பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை!’ – 25

பதிவு செய்த நாள் : 11 மார்ச் 2018

பாடல்களுக்கு டியூன் போடுவது, டியூன்களுக்குப் பாடல் எழுதுவது இரண்டுமே அந்தக் காலத்தில் வழக்கத்திலிருந்தாலும், இந்தக் காலத்துக்கும், அந்தக் காலத்துக்கும் அதிக வித்தியாசம் உண்டு. கதையை முதலில் தீர்மானித்ததும், எந்தெந்த சூழ்நிலைகளில் பாட்டுப் போடலாம் என்பது முடிவாகும். அடுத்து, அந்த பாடல் எப்படிப்பட்டது ` கிளாஸ்’ பாடலா, அல்லது ஜனரஞ்சகமான பாடலா என்று தீர்மானிக்கப்படும். அந்தக் காலத்தில் ஒவ்வொரு பாடலாசிரியருக்கும் தனித்தனி பாணி உண்டு.

 அதனால், எந்தப் பாடலை எந்தப் பாடலாசிரியரைக் கொண்டு எழுத வைப்பது என்பது முடிவாகும். இசையமைப்பாளர் தன் வாத்தியங்களோடு சினிமா கம்பெனியின் அலுவலகத்துக்கே வந்துவிடுவார். சிச்சுவேஷனை விளக்கியதும், அதற்கேற்ப டியூன் போடுவார். ஒவ்வொரு சிச்சுவேஷனுக்கும் இரண்டு மூன்று டியூன்கள் போட்டுக் காட்டி, இயக்குநரையே ஒரு டியூனை தேர்வு செய்யச் சொல்லுவார். எந்த டியூனும் பிடிக்காவிட்டால், `அதனாலென்ன பரவாயில்லை’ என்று சொல்லிவிட்டு புதிதாக டியூன் போட்டுக் காட்டுவார். பூரண திருப்தி வரும்வரையில் தயாரிப்பாளரும், இயக்குநரும் விடமாட்டார். இசையமைப்பாளரும் சளைக்க மாட்டார். இருபது, முப்பது டியூன்கள் போட்டுக் காட்டி அதில் ஒன்றை தேர்வு செய்த அனுபவமும் ஸ்ரீதருக்கு உண்டு. டியூன்கள் முடிவானதும், முழுமையாக `நொடேஷன்கள்’ (இசையின் வரி வடிவம்) எழுதப்படும். அதை வைத்துக் கொண்டு, அத்தனை இசைக்கருவிகளை வாசிக்கும் கலைஞர்களும், சில நாட்கள், இரவில் ஆபீசுக்கு வந்து ஒத்திகை பார்ப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு நாள் இரவு இசை ஒத்திகைக்கு வந்தால் பத்து ரூபாய் கிடைக்கும்.

டியூன்கள் முழுமையாகத் தயாரானதும், அந்த டியூனுக்கு எந்த பாடலாசிரியரைக் கொண்டு பாடல் எழுதலாம் என்பது தீர்மானமாகும்.  அவர்கள் ஆபீசுக்கு வந்து, உட்கார்ந்து பாடல்கள் எழுதிக் கொடுத்துவிட்டுப் போவார்கள். பாடலும், டியூனும் ரெடியானவுடன், எந்தப்  பாடலை எந்தப் பாடகர் அல்லது பாடகியைக் கொண்டு பாட வைப்பது என்பது முடிவாகும். அதன்பின், எல்லா இசைக்கலைஞர்களும் இசையை மீட்ட சோலோ, டூயட், கோரஸ் என்று தன்மைக்கேற்ப, பாட வேண்டியவர்களை வைத்து, ரிகர்சல் நடக்கும். இரண்டு, மூன்று நாட்கள் ஒத்திகைக்குப்பிறகு, பாடல் பதிவு செய்யப்படும். இப்படி கடுமையான உழைப்பு இருந்ததால்தான், இன்று கேட்டாலும் மனதை மயக்கும்படி இனிமையாய் அந்தக் காலத்துப் பாடல்கள் அமைந்துள்ளன. `கல்யாண பரிசு’ அடைந்த வெற்றியைப் பார்த்துவிட்டு பல நிறுவனங்கள் ஸ்ரீதரை டைரக்ட் செய்ய அழைத்தன. `இந்த அழைப்புக்களை ஏற்பதா? வேண்டாமா? சொந்த படத்தை டைரக்ட் செய்யும்போது இருக்கும் சுதந்திரம், மற்ற நிறுவனங்களில் கிடைக்குமா?’ என்றெல்லாம் யோசித்து, கடைசியில், `வீனஸ் பிக்சர்ஸிலேயே மறுபடியும் தமிழ் படம் எடுத்தால் டைரக்ட் செய்யலாம். பிறருக்கு வேண்டாம்’ என்று முடிவு செய்தார் ஸ்ரீதர். இந்த சமயத்தில் கலைவாணர் என்.எஸ். கேயின் துணைவியார்  `மதுரம் பிக்சர்ஸ்’ என்று தம் பெயரிலேயே ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். அதற்குக் கதை, வசனம் மட்டுமே எழுதித் தர சொன்னார்கள். மதுரம் பிக்சர்ஸுக்கு பைனான்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்ததே வீனஸ் பிக்சர்ஸ்தான். `சகோதர நிறுவனம் போல’ என்று கூட சொல்லலாம். அதனால் உடனே சம்மதித்து `அகல்விளக்கு’ என்ற தலைப்பில் திரைக்கதை- வசனம் எழுதினார். `அழகா, அறிவா? ஒரு பெண்ணுக்கு எது முக்கியம்?’ என்பதுதான் கதைக்கரு. `அழகுதான் முக்கியம், அழகியை மனைவியாக அடைந்தால் பிறகு, அவளை அறிவுள்ளவளாகவும் மாற்றிக் கொள்ளலாம்’ என்று கதாநாயகன் வாதாடி, அப்படியே ஒரு நாட்டிய நங்கையை திருமணம் செய்து கொள்வான். ஆனால் அவளோ, அழகிப் போட்டிகளில் பங்கேற்று, சினிமா வாய்ப்பும் பெறுவாள். அவளுடைய புகழ் மனதளவில் கதாநாயகனைப் பாதிக்கும். இவன் தன் தவற்றை உணர்ந்து வருந்துவான். `குடும்பத்துக்குத் தேவை அகல்விளக்கு, அலங்கார விளக்கு அல்ல’ என்று புரிந்து கொள்வான்.

