மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்! – 93

பதிவு செய்த நாள் : 06 மார்ச் 2018

பிறகு திருநாவுக்கரசர் அந்த ஆலயத்தினுள்ளே சென்று, சிவலிங்கப் பெருமானைக் கண்டு தொழுது, அங்கு நிகழ்ந்த செயல்களைப் பொறித்துத் ‘தலையெலாம்’ எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடினார்.  பழையறையிலே அவர் சில காலம் தங்கி, விழுவளத் திருப்பணி செய்து வந்தார்.

பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு திருவானைக்கா, திருவெறும்பியூர், திருச்சிராப்பள்ளி, திருக்கற்குடி முதலிய சிவத் தலங்களுக்குச் சென்று, சிவபிரானைத் தொழுது திருப்பதிகங்கள் பாடிவிட்டுத் திருப்பராய்த்துறை அடைந்து, அங்கும் திருப்பதிகம் பாடியருளினார். அதன் பின்னர், அங்கிருந்து காவிரியாற்றைக் கடந்து சென்று, திருப்பைஞ்ஞீலியை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

 அப்பொழுது திருநாவுக்கரசர் பசியாலும் தாகத்தாலும் மிகவும் தவித்து இளைத்துக் களைத்தார். ஆயினும் சித்தம் தளராமலே நடந்து சென்று கொண்டிருந்தார். அருட்கடலாகிய சிவபெருமான், தமது தொண்டரின் வருத்தத்தைப் போக்கியருளத் திருவுளம் கொண்டார். அதற்காக திருநாவுக்கரசர் வரும் வழியில் சிவபெருமான் ஒரு சோலையையும் குளத்தையும் உண்டாக்கி, திருநீறு அணிந்த அந்தணர் வேடம் புனைந்து திருநாவுக்கரசருக்கு வழிகாட்டப்போகும் கருத்துடன், பொதி சோறு வேறு வைத்துக் கொண்டிருந்தார். தம் அருகே நாவரசர் வந்தபோது, அந்தணர் அவரை அழைத்து, ‘நீர் மிகவும் வழி நடந்து இளைத்திருக்கிறீர்! இங்கு என்னிடம் பொதி சோறு இருக்கிறது. அதை உண்டு, இந்த குளத்தில் தண்ணீரை அருந்தி இளைப்பாறிச் செல்லும்!’ என்றார்.

அதற்கு நாவுக்கரசர் நம்பர் அருள் என்று இசைந்து வேதியர் தந்த சோற்றை வாங்கியுண்டு தண்ணீரும் அருந்தி இளைப்பாறினார். அதன் பிறகு, அந்தணர், அப்பரை நோக்கி ‘நீர் எவ்விடம் போகிறீர்?’ என்று கேட்டார்.

 ‘நான் திருப்பைஞ்ஞீலிக்குப் போகிறேன்’ என்றார் அப்பர். ‘நானும் அங்குதான் போகிறேன்’ என்று அந்தணர் கூறி அவருடன் புறப்பட்டார். இருவரும் திருப்பைஞ்ஞீலியை நோக்கி நடந்து சென்றனர். திருக்கோயிலை அடைந்ததும் அந்தணர் மறைந்தருளினார். அப்போது அவர் சிவபெருமான் என்பதை உணர்ந்து, ‘ஆடல் புரிந்தோர் அடியேனைப் பொருளார் அளித்த கருணை’ யென்று இறைவனாரின் திருவருளை வியந்து திருப்பதிகம் பாடி அவ்வூரிலேயே சில காலம் உழவாரப் பணிசெய்து தங்கியிருந்தார்.

 அதன் பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு வடதிசை நோக்கிச் சென்று

திருவண்ணாமலையை அடைந்தார். அங்குள்ள திருக்கோயிலை அவர் வணங்கி வலம் வந்தார். ஆலயத்துள்ளே சென்று, அடியார்களின் அடிமை திறத்துக்கு மகிழ்ந்து அருள்புரியும் சிவபெருமானைத் தொழுது ஆனந்தித்தார்.  

பிறகு, திருவண்ணாமலையில் விளங்கும் அணியண்ணாமலையினைக் கும்பிட்டு மனமுருகி, இசை பொருந்திய திருப்பதிகம் பாடிய வண்ணம், அங்கே  சில காலம் திருத்தொண்டு செய்து வந்தார்.

