான் அப்போது வேலைக்கும் போய் கொண்டிருந்ததால், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையும் வாங்க ஆரம்பித்தேன். அப்பாவுக்கு பிடித்த நாளிதழ், தினமணி. அதை படிக்காமல் அவர் தன் நாளை துவக்க மாட்டார்.  அப்போது தினமணிக்கு ஆசிரியராக இருந்தவர் ஏ.என். சிவராமன். அவர் பல்வேறு பெயர்களில் கட்டுரை எழுதுவார். எல்லா விஷயங்களைப் பற்றியும் எழுதுவார். `கணக்கன்’ என்பது அவரது புகழ்பெற்ற புனைப்பெயர். அதில் உலக விஷயங்கள் பற்றியெல்லாம் மிக எளிமையாக விளக்குவார்.

`பத்திரிகையில எழுதணும்னா ஏ.என். சிவராமன் கட்டுரைகளை படி’ என்று அப்பா அடிக்கடி சொல்லுவார்.

நாளிதழ்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

பல நாட்டு தலைவர்கள் இந்தியா வந்து போய்க் கொண்டிருந்தார்கள். பிரான்ஸ் அதிபர்  கிஸ்கார்ட் டி எஸ்டாய்ங்  வங்காளதேச அதிபர்  முஜிபுர் ரஹ்மான்,  சாம்பியாவின் கென்னத் கவுண்டா, பாலஸ்தீனத்தின் யாசர் அராபத், ரஷ்யாவின்  வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரூ கிரம்யகோ, அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஜிம்மி கார்டரின் விசேஷ தூதர், ஜப்பானிலிருந்து ஒரு மூத்த அமைச்சர் எல்லோரும் இங்கே வந்து போனார்கள்.

மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் இந்திரா காந்தியின் அப்போதைய மனநிலையை தெரிந்து கொள்வதற்காகவே அவர்கள் வந்து போனார்கள். அதற்குக் காரணம் இருந்தது.

உலகத்தின் மிக சிக்கலான பகுதியின் வல்லமைமிக்க  இந்திய பிரதமர்  இந்திரா காந்தி இருக்கிறார் என்பது உலகத்தலைவர்களுக்குத் தெரியும்.   அப்போது சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் படையெடுத்திருந்தது. அதனால் இந்தியாவின் வட எல்லைகளில் அதிகார சமநிலை மாறியிருந்தது. காரணம், ரஷ்யாவின் ஆப்கானிஸ்தான் படையெடுப்பினால் இந்து மகான் கடலில் அமெரிக்கா தனது இருப்பை காட்ட வேண்டியது தவிர்க்க முடியாததாகிப்போனது.

அப்போது இந்தியாவுக்கு சோவியத் யூனியனோடு நல்ல உறவு இருந்தது.  அதனால் அமெரிக்கா-, ரஷ்யா என்கிற இரண்டு வல்லரசுகளோடும் நடுவராக இருந்து பேச்சு நடத்த இந்தியாவால் முடியும் என்கிற நிலை இருந்தது.

மிகவும் ஆபத்தான ஒரு சர்வதேச சிக்கலை தான் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்ந்தே இருந்தார் இந்திரா. ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் கிரம்யகோவிடம் தனியாக பேசும்போது, இந்த படையெடுப்பை குறித்து தனது பதட்டத்தையும், வருத்தத்தையும் இந்திரா காந்தி தெரிவித்தார். அதே சமயம், வெளிப்படையாக ரஷ்யாவை விமர்சிக்க மாட்டேன் என்றும் சொல்லியிருந்தார்.

அதே சமயம் அமெரிக்க பிரதிநிதிகளோடு பேசும்போது மிகவும் எச்சரிக்கையாகவே இருந்தார். பட்டும் படாமலுமே பேசிக்கொண்டிருந்தார். அதே சமயம்,  ரஷ்யாவின் இந்த படையெடுப்பினால் இந்தியாவும் -பாகிஸ்தானும் முன்னணி தேசங்கள் ஆகிவிட்டன என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டார். அமெரிக்கா எச்சரிக்கையான அணுகுமுறையை கையாளும் என்று எதிர்பார்த்தார் இந்திரா. அதே சமயம் பாகிஸ்தானுக்கு அவர்கள் ஆயுதமளிப்பார்களா என்பது குறித்தும் விசாரித்துக் கொண்டிருந்தார்.

