பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,360 கோடி சட்டவிரோத பணபரிமாற்றம்

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2018 20:44

மும்பை:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.11,360 கோடி அளவிற்கு மோசடியாக பணபரிமாற்றம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, பங்குச்சந்தைகளில் அந்நிறுவன பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன.

“மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஒரு கிளையில் மோசடி மற்றும் அங்கீகரிக்கப்படாத பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதை வங்கி கண்டுபிடித்துள்ளது. இதில் மொத்தம் ரூ.11,360 கோடிவரை மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள்” என்று வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

காலை 11:10 மணியளவில் 151.15 புள்ளிகளாக இருந்தது. இது 6:50 சதவீதம் குறைவானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம், பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து 280 கோடி ரூபாயை ஏமாற்றியதாக வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர், அவரது கூட்டாளி ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், வங்கியின் ஓய்வு பெற்ற துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி மற்றும் வங்கி ஊழியர் மனோஜ் கரத் ஆகியோரும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.