இனி, டூ வீலர் பின் சீட்டில் அமர்பவருக்கும் ஹெல்மெட்

பதிவு செய்த நாள் : 15 பிப்ரவரி 2018 01:28


சென்னை,:

டூ வீலர் வாகன விபத்துக்கள் அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு, வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி பின் சீட்டில் அமர்ந்து பயணிப்பவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வற்புறுத்துவது என்று மாநில சாலைப் பாதுகாப்பு குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.  

6வது மாநில சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் சென்னையில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது. தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், டிஜபி டி.கே. ராஜேந்திரன் மற்றம் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகளை குறைக்க எடுக்கப்படவுள்ள வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.  

இந்த ஆண்டில் மாநிலத்தில் 4ஆயிரத்து 995 விபத்து இறப்புகளை குறைக்க இலக்கீடு நிர்ணயம் செய்ததை குழு ஏற்றுக் கொண்டது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காணவும்,  வேகத்தடைகள், எச்சரிக்கை பலகைகள் வைக்க நடவடிக்கை எடுப்பது.

இந்திய தேசிய நெடுஞ்சாலைஆணையக சாலைகளில் உள்ள 133 அங்கீகரிக்கப்படாத குறுக்கு வழிகளை மூட, ஆணையத்துக்கு தகுந்த அறிவுரை வழங்கியது. குறுகிய பாலங்கள், மதகுகள் உள்ள இடங்களில் எச்சரிக்கை பலகைகள், போதிய  மின் விளக்கு வசதிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஏற்படுத்த நெடுஞ்சாலைத்துறையை அறிவுறுத்துவது.  

 ஜனவரி வரை அதிவேகம், அதிக பாரம், குடிபோதையில் வாகனத்தை இயக்குதல், செல்போன் பயன்பாடு போன்ற போக்குவரத்து விதி மீறல்களுக்காக ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 213டிரைவிங் லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை பாராட்டுவது.  

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ள போலீஸ் ரோந்து வாகனங்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்க போலீஸ் துறைக்கு அறிவுறுத்துவது.  

டூ வீலர் வாகன விபத்துக்கள் அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு, வாகனம் ஓட்டுபவர், பின் சீட்டில் அமர்ந்து பயணிப்பவர் இருவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வற்புறுத்துவது.  

சுற்றுலா வேன் மற்றும் மேக்சிகேப் டிரைவர்களின் பணி நேரத்தை முறைப்படுத்துவது. அதை பின்பற்றத் தவறும் பட்சத்தில் பெர்மிட் மற்றும் தகுதிச்சான்று புதுப்பிக்கபட மாட்டாது. அவர்களின் டிரைவிங் லைசென்சும் ரத்து செய்யப்படும் என்று அறிவுறுத்துவது.சாலை பாதுகாப்பு குறித்து ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ள தகவல்களுக்கு ஒப்புதல் வழங்குவது என்பது உட்பட பல்வேறு விஷயங்களுக்கு  மாநிலசாலைப் பாதுகாப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.