 அப்போது இந்திராவை சந்திக்க ஆஸ்திரியாவின் முன்னாள் அதிபர் புரூனோ கிரியஸ்கி வந்திருந்தார். அவரிடம் `எங்கள் எல்லைகளில், அண்டை நாட்டில் இரண்டு பெரிய வல்லரசுகள் நடத்தப்போகும் போரின் அதிர்வுகளை நான் இப்போதே உணரத் துவங்கிவிட்டேன்’ என்றார் இந்திரா காந்தி!

சர்வதேச பத்திரிகையாளர்கள் இந்திராவை சூழ்ந்து கொண்டே இருந்தார்கள். அப்போது அமெரிக்காவின் நியூஸ்வீக் பத்திரிகைக்கும் இந்திரா ஒரு முறை பேட்டி அளித்தார். `நாங்கள் அமெரிக்காவை பலவீனமாக பார்க்க விரும்பவில்லை. அதே சமயம், எங்களுக்கு அருகாமையில் பதட்டம் ஏற்படுத்தும் எந்த முடிவுகளையும் அவர்கள் எடுக்கமாட்டார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.  அதே சமயம், மேற்கத்திய நாடான அமெரிக்கா எங்கள் நாட்டில் ஜனதா கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அதே சமயம் ரஷ்யாவும் நாங்கள் பலவீனமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. அப்போதுதான் நாங்கள் இந்தியாவிலிருக்கும் இடதுசாரிகளை நம்பி இருப்போம் என்று நினைக்கிறார்கள்’ என்றார் இந்திரா காந்தி.

இதையெல்லாம் நான் ஆங்கில நாளிதழ்கள் மூலமாக படித்துத் தெரிந்து கொண்டிருந்தேன். ஏதோ ஒரு சர்வதேச பத்திரிகையின் ஆசிரியர் என்கிற தொனியில் நான் என் அடுத்த இதழுக்கு தயார் செய்து கொண்டிருந்தேன். அதே சமயம் செமஸ்டர் பரீட்சை வேறு வந்து பயமுறுத்தியது. அடுத்த இதழ் கையெழுத்து பத்திரிகையை கொண்டுவராவிட்டால், என்னிடம் அதற்கு மேல் சரக்கில்லை என்று நினைத்துவிடுவார்களோ என்கிற கலக்கமும் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.அப்போது அப்பாதான் துணைக்கு வந்தார். `இந்தா பாரு, நீ உன் கையெழுத்து பத்திரிகையிலே வாரப் பத்திரிகைன்னோ, மாத பத்திரிகைன்னோ போடலே. அதனால் பரீட்சையை முடிச்சிட்டு நிம்மதியா பத்திரிகையிலே கவனம் செலுத்து. அப்போதான் பத்திரிகையை நல்லா கொண்டு வர முடியும்.  பரீட்சை டென்ஷன்ல பத்திரிகை கொண்டு வந்தா அது சரியாக வராது’ என்றார் அப்பா. நான் பரீட்சையில் கவனம் செலுத்த வேண்டுமென்பதை என் போக்கிலேயே விட்டு, என்னை படிக்கச் சொன்னார் அப்பா என்பது பின்னால் புரிந்தது.

அதனால், பத்திரிகையை அடுத்த மாதமே கொண்டு வரும் எண்ணத்தை ஒத்திப் போட்டேன். இப்போது என் மனபாரம் லேசாக குறைந்தது. ஆனால், இன்னொரு தாக்குதல் வந்து என் பத்திரிகை ஆர்வத்தை மேலும் தூண்டியது.

அது ஆனந்த விகடன் பொன்விழா மலர் ஏற்படுத்திய தாக்கம். அந்த மலரில் எழுத்தாளர் ஜே.எம். சாலி `பல்கலைக்கழகம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். கல்கி, பேரறிஞர் அண்ணா, டாக்டர் மு.வ. இவர்கள் மூவரையும் பற்றிய கட்டுரை அது. கட்டுரை என்னுள் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

கட்டுரையின் சாராம்சம் இதுதான்.

கல்கி மாமாங்கம்!

அது என்ன புது மாமாங்கம்?

