பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 11–3–18

பதிவு செய்த நாள் : 11 மார்ச் 2018

நாடு முன்னேறிக் கொண்டு இருக்கிறது. விவசாயிகளுக்காக மத்திய அரசு ஏராளமான நிதி ஒதுக்குகிறது! நாட்டின் முதுகெலும்பே விவசாயிகள்தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், கிராமங்கள் இப்போது மனிதர்கள் இல்லாமல் காலியாகிக் கொண்டிருக்கின்றன! பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மட்டும் ஊருக்கு போக விருப்பப்படுகிறார்கள். ஆனால், பெரும்பாலும் கிராமவாசிகள் புலம்பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள்! நகரங்களைத் தேடித்தான் ஓடுகிறார்கள்!

காரணம், இந்தியா முழுவதும் கிராமத்து மக்களுக்கு வாழ்வாதார உத்தரவாதமில்லை. படிப்பிற்கும், விவசாயத்திற்கும் தொடர்பில்லை என்கிற எண்ணமும் பரவலாகிவிட்டதால், விவசாயம் செய்ய ஆட்களும் இல்லை. அதில் போதிய வருமானமும் இல்லை. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான், பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய ‘சோழர்கள்’ புத்தகம் படிக்க நேர்ந்தது. வாங்கி பல நாட்கள் ஆகியிருந்து, படித்து அலமாரியில் இருந்த புத்தகம் கண்ணில் பட்டது. நம் கிராமமும், விவசாயிகளும் ஒரு காலத்தில் எப்படி இருந்தார்கள்? இதை யோசித்தபோதுதான் சோழர்கள் காலத்து நிலைமைகளை பார்க்கத் தோன்றியது. நீலகண்ட சாஸ்திரிகளின் ‘சோழர்கள்’ புத்தகத்தின் அத்தியாயம் 21ன் ‘தலைப்பு விவசாயமும்’, நில உரிமைகளும்! கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். விவசாயக்குடி மக்கள்.

மக்கள் பெரும்பாலும் கிராமங்களில் வசித்து வந்ததால், விவசாயமே அவர்களுடைய முக்கிய தொழிலாக இருந்தது. நிலம் வைத்திருப்பவர்களுக்குச் சமுதாயத்தில் நல்ல மதிப்பு இருந்தது. விவசாயிகள்தான் சமுதாயத்தில் முதுகெலும்பாக விளங்கினார்கள். எந்தத் தொழிலை செய்தாலும் ஒவ்வொருவரும் தனக்கென நிலங்கள் வைத்துக் கொள்ள விரும்பினர். கிராமமும், கிராம சபையும் பெரும்பாலும் விவசாயிகளைக் கொண்டே இருந்தன. கிராமப் பொது நிலங்கள் தனியார் நிலங்களைத் தவிர, கிராம வெளிப்புறங்களில் உள்ள பகுதிகள் கிராமத்தாரின் பொதுவுடைமையில் இருந்தன. இவை தவிர, புறம்போக்கு நிலங்கள் அவ்வப்போது சிலருக்கு வழங்கப்பட்டு வந்தன.  கிராமத்தாரின் பொதுவுடைமையில் இருந்த சில நிலங்கள் ‘சபா மஞ்சிகம்’ ‘ஊர் மஞ்சிகம்’ ‘ஊர்ப்பொது’ என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தன. பொது நிலத்திற்கு இறை வசூலிக்கப்பட்டது.  சில பொது நிலங்களை, கிராமத்தார் விற்றுப் பயிரிடுவதற்கு ஏற்பாடுகளும் செய்தனர். சுந்தரசோழன் காலத்தில் மதுராந்தக  சபையார், அவ்வூரிலுள்ள பொது நிலங்களில் சிலவற்றை தனியாருக்கு சபா விலையாக விற்றனர். தனிவுடைமை மிகப் பரவலாக இருந்தது. மக்கள் தங்கள் சொந்த நிலங்களை விருப்பப்படி விற்கவோ, தானமாக கொடுக்கவோ, முழு உரிமை பெற்றிருந்தனர். தவிர, சொத்துக்களும் முறைப்படி சந்ததியினருக்குப் போய் சேர்ந்தன. இவை எல்லாம் நடைமுறையில் வழங்கி வந்தன என்பது கல்வெட்டுக்கள் தெளிவுபடுத்துகின்றன. நீதி நூலகளும் அதையே கூறுகின்றன.

