10 மணிநேரம் பந்துவீசி சாதனை: மாணவர் செந்தில்குமாருக்கு ஸ்டாலின் பாராட்டு

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2018 19:12

சென்னை,

    இடது கையைக் கட்டிக்கொண்டு 10 மணிநேரம் தொடர்ந்து கிரிக்கெட் பந்துவீசி (பவுலிங்) சாதனை படைத்த கல்லூரி மாணவர் செந்தில்குமாரை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,

பத்து மணிநேரம் தொடர்ந்து கிரிக்கெட் பந்துவீசி (பவுலிங்) சாதனை படைத்துள்ள பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் மாணவர் செந்தில்குமாரின் திறமையை பாராட்டுவதோடு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அவரை மனமார வாழ்த்துகிறேன்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகில் உள்ள கரைசுற்றுபுதூரில், எளிமையான குடும்பத்தில்

 பிறந்து, விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இடது கையை பின்னால் கட்டிக்கொண்டு, தன் வலது கையால் கிரிக்கெட் பந்தை 450 ஓவர்கள் தொடர்ந்து பவுலிங் செய்து, கிரிக்கெட் விளையாட்டுத் துறையில் செந்தில்குமார் நிகழ்த்தியுள்ள அரிய சாதனை, வியக்கத்தக்கது மட்டுமல்ல, போற்றி புகழத்தக்கது.

இலக்கை நிர்ணயித்துக் கொண்டால் எதிலும் வெற்றிபெற முடியும், என்பதை தனது சாதனை மூலம் இளைஞர் சமுதாயத்திற்கு எடுத்துரைத்திருக்கும் மாணவர் செந்தில்குமாரை மீண்டும் பாராட்டி, அவரது சாதனைக்காக அரும்பாடுபட்டு உறுதுணை நின்ற பெற்றோர், உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் உரித்தாக்குகின்றேன்.

இவ்வாறு, திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துரையில்  குறிப்பிட்டுள்ளார்.