அணு ஆயுதங்களை பாகிஸ்தான் தயாரிக்கிறது பிராந்தியத்திற்கே ஆபத்து:அமெரிக்கா எச்சரிக்கை

பதிவு செய்த நாள் : 15 பிப்ரவரி 2018 01:43


வாஷிங்டன்:

புதிய வகை அணு ஆயுதங்களை பாகிஸ்தான் தயாரிக்கிறது. இது இந்த பிராந்தியத்திற்கே ஆபத்தானது என்று அமெரிக்கா உளவுத்துறை தலைவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

   கடந்த சனிக்கிழமை காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் உள்ள சஞ்சுவான் ராணுவ முகாம் மீது  பாக். ஆதரவு ஜெய்ஷ்–இ–முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். ராணுவம் நடத்திய பதிலடியில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

   இது தொடர்பாக  அமெரிக்க உளவுத்துறை குறித்த செனட் கமிட்டி முன்பு அந்த நாட்டின்  உளவுப்பிரிவு தலைவர் டான் கோட்ஸ் கூறியதாவது:– பாகிஸ்தான் புதிய வகை அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது. குறிப்பாக குறுகிய தூரம் சென்று தாக்கும் அணு ஆயுதங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள்  மூலம் செலுத்தும் அணு ஆயுத ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.  நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைகளையும் உற்பத்தி செய்கிறது. இதனால் இந்த பிராந்தியத்திற்கே ஆபத்து உள்ளது.

  பாகிஸ்தானில், அரசு ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள், தங்கள் பதுங்குமிடத்தில் இருந்தவாறு, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்த சதி செய்து வருகின்றனர். அமெரிக்க நலன்களுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்தியா- –பாகிஸ்தான் எல்லையில் தொடரும் அத்துமீறல், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நீடித்து கொண்டுதான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.