வங்கதேசம் ‘திரில்’ வெற்றி: முஷ்பிகுர் அசத்தல்

பதிவு செய்த நாள் : 11 மார்ச் 2018 00:18


கொழும்பு:

இலங்கைக்கு எதிரான முத்தரப்பு ‘டுவென்டி-20’ தொடரின் 3வது லீக் ஆட்டத்தில் முஷ்பிகுர் ரஹிம் 35 பந்தில் 72 ரன்கள் விளாச வங்கதேசம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை மண்ணில் இந்தியா, வங்கதேசம், இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு ‘டுவென்டி-20’ தொடர் நடக்கிறது. இந்த மெகா தொடரின் மூன்றாவது லீக் ஆட்டம் நேற்று நடந்தது. கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் இலங்கை வங்கதேசம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வங்கதேச கேப்டன் மகமதுல்லா முதலில் ‘பவுலிங்கை’ தேர்வு செய்தார்.

இலங்கை அணிக்கு குணதிலகா, குசால் மெண்விஸ் இருவரும் சிறப்பான துவக்கம் தந்தனர். இந்த ஜோடி 3.5 ஓவரில் 50 ரன் எடுத்தது. முஸ்டபிஜுர் வேகத்தில் குணதிலாக (26) கிளீன் போல்டானார். பின் மெண்டிசுடன் குசால் பெரேரா இணைந்தார். இருவரும் வங்கதேச பந்து வீச்சை விளாச ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. 10.2 ஓவரில் இலங்கை 100 ரன் கடந்த போது இப்போட்டியில் பெரிய ஸ்கோரை பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதிரடியாக விளையாடிய மெண்டிஸ் 26 பந்தில் அரைசதம் அடித்தார். இவரைத் தொடர்ந்து பெரேரா அரைசதம் கடந்தார். இவர் 34 பந்தில் அரைசதம் அடித்தார்.

இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 85 ரன் சேர்த்த நிலையில், மகமதுலலா பந்தில் மெண்டிஸ் ஆட்டமிழந்தார். இவர் 57 ரன் (30 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார். ஷனகா (0), கேப்டன் சண்டிமால் (2) ஏமாற்றினர். கடைசி கட்டத்தில் முஸ்டபிஜுர் ரஹ்மான் சிறப்பாக பந்து வீசினார். இவரது வேகத்தில் குசால் பெரேரா 74 ரன் (48 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்). திசாரா பெரேரா (0) ஆட்டமிழந்தனர். 19.1 ஓவரில் இலங்கை 200 ரன் எடுத்தது. ஆட்ட முடிவில் இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. தரங்கா (32), ஜீவன் மெண்டிஸ் (14) அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசம் தரப்பில் முஸ்டபிஜுர் 3, மகமதுல்லா 2, டஸ்கின் அகமது 1 விக்கெட் சாய்த்தனர்.

கடின இலக்கை துரத்திய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால், லிட்டன் தாஸ் இருவரும் சூப்பர் துவக்கம் தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 74 ரன் (5.5 ஓவர்) சேர்த்த நிலையில், பிரதீப் வேகத்தில் லிட்டன் தாஸ் சரிந்தார். இவர் 43 ரன் (19 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார். அடுத்து சவுமியா சர்க்கார் களம் வந்தார். 9.2 ஓவரில் வங்கதேசம் 100 ரன் எடுத்தது. இந்த நேரத்தில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த தமிம் இக்பால் 47 ரன் (29 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து திசாரா பெரேரா பந்தில் ஆட்டமிழந்தார்.

பின் சவுமியா சர்க்காருடன் முஷ்பிகுர் இணைந்தார். இருவரும் எதிரணி பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இருந்தும் முக்கிய கட்டத்தில் சவுமியா சர்க்கார் (24), கேப்டன் மகமதுல்லா (20), சபிர் ரஹ்மான் (0) ஆட்டமிழந்தனர். யார் போனால் என்ன நான் இருக்கிறேன் என விளையாடிய முஷ்பிகுர் 24 பந்தில் அரைசதம் அடித்தார். ஒருமுனையில் இவர் ‘ருத்ரதாண்டம்’ ஆட கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டது. திசாரா பெரேரா பந்து வீச வந்தார். முதல் பந்தில் 2 ரன் எடுத்த முஷ்பிகுர், 2வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். 3வது பந்தில் 2 ரன் கிடைத்தது. 3 பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில், 4வது பந்தில் ஒரு ரன் எடுக்க வங்கதேச அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்து இத்தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. முஷ்பிகுர் 72 (35 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்), மெகதி ஹசன் (0) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை தரப்பில் பிரதீப் 2, சமீரா, துசாரா பெரேரா தலா 1 விக்கெட் சாய்த்தனர். பேட்டிங்கில் கலக்கிய முஷ்பிகுர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த தொடரில் இதுனரை மூன்று லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், 3 அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இதே மைதானத்தில் நாளை நடக்க உள்ள 4வது லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.