படத்தின் கதாநாயகன் எஸ்.எஸ். ஆர்., கதாநாயகி இ.வி. சரோஜா. மாடர்ன் தியேட்டர்ஸில் உதவி டைரக்டராக இருந்த ராஜகோபால் படத்தை இயக்கினார். முதல் ஷெடியூல் படப்பிடிப்பு நடந்தது. இரண்டாவது ஷெடியூலைத் தொடரமுடியாமல் ஒரு சிக்கல்! இ.வி. சரோஜா கருவுற்றார்! அவருக்கு குழந்தை பிறக்கும்வரை – ஏன் அதற்குப் பின்னரும் கூட சில மாதங்கள் – காத்திருக்க வேண்டும். என்ன செய்வது? மதுரம் பிக்சர்ஸ் நிர்வாகிகள் யோசித்து, அந்தப் படத்தை அப்படியே நிறுத்தி வைத்துவிட்டு, வேறொரு படம் எடுக்க ஆரம்பிப்பது என்று தீர்மானித்தனர். அப்படி இரண்டாவது படத்தை எடுக்கும்போது, டி.ஆர். ரகுநாத்தை டைரக்ட் செய்ய சொல்வது என்றும் அவர்கள் ஏற்கனவே தீர்மானித்து, அவரிடம் பேசியும் இருந்தனர்.

 அதனால் ஸ்ரீதர் மறுபடியும் கதை – வசனம் மட்டும் எழுத வேண்டிய நிலைக்கு உள்ளானார். மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டு எழுதவும் செய்தார். மதுரம் பிக்சர்ஸார் ஸ்ரீதரின் கதை, வசனத்தை படித்துப் பார்த்தார்கள். அதில்  ஜெமினியும், பத்மினியும் நடித்தால்தான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்தார்கள்.  அப்படியே செய்துவிட்டு டி.ஆர். ரகுநாத்துக்குத் தகவல் தெரிவித்தார்கள். ஆனால் டி.ஆர். ரகுநாத் அந்தப் படத்தில் எஸ்.எஸ். ஆர்தான் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். இந்தக் குழப்பத்தினிடையில் ஷூட்டிங் தினங்கள் முடிவாகி, அந்தத் தேதியும் வந்துவிட்டது. பிற்பகல் கால்ஷீட்!

படப்பிடிப்புக்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. ஸ்ரீதரும், கிருஷ்ணமூர்த்தியும் செட்டில் இருந்தார்கள். நேரமாகிக் கொண்டிருந்ததே தவிர ரகுநாத்தும், அவரைச் சேர்ந்தவர்களும் வந்து சேரவில்லை.  மதியம் இரண்டு மணிக்கு ரகுநாத்திடமிருந்து தகவல் வந்தது! குழப்பமான சூழலில் இந்தப் படத்தை இயக்க விரும்பவில்லை என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

`என்ன கிருஷ்ணமூர்த்தி, இப்படியாகிவிட்டதே?’ என்று பதறினார் ஸ்ரீதர்.  காரணம் மதுரம் பிக்சர்ஸில், ஸ்ரீதரும் பங்குதாரராக இருக்கும் வீனஸ் பிக்சர்ஸுக்கும் பங்கு இருந்தது.  நடிகர்களும் வந்துவிட்டார்கள். நடிகர்களின் கால்ஷீட்டை வீணாக்க முடியாது. மேலும் டி.ஆர். ரகுநாத் ஒரு பெரிய டைரக்டர்! அவர் படப்பிடிப்பு நேரத்தில் படத்திலிருந்து விலகுகிறேன் என்று சொன்னது வெளியே தெரிந்தால் சினிமா வட்டாரத்தில் பெரிய செய்தி ஆகிவிடும். மேலும், மதுரம் பிக்சர்ஸில் என்.எஸ்.கேயும், மதுரமும் இருக்கிறார்கள். அவர்கள் நிறுவன படத்திலிருந்து ஒரு பெரிய இயக்குநர் விலகுகிறார் என்றால் எத்தனை பரபரப்பு ஏற்படும். எல்லோரும் கையை பிசைந்து கொண்டு நின்றார்கள். படத்தை இயக்கப் போவது யார்?

அந்த நேரத்தில்தான்……

(தொடரும்)