1928ம் ஆண்டு முதல்  1940 வரை பன்னிரண்டு ஆண்டுகள், எந்தத் துறையையும் விட்டு வைக்க மாட்டேன் என்று தோள்தட்டிக்கொண்டு விகடனில் எழுதிக் குவித்தவர் கல்கி. அவருடைய மாமாங்கத்தில் சிறுகதைகள், தொடர் நாவல்கள், கட்டுரைகள், மதிப்புரைகள், விமர்சனங்கள், செய்தித்திரட்டுகள் – எல்லாமே பெருகி வந்தன விகடனில். ஆராய்ச்சியாளர்களுக்கு வேறென்ன வேண்டும்?

கல்கியின் ஆரம்பகால படைப்புகளைப் பார்வையிடவேண்டும், குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவ்வப்போது விகடன் அலுவலகத்தில்  முகாமிட்டவர்கள், முற்றுகையிட்டவர்கள் பலர்.  `பொன்னியின் புதல்வர்’ எழுதிய  எழுத்தாளர் `சுந்தா’ முதல் இன்றைய இளம் ஆய்வாளர்கள் வரை ஒரு பட்டியல் உண்டு.

ஒல்லியாக, உயரமாக, கண்ணாடி அணிந்த பேராசிரியை ஒருவர், நேரம்  போவது தெரியாமல், பழைய விகடன் தொகுதிகளைப் படித்தபடி  இருப்பார். கும்பகோணத்தில் வளர்ந்து, காரைக்குடியில் எம்.ஏ. படித்து, குரோம்பேட்டை மகளிர் கல்லூரி ஒன்றில், தமிழ் பேராசிரியையாகப் பணிபுரியும் குஜராத்தி வம்சா வழியினர். கலா தாக்கரை – ஆனந்த விகடன் அலுவலகத்திற்கு அவரை அழைத்து வந்தவர் கல்கி!  ஆமாம், கல்கியின் படைப்புகளைப் படிக்கவும், ஆராயவும் மாதக் கணக்கில் விகடன் நூல் நிலையத்தைப் பயன்படுத்திக்கொண்டவர் அவர்.

கல்கியின் வரலாற்று நாவல்களைக் குஜராத்தி எழுத்தாளர் கே.எம். முன்ஷியின் வரலாற்று நாவல்களோடு ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பவர் கலா கே. தாக்கர். அவருடைய விகடன் அனுபவம் எப்படி?

``முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காகக் கல்கியின் படைப்புகளைத் தேடிப் பல இடங்களுக்குச் சென்றேன். அவ்வகையில் கல்கியின் பெருமை வெளிப்படுவதற்கு எல்லா வாய்ப்புக்களையும் அளித்த ஆனந்த விகடன் அலுவலகம் என் முயற்சியை வரவேற்றது. விகடன் அலுவலகத்தை விடாது முற்றுகையிட்டேன். விளைவு, எனக்கென்று நூலகத்தில் ஒரு இடம் ஒதுக்கித் தந்து உதவினர். ஆனந்த விகடன் வாயிலாக, கல்கியின் படைப்புகளை படித்து எழுதுவதற்கு ஆறு மாதங்கள் செலவிட்டேன்.

ஆனந்த விகடன் இதழ்களைத் தொடக்க காலம் முதல் வரிசைப்படுத்திக் கையடக்கமான தொகுதிகளாக  அலமாரியில் செம்மைப்படுத்தி வைத்திருக்கும் அழகு முதலில் என்னை கவர்ந்தது. `என்னை எடுத்து புரட்டிப் பார். படித்துப் பார்’ எனக் கை நீட்டி அழைப்பது போல் தொகுதிகள் இருந்ததைக் கண்டேன். ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு இத்தகைய வரவேற்பும் ஆதரவும் கிடைப்பது அரிது. விகடனில் வெளிவந்த கல்கியின் படைப்புகளை விரைவில் படித்துவிட்டுக் குறிப்பெடுத்து விடலாம் என்றுதான் முதலில் நினைத்தேன்.  முடியவில்லை. கல்கி ஜாலக்காரர். ஒரு பெயரில் மட்டும் எழுதியிருந்தால் பிரச்னை இருந்திருக்காது. ஆனால்…….

(தொடரும்)