வித்தியாச விநாயகர்

பதிவு செய்த நாள் : 17 பிப்ரவரி 2018

சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி என்னும் ஊர் உள்ளது. திருப்பத்தூர் - குன்றக்குடி சாலையில் அமைந்துள்ள இக்கிராமத்தின் புகழுக்கு காரணம் இங்குள்ள குடைவரைக் கோவிலான கற்பக விநாயகர் திருக்கோவில் ஆகும். இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் இந்த கோவில் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு பழமையானதா?

குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோவில்தான் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம். இக்கோவிலில் 15 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் ஆய்விற்கு பிறகு, இக்கோவில் 1600 ஆண்டுகளுக்கு முன்னரே குடைந்து கட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோவில்களை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களுக்கு உண்டு என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றது.

பிள்ளையார்பட்டி என்பது இன்றைய வழக்கில் இருக்கும் பெயர்தான். ஆனால் முற்காலத்தில் இவ்வூருக்கு, எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், இராச நாராயணபுரம். மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் என்று பல பெயர்கள் உண்டு. காலப்போக்கில் இந்த பெயர்கள் மக்களின் பேச்சுவழக்கில் இருந்து காணாமல் போனது. இந்த பெயர்கள், இக்கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்கள் மூலம் தெரியவந்துள்ளன.

இந்தக் கோவில் கிபி 12ஆம் நூற்றாண்டிற்கு முற்பகுதியிலேயே செட்டிநாட்டு நகரத்தார்களின் வசமானது. அதைத்தொடர்ந்து, அன்று முதல் இன்று வரை நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் மிகச் சிறப்பான முறையில், ஆகம முறைகள் தவறாமல் வழிபாடு நடைபெற்று வருகிறது.

லிங்கத்துடன் விநாயகர்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகருக்கு தேசி விநாயகர் என்ற பெயரும் உண்டு. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க, அழகுள்ள விநாயகர் என்று பொருள்.

மலையைக் குடைந்து அமைக்கப்பெற்ற 6 அடி உயரமுள்ள இந்த கற்பகப் விநாயகர் வடக்குத் திசை நோக்கி கம்பீரமாக அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கின்றார். இவர் தனது இடுப்பினை இடக்கை மூலம் பற்றியவாறு இருக்கிறார்.

வடக் கையில் ஒரு சிறிய லிங்கத்தை ஏந்தியவாறு காட்சியளிக்கிறார். இது போன்ற விநாயகரை வேறு எங்கும் காணமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிள்ளையார் என்றாலே 4 திருக்கரங்களுடன் தான் பார்த்து நமக்கு பழக்கமாயிருக்கும். ஆனால், இங்கோ, 2 கரங்களுடன் காட்சி தருகிறார்.

இதைத்தவிர தும்பிக்கை வலதுபக்கம் சுழிந்த நிலையில், வலம்புரி விநாயகராக அருள்பாளிப்பது பெரும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். கருவறையில் அர்த்த பத்ம ஆசனத்தில் அமர்ந்து காட்சியளிக்கிறார்.

இந்த விநாயகர் திருவுருவத்தை செதுக்கிய சிற்பியின் பெயர் 'எக்காட்டூர் கோன் பெருபரணன்'.

கோவில் அமைப்பு

தமிழ்நாட்டுக் குடைவரைக் கோவில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது இக்குடைவரைக் கோவில். கோவிலின் அமைப்பு இரு பகுதிகளாக அமைந்திருக்கிறது. கோவிலின் ஒரு பகுதி குடைவரைக் கோவிலாகவும், மற்றொரு பகுதி கற்றளி (கற்களால் கட்டப்பட்டது) ஆகவும் அமைந்திருக்கிறது.

இந்த கோவிலின் நடுவே கிழக்கு முகமாக எழுந்தருளும் மகாலிங்கம் மிகுந்த பொலிவுடன் காணப்படுகிறது. திருவீசர் எனப்படும் இப்பெருமானுக்கு திருவீங்கைக்குடி மகாதேவர் என்ற பெயரும் உண்டு.

இக்குகைக் கோவிலிலில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக அமைந்திருக்கிறது மருதீசர் சந்நிதி. சதுர வடிவ கருவறையின் நடுவே வட்ட வடிவமான ஆவுடையார் மீது லிங்கத்திருமேனியாக அமைந்துள்ள மருதீசர் அர்ஜுனவனேசர் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். இக்கருவறையைச் சுற்றியுள்ள மண்டபங்களில் நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் மிக அழகாக திகழ்கின்றன.

