ஜெயலலிதா மரணம்: விசாரணை க்கு ஆஜராக எம்பி உள்பட 3 பேருக்கு சம்மன்

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2018 18:47

சென்னை, 

ஜெயலலிதா மரணம் குறித்து நடத்தப்படும் விசாரணை ஆணையத்தில் ஆஜராக, அதிமுக முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட மூவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடரபான பல்வேறு சந்தேகங்களுக்கு விடை காண ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார்.  இந்த விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், அரசு உயர் அதிகாரிகள், சசிகலா உறவினர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர்  இதுவரை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் விசாரணை ஆணையத்தில் ஆஜராக, அதிமுக முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், ஜெயலலிதாவின் சமையல்காரர் ராஜம்மாள் மற்றும் கார் ஓட்டுநர் ஐயப்பன் ஆகிய மூவருக்கும் விசாரணை ஆணையத்திலிருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மூவரில் ராஜம்மாள் 20-ம் தேதியும், மனோஜ் பாண்டியன் 21-ம் தேதியும், கார் ஓட்டுநர் அய்யப்பன் 23-ம் தேதியும் ஆஜராகுமாறும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை  ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவர் பாலாஜி ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்றது குறித்து விசாரணை ஆணையத்தில் 3வது முறையாக இன்று விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.