நடிகை பிரியா வாரியருக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் புகார்

பதிவு செய்த நாள் : 15 பிப்ரவரி 2018 01:44


ஐதராபாத்,:

நடிகை பிரியாவாரியருக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் போலீசில் புகார் செய்துள்ளனர். ஒரு அடார் லவ் படத்தில் வரும் 'மணிக்ய மலரய பூவி' பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் இஸ்லாமிய உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக இந்தப் புகாரை அளித்துள்ளனர்.

    சமீபத்தில் வெளியான 'ஒரு அடார் லவ்' படத்தின் டீசர் காட்சிகள் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியரை இன்டர்நெட் புயலாக மாற்றி இருக்கிறது.  இந்தியாவையே திரும்பி பார்க்கும் அளவுக்கு பிரபலமாகி விட்டார்.  ஒரே நாள் இரவில் சமூக வலைதளங்களில் பிரியா வாரியரை பின்தொடர்வோர் எண்ணிக்கை லட்சங்களை எட்டிவிட்டது. புருவ அசைவில் காதல் சொல்லும் பிரியா வாரியரின் ஷார்ப் கண்கள் இளைஞர்களை கட்டிப் போட்டு விட்டது என்றே சொல்லலாம்.இந்த வீடியோவை  ஒரு கோடியே 50 லட்சம் பேர் பார்த்து உள்ளனர்.

   இதற்கிடையே பிரியா வாரியருக்கு எதிராக இஸ்லாமிய இளைஞர்கள் ஐதராபாத்தின் பலக்னுமா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஒரு அடார் லவ் படத்தில் வரும் 'மணிக்ய மலரய பூவி' பாடலின் வரிகளில் புனித நகராம் மக்காவின் ராணியாக வாழ்வாள் என்ற வரி இடம்பெற்றுள்ளது.

    இந்த வரிகள் இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் இருப்பதாகவும் இந்தப் பாடலில் நடித்த பிரியா வாரியர் மற்றும் பாடலை எழுதி, இசையமைத்து, பாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது பற்றி பலக்னுமா கூடுதல் போலீஸ் கமிஷனர் சையத் பையஸ் கூறும்போது, இந்தப்பாடலின் வரிகள் முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக புகாரில் கூறி உள்ளனர். இது பற்றி ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி வருகிறோம். இது வரை எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை  என்று கூறினார்.