மருதீசர் கோவில் 30 செப்புத் திருமேனிகளைக் கொண்டுள்ளது. காலத்தால் இவை கிபி 10ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தை சேர்ந்தவை ஆகும்.

மருதீசர் சந்நிதியின் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் வாடாமலர் மங்கை அருள்பாலிக்கிறார். இவருடைய சந்நிதி தெற்கு திசை நோக்கி அமைந்திருக்கிறது. கருவறை நடுவே வாடாமலர் அம்பிகை பத்ம (தாமரை) பீடத்தின் மீது இரு கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள்.

வடக்கு கோபுர வாயில் வழியாக வந்தால், உள்ளே கிழக்குப் பகுதியில் சிவகாமியம்மன் சன்னிதி உள்ளது. மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில் நடராசர் சபையும் உள்ளது. அலங்கார மண்டபத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் ஓவியக்கலைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளன. கோவில் திருமதிலின் கிழக்கு வாயிலில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு நிலைகளுடன் அமைந்த இக்கோபுரத்தின் அடித்தளம் வெள்ளைக் கற்களாலும், அதற்கு மேற்பட்ட பகுதிகள் செங்கல் மற்றும் சுதை கொண்டு கட்டப்பட்டுள்ளது.

கற்பக விநாயகர் சந்நிதியின் முன்புறமாக இருக்கும் திருமதிலின் வடக்கு வாயிலில் விநாயகக் கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இது மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது. விநாயகர் கோபுரத்திற்கு எதிரே வெளிப் பிரகாரத்தின் வடதிசையில் விசாலமாக அமைந்த திருக்குளம் உள்ளது.

வருடம் ஒருமுறை 

பிள்ளையார்பட்டியில் ஒவ்வொரு சதுர்த்தியின்போதும் இரவு நேரத்திலும் விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வருவார். ஆவணி மாதம் வரும் பிள்ளையார் சதுர்த்தி இங்கு ஒன்பது நாட்கள் திருவிழாவாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கும் இத்திருவிழாவில், இரண்டாம் நாளில் இருந்து எட்டாம் நாள் வரை பிள்ளையார் பல்வேறு வாகனங்களில் வலம் வருவார்.

மூஞ்சுறு வாகனத்தில் கற்பக விநாயகர்சந்தனக்காப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகர்

ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். அன்றைய தினம், 80கிலோ சந்தனத்தால் கற்பக விநாயகருக்கு அலங்காரம் செய்யப்படும். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இந்த சந்தனக்காப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகர் காட்சியளிப்பார் என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்றைய தினம் வந்து கற்பக விநாயகர் கோவிலுக்கு வருகை தந்து வழிபடுவர்.

பத்தாம் நாள் காலையில் தீர்த்தவாரியுடன் திருவிழா இனிதே நிறைவடையும். அன்றைய தினம் ராட்சத கொழுக்கட்டை கற்பக விநாயகருக்கு படைக்கப்படுவது இக்கோவிலுக்குரிய சிறப்பு மரபாகும்.


கட்டுரையாளர்: தினேஷ் குகன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation

வாசகர் கருத்துக்கள் :
ராஜ்குமார் 17-02-2018 09:45 PM
கற்பக விநாயகரை கண்முன் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி

Reply Cancel


Your comment will be posted after the moderation


D.Guna Sekhar 17-02-2018 10:04 PM
Arumaiya article Dinesh. Pillayarpatti Karpaga Vinayagar pathi yenaku theriyada Sila vishayangal innaiku indha article moolama therinjikitten. Thank u so much thambi. Keep going. God bless...

Reply Cancel


Your comment will be posted after the moderation


Renu Aruna 18-02-2018 07:49 PM
அருமையான பதிவு தினேஷ். இவ்வளவு விளக்கமாக கற்பக விநாயகரை பற்றி எழுதி எங்களை போல் வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு தெரிவித்தமைக்கு மிக்க நன்றி தினேஷ். God bless u

Reply Cancel


Your comment will be posted after the moderation


Rajaa 19-02-2018 03:49 PM
Semaa thambi !! keep rocking

Reply Cancel


Your comment will be posted after the moderation