 குடியானவர்கள் சிறிய, பெரிய நிலக்கிழார்களைத் தவிர, விவசாயத் தொழிலில் மற்றவர்களும் ஈடுபட்டிருந்தனர். முக்கியமான நில உரிமையற்ற உழவுத் தொழிலாளர்கள், விவசாயத்தில் பெரும் பங்கு கொண்டிருந்தனர். அவர்கள் அடிமை போல் வாழ்ந்தனர். ஒவ்வொரு கிராமத்திலும் சில எளிய தொழில்களைச் செய்ய பணியாட்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு பொதுநிலங்களிலிருந்து சில நிலங்கள் ஊதியமாக அளிக்கப்பட்டன. கிராமத்திலுள்ள பல கைத்தொழிலாளர்களுக்கும் நில மானியங்கள் அளிக்கப்பட்டன. அவர்கள் ஊரை விட்டுப் போகாமல் நிரந்தரமாக இருக்க, மானியங்கள் அளிக்கப்பட்டன. தவிர, அவர்கள் செய்து கொடுத்த வேலைகளுக்கு மக்களிடம் கூலி பெற்றனர்.  எளியோரின் வாழ்க்கை  சமுதாய அடிமட்டத்திலுள்ள ஏழை எளிய மக்களின் வாழ்க்கையைப் பற்றி ஒருவாறு அறியவேண்டுமென்றால், சேக்கிழாரது நந்தனார் வாழ்க்கை வரலாற்றில், ஆதனூரைப் பற்றிய குறிப்புக்களை கவனித்தாலே போதுமானது.

கிராமப்புற வாழ்க்கையை நன்கு அறிந்திருந்த சேக்கிழார், ஆதனூரைப் பற்றிய அப்பட்டமான உண்மைகளை பின்வருமாறு சித்தரிக்கிறார். ``மேற்கா நாட்டிலுள்ள ஆதனூர் செல்வச் செழிப்புடைய ஊராகும்; கொள்ளிடம் பாய்வதால், பூமி மிகவும் செழிப்புடன் விளங்குகிறது. இரு பக்கங்களிலும் பசுமை நிரம்பிய தோட்டங்கள், மாடமாளிகைகள் பல உள்ளன. ஏராளமான மக்கள் இங்கு வாழ்கிறார்கள்;  ஊருக்கு வெளியேயுள்ள சேரியில் புலையர்கள் ஓலைக் குடிசைகளில் வாழ்கிறார்கள்; எளிய தொழில் செய்கிறார்கள்; குடிசையைச் சுற்றிலும் தோல்பட்டைகள் சூழ, கோழிக்குஞ்சுகள் அங்குமிங்கும் ஓடுகின்றன. கரிய நிறமுள்ள குழந்தைகள், நாய்க்குட்டிகளைக் கையில் வைத்துக் கொண்டு ஓடி விளையாடுகிறார்கள்;  மருத மரத்தடியில் ஒரு பெண் தன் குழந்தையை தூங்கச் செய்கிறாள்; பக்கத்திலுள்ள் மாமரக் கிளைகளில் உடுக்கைகள் தொங்க விடப்பட்டுள்ளன;  பனைமரங்களுக்கு அடியில் பன்றிக் குட்டிகள் படுத்து உறங்குகின்றன; அதிகாலையில், சேவல் கூவும்போது, புலையர்கள் எழுந்து, தங்கள் வேலைகளைத் தொடங்குவார்கள். பகலில், காஞ்சி மரத்தடியில் சுருட்டை முடியுள்ள புலையப் பெண்கள் பாடிக்கொண்டே நெல் குற்றுகிறார்கள். ஏரிக்கரையில், பறவைகளின் சப்தத்துடன் கூடிப் புலைப் பெண்களின் ஆடல் பாடல் ஒலிகளும் கேட்கின்றன. தலையில் வாசனையுள்ள பூக்களையும், நெற்கதிர்க் கொத்துக்களையும் அணிந்து கொண்டு, அதிக அளவில் மதுபானம் பருகியதால் தள்ளாடி ஆடுகிறார்கள். இம்மக்களிடையேதான் சிவபக்தரான நந்தனார் தோன்றினார். தனது குலத்தொழிலைப் பின்பற்றி பல சிவன் கோயில்களுக்கு உடுக்கை, மத்தளம் போன்ற கருவிகள் செய்ய தோல், நரம்பு, தோல்பட்டை எல்லாம் கொடுத்து வந்தார். இத்தொழில் செய்த புலையர்கள், அடிமை போன்றே வாழ்ந்தனர். ஊரைவிட்டு வெளியே போகக் கூட சுதந்திரம் கிடையாது.

கூலி ஆட்கள்  தினக்கூலி வாங்கி, மற்றவர்களின் நிலங்களில் வேலை செய்து பிழைத்து வந்த விவசாயத் தொழிலாளர்களைப் பற்றி சில செய்திகளை அறிகிறோம். அவர்களுக்குக் கூலி, பொதுவாக நெல்லாகவே கொடுக்கப்பட்டது. கோயில் தோட்டங்களில் வேலை செய்த ஆட்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு மரக்கால், இரண்டு நாழி நெல் வழங்கப்பட்டது என்று கி.பி. 1019, 1053 ஆண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் கூறுகின்றன. ஏழு பாடகம் அளவுள்ள ஒரு தோட்டத்தில் எட்டு கூலியாட்கள், வருடம் பூராவும் வேலை செய்தனர். அது போல, ஆறு மாவுள்ள ஒரு தோட்டத்தில் இரண்டு ஆட்கள் வேலை செய்தனர். கோயிலுக்கு நில தானம் வழங்கும்போது சில சமயம், அதில் வேலை செய்ய வேண்டிய தொழிலாளர்கள், தங்குவதற்கு ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது. அவர்கள் குத்தகைக்காரர்கள் அல்லர்; சம்பளத்திற்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் நிலமும், அவர்களால் பயிரிடப்படும் நெல்லும் அவர்களுக்குச் சொந்தமல்ல. குத்தகை கைத்தொழில் செய்பவர்களுக்கு நிலம் மானியமாக வழங்கப்பட்டது. அவை கிராம சமுதாயத்திற்குப் பணி செய்யும் பொருட்டு விடப்பட்ட மானியங்கள் அல்ல.

