மத்திய பிரதேசத்தில் முதல்வர் விவசாய உற்பத்தி திட்டம்’ அறிமுகம்

பதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2018 19:51

போபால்,

மத்திய பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முதல்வர் விவசாய உற்பத்தி திட்டத்தின் மூலம் விவசாயப் பொருட்களுக்கு நியாயமான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.200 போனசாக வழங்கப்படும்  கிடைக்கும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விவசாயிக்கும் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.200 ஊக்கத் தொகையாக வழங்கப்படும். ஏற்கனவே பிரதமர் மோடி கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.1,735 ஆக உயர்த்தியிருக்கும் நிலையில் இந்த ஊக்கத் தொகையும் சேர்ந்து குவிண்டாலுக்கு ரூ.2,000 வரை விவசாயிகளுக்கு கிடைக்கும் என்று முதல்வர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு முதல் நெற்பயிருக்கும் குவிண்டாலுக்கு ரூ.200 ஊக்கத்தொகை அளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2016-17ஆம் ஆண்டு ராபி பருவகாலத்தில் 67.25 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை ஆதரவு விலையில் இ-கொள்முதல் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 7.38 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,340 கோடி அளிக்கப்பட்டது.

அதே போல், கடந்த 2017ஆம் ஆண்டு காரி பருவகாலத்தில் 16.59 லட்சம் மெட்ரிக் டன் நெல் இ-கொள்முதல் முறையில் கொள்முதல் செய்யப்பட்டு 2.83 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.330 கோடி வழங்கப்பட்டது என சவுகான் கூறினார்.

மத்திய அரசின் விலைக்குறைவை ஈடு செய்யும் திட்டத்தின் கீழ் தானிய வகைகள், மசூர் பருப்பு, கடுகு உள்ளிட்டவை 2017-18 ஆம் ஆண்டில் சேர்க்கப்படும். 2018-19 ஆம் ஆண்டு வெங்காயமும் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இத் திட்டப்படி குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு கீழே சந்தை விலை குறைந்தால் ஆதரவி விலையில் ஏற்படும் குறைவு ஈடு செய்யப்படும் உரிய தொகை அந்த விவசாயி வங்கிக கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்.

மேலும் ரூ.1,200 கோடி செலவில் சம்பல் பள்ளத்தாக்கு பயிரிடும் நிலப்பகுதிகளாக சீரமைக்கப்பட்டு விவசாயிகளே நடத்தும் விவசாயப் பொருட்கள் பதப்படுத்தும் சேவை மையங்கள் ஒவ்வொரு மண்டலத்திலும் அமைக்கப்படும் எனவும் முதல்வர் சவுகான் அறிவித்தார்.