 பிறகு, அவர் தொண்டை நாட்டிலுள்ள சிவத்தலங்களுக்குச் சென்று இறைவனை வணங்க விரும்பினார். மலைகள், காடுகள், காட்டாறுகள் இவற்றையெல்லாம் அவர் கடந்து தொண்டை நாட்டில் குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருவோத்துரையை முதலாவதாக சென்றடைந்தார். அங்கு கோயில் கொண்டுள்ள இறைவனை வணங்கி, திருத்தண்டகங்கள் பாடித் துதித்து, உழவாரப் பணிபுரிந்தார். அதன் பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு மதில்கள் சூழ்ந்த காஞ்சிபுரத்தை அடைந்தார்.

 காஞ்சிபுரத்து மக்கள், திருநாவுக்கரசரை அமோகமாக வரவேற்றனர். காஞ்சி நகரத்து மாடவீதிகள் எல்லாம் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டன. வாழை, கழுகு முதலியவற்றை வரிசையாகக் கட்டி, நிறைகுடமும், தீபங்களும், மலர்மாலைகளும் பந்தல்களும், இடபக் கொடுகளுமாக எங்கு பார்த்தாலும் குதூகலமாக திகழ்ந்தன.  சிவனடியார் திருக்கூட்டத்துடன் திருநாவுக்கரசர் நடந்து சென்றார்.

உமையவள் தழுவக் குழைந்த திருவேகாம்பரநாதரின் செம்பொற்கோயிலை வந்தடைந்தார். அத்திருக்கோயிலை அவர் வலம் வந்து வணங்கித் தொழுது, ‘கரவாடும் வன்னெஞ்சர்க்கு அரியானை’ என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினார்.

 அங்கு அவர் சில காலம் கையாரத் திருத்தொண்டு புரிந்திருந்து திருக்கச்சி மயானம், திருமேற்றளி, திருமாற்பேறு முதலிய திருக்கோயில்களைத் தரிசித்துவிட்டு மீண்டும் காஞ்சி நகருக்கும் வந்து அங்கு ஏகாந்த நாதரை வழிபட்டு ‘கச்சி ஏகம்பன்காண் அவன் என் எண்ணத்தானே!’ என போற்றித் திருப்பாடல் பாடி மகிழ்ந்தார்.

 பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு, திருக்கழுக்குன்றத்தை அடைந்து, அங்குள்ள நிருத்தனரை வணங்கித் திருப்பதிகம் பாடிவிட்டு பல தலங்களுக்கும் சென்றவாறு கடற்கரையிலுள்ள திருவான்மியூர் என்னும் சிவத்தலத்துக்கு வந்து இறைவனுக்கு தமிழ்   பாமாலை சூட்டி  வழிபட்டு வணங்கினார்.

 அருகிலுள்ள பல தலங்களையும் அவர் வணங்கிச் சென்று, மலர்ச்சோலைகள் சூழ்ந்த திருமயிலாப்பூரை வந்தடைந்து அங்கு கபாலீச்சுரக் கடவுளை வணங்கிப் பாமாலைகள் சூடி மகிழ்ந்தார். பிறகு அலைமோதும் கடற்கரை ஓரமாகவே அவர்  சென்று திருவொற்றியூரை அடைந்தார்.

 அவர் வருகையை அறிந்த அவ்வூர் அன்பர்கள் அவரை வரவேற்று ஊரினுள் அழைத்துச் சென்றனர். அத்திருத்தொண்டர்களுடன் திருநாவுக்கரசர் நடந்து கோயிலுக்குள் புகுந்து வலம் வந்து, எழுந்து, எழுத்தறிஉம் பெருமானை வணங்கிப் பரவசத்தால் கண்ணீர் சொரிய வழிபட்டு, ‘வண்டோங்கு செங்கமலம்’ எனப் பாடலடி எடுத்து திருத்தண்டகம் பாடினார்.

 திருமூன்றில் அவர் உழவாரப் பணி செய்து திருவிருத்தங்கள், திருக்குறுந்தொகைகள், திருநேரிசைகள் முதலான பலவற்றைப் பாடியும் அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்தார்.

  பிறகு திருநாவுக்கரசர், திருப்பாசூர் என்னும் சிவத்தலத்தை அடைந்து அங்குள்ள பெருமானை வணங்கி வழிபட்டு, ‘முந்திமூவெயில் எய்த முதல்வனார்’ என்று பாடலடியெடுத்து, சிந்தை கரைந்துருகி, திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம், திருநேரிசை முதலான தமிழ் மாலைகள் பாடி சிவபெருமானின்  திருவருளைப் பெற்றார்.