 நில உரிமை முறைகளைப் பற்றி அனைத்துச் செய்திகளும் நமக்குக் கிடைக்கவில்லை. கல்வெட்டிலுள்ள செய்திகள் அனேகமாக கோயில்கள் தொடர்பாயுள்ள நிலங்களைப் பற்றியவையே. அவை எவ்வளவு தூரம் தனியார் நில உரிமை முறைகளுக்கும் பொருந்தும் என்பதைச் சொல்ல முடியாது. ஆனால், விவசாயமும், மற்ற தொழில்களைப் போலவே கிராமத்து மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய உதவியதே தவிர, அது ஒரு பெரும் லாப நோக்குடனோ அல்லது முதலாளித்துவ முறைப்படியோ நடத்தப்படவில்லை. இதனால், தனியார் நிலங்களுக்கு கோயில், மடம் போன்ற பொது ஸ்தாபன நிலங்கள் இயங்கும் முறைக்கு ஒன்றும் அதிக வேறுபாடு இருந்திருக்காது. இந்த அடிப்படையைக் கொண்டே, நில உரிமை முறை, நீர்ப்பாசனம், நில விலை போன்ற விஷயங்களை கவனிக்க வேண்டும்.

 ஊழிய மானியம் கிராமத்தில் சிறப்புத் தொழில் செய்பவர்களுக்கு பல்வேறு மானியங்கள் அளிக்கப்பட்டு, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கப்பட்டது. ஆனால், கிராமத் தொழில் செய்தவர்களுக்கு நிலமானியங்கள்  அளிக்கப்பட்டன. கி.பி. 1088ல்  வீரநாராயபுரம் கோயிலில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின்போது, ஐந்து தமிழ்க் கூத்து நடத்தியவர்களுக்கு மானம்பாடிக் கிராமசபையாரும், நகரத்தாரும் நிலங்களை கூத்துக் காணியாக அளிக்கப்பட்டன. வீரர்களுக்கு மானியம்  சோழர் காலத்தில் படைவீரர்களுக்கு நில மானியம் வழங்கி கவுரவித்தனர். திருவாவடுதுறையிலுள்ள கி.பி. 1117, கி.பி. 1121 ஆண்டுக் கல்வெட்டுக்கள், குலோத்துங்கச்சோழ நல்லூரில் பெரும் பரப்பு நிலங்கள் கைக்கோளாருக்கு வீரபோகமாக அளித்த செய்தியை கூறுகின்றன. ` சிறுதானம்’ அந்தஸ்துடைய இக்கைக் கோளர்கள், கங்கை கொண்ட சோழபுர அரண்மனையில் பணிபுரிந்தனர்.  கி.பி. 1125ம் ஆண்டு சிவபுரி (ராமநாதபுரம்) கல்வெட்டின்படி கந்தன் கங்கை கொண்டான் என்னும் அதிகாரி, போரில் மாண்டான்.  அவன் குடும்பத்தாருக்கு அதிக நிலங்கள் வழங்கப்பட்டன.

நீர்ப்பாசனம் வேளாண்மையை பெரிய தொழிலாகக் கொண்டிருக்கும் ஒரு நாட்டின் வளம் பெரும்பாலும் நீர்ப் பாசன வசதிகளையே பொறுத்தது. போதுமான தண்ணீர் கிடைக்க செய்வதன் முக்கியத்துவத்தை தென்னிந்தியாவிலுள்ள அரசர்கள் பண்டைக் காலத்திலிருந்தே உணர்ந்திருந்தார்கள். இயற்கையான ஓடைகளும், அவற்றிலிருந்து பிரியும் நம்பிக்கையான வாய்க்கால்களும்தான் தண்ணீர் வசதிக்கு முதல் இடத்தில் அமைவன. திருவாவடுதுறை கல்வெட்டு ஒன்றில் ஒரு பரகேசரி கரிகாலச் சோழன், காவேரியின் கரையை உயர்த்திய செய்தி மேற்போக்காகச் சொல்லப்பட்டிருக்கிறது.  சோழ நாட்டின் வளம் அனைத்தும் காவிரியால் ஏற்பட்டது.  ``வான் பொய்ப்பினும் தான் பொய்யா கடற்காவிரி’ என்ற மேற்கோள்கள் இப்படித்தான் ஏற்பட்